இராணுவத்தினரை அரசியல் தேவைகளுக்கு பயன்படுத்த கூடாது.


“எந்தவொரு அரசியல் கட்சியும் தனது அரசியல் நோக்கங்களை அடைந்துகொள்வதற்கு இராணுவத்தினரைப் பயன்படுத்துவது பண்பாடல்ல” என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

“வயம்ப ரண அபிமன்” இராணுவ நினைவுத் தூபியை, நேற்று (11) திறந்து வைத்து  உரையாற்றும் போதே,  ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

குருணாகலை - தம்புள்ளை வீதி அபிவிருத்தியின் போது தற்காலிகமாக அகற்றப்பட்ட ரணவிரு தூபிக்கு பதிலாக இந்த புதிய ரணவிரு நினைவுத் தூபி நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், வடமேல் மாகாண சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் ரணவிரு சேவா அதிகார சபை ஆகியவற்றின் வழிகாட்டலில் முன்னாள் நினைவுத் தூபி அமையப்பெற்றிருந்த குருணாகலை மாலிகாபிட்டிய விளையாட்டரங்குக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த நினைவுத் தூபி, இலங்கை இராணுவத்தின் பொறியியல் பிரிவினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவுத் தூபி, இராணுவத்தினரின் கீர்த்தியை பாதுகாக்கும் வகையில் முன்னர் அமையப்பெற்றிருந்த நினைவுத் தூபியை பார்க்கிலும் சிறப்பான முறையில் வடமேல் மாகாணத்தில் உயிர்நீத்த அனைத்து இராணுவத்தினரினதும் தகவல்களை உள்ளடக்கிய வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதற்காக 27 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்திப் பணிகளுக்குப் போதுமான இடத்தை பெற்றுக்கொள்வதை அடிப்படையாகக் கொண்டு, இந்த இராணுவ நினைவுத் தூபி தற்காலிகமாக அகற்றப்பட்டிருந்த போதும், அரசாங்கத்தால் இராணுவத்தினர் புறக்கணிக்கப்பட்டு, அவர்களது நினைவுத் தூபிகளும் அகற்றப்படுவதாக அரசியல் சாயம் பூசுவதற்கு சிலர் முயற்சித்தனர்.

மேலும், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவ்விடத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக குருணாகலைக்கு சென்றிருந்த ஜனாதிபதி, வீதி புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததும், மிகச் சிறப்பான முறையில் இராணுவ நினைவுத் தூபியை அவ்விடத்தில் நிர்மாணிப்பதாக வழங்கிய உறுதி மொழியின் அடிப்படையில், இந்த நினைவுத் தூபியை அமைப்பதற்காக 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் திகதி அடிக்கல் நடப்பட்டது.

இராணுவத்தினருக்கு தேசத்தின் கௌரவத்தை வழங்கி, அவர்களுக்கான சிறப்புரிமைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமேயன்றி, ஒருபோதும் அவர்களை குறைத்து மதிப்பிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது என்று அங்கு உரையாற்றிய போது ஜனாதிபதி தெரிவித்தார்.

இராணுவத்தினர் தொடர்பாக அரசாங்கத்தின் மீது சுமத்தப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளும் திட்டமிட்ட வகையில் அரசாங்கத்தை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் வகையில் முன்வைக்கப்படுவதாக தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் சர்வதேச உதவியுடன் இராணுவத்தினரின் கீர்த்தியைப் பாதுகாப்பதற்கு அதிக அளவில் நடவடிக்கை எடுத்திருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அன்று அரசியல் மேடைகளில் தெரிவிக்கப்பட்ட மின்சாரக் கதிரைகளையும் எமது பாதுகாப்புப் படையினருக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்வதற்கு வெளிநாட்டு நீதிபதிகளை கொண்டுவருவதையும் நிறுத்தியது தற்போதைய அரசாங்கம் என்பதை மறந்துவிடக்கூடாது என்று தெரிவித்தார்.

இராணுவத்தில் இருந்த சிலர் வேறு சில நிகழ்வுகள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக கைது செய்யப்பட்டபோதும், அது இராணுவத்தினருக்கு எதிரான செயற்பாடல்ல என்றும் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் போராடிய எந்தவொரு இராணுவத்தினருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்பட இடமளிக்கவில்லை என்றும் அவர்களுக்கு வழங்கக்கூடிய உயரிய கௌரவத்தை வழங்குவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இராணுவத்தினரை அரசியல் தேவைகளுக்கு பயன்படுத்த கூடாது. இராணுவத்தினரை அரசியல் தேவைகளுக்கு  பயன்படுத்த கூடாது. Reviewed by Madawala News on May 12, 2018 Rating: 5