இபலோகம விவகாரம்: இனவாதமாக சித்திரிப்பது ஏன்?

வீடு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால்
மேற்கொள்ளப்பட்டு வரும் குடியிருப்பு வேலைத்திட்டத்தின் கீழ் அநுராதபுர மாவட்டத்தில் புதிதாகக் குடியேற்றத் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இபலோகம செயலாளர் பிரிவில் பூகொல்லாகம, பெலும்கல என்ற மேற்படி கிராமத்தில் தொல்லியல் பெறுமதிமிக்க பகுதி இயந்திரங்கள் மூலம் அழித்து நாசமாக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எனினும் இந்த விவகாரத்துடன் இணைந்து அப் பகுதியின் பிரதேச செயலாளரான முஸ்லிம் பெண்மணிக்கு எதிராக சிங்கள ஊடகங்களில் இனவாத பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை கவலைக்குரியதாகும்.

இந்த விவகாரம் குறித்து மேலும் தெரியவருவதாவது, அநுராதபுரம் மாவட்டத்தில் வரலாற்றுத் தொன்மை வாய்ந்த விஜிதபுர புனித பூமிக்கு அண்மித்த பகுதியிலேயே தொல்லியல் சிறப்புமிக்க சின்னங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தொன்மையான சிதைந்துபோன விகாரைக்கோபுரம், கற்தூண்கள், மலர் இருக்கைகள், கல் கட்டில், சந்திரவட்டக்கல், காவற்கல் உள்ளிட்ட புராதன சின்னங்கள் இந்த நிர்மாணப் பணியின்போது அகற்றப்பட்டுள்ளன. இத்தகைய புராதனப் பொருட்கள் உள்ளடங்கிய சுமார் 15 ஏக்கர் நிலப் பரப்பு டோஸர் இயந்திரத்தினால் சேதத்திற்குள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந் நிலையில் இபலோகம பிரதேச செயலாளர் சஜீதா பானு குறித்த 15 ஏக்கர் காணிப் பகுதியை குடியேற்றத் திட்டத்தை மேற்கொள்வதற்காக வீடமைப்பு அதிகார சபைக்கு வழங்கியுள்ளதாக என்று பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டதற்கமைய புதிய குடியேற்றத் திட்டத்திற்காக அண்மையில் அடிக்கல் நடப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதுவரையில் குறித்த நிலப்பரப்பின் பாதியளவுப் பகுதிகள் கனரக இயந்திரங்களின் துணையுடன் மட்டப்படுத்தி, துப்புரவு செய்யப்பட்டுள்ளன. இப்பகுதியிலேதான் புராதன தொல்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டதாக பிரதேசவாசிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.

துட்டகைமுனு– எல்லாளன் மன்னர்களின் ஆட்சிக் காலத்திலிருந்தே வரலாற்றுப் பிரசித்திபெற்ற இடமாக இப்பகுதி விளங்கியுள்ளதாக கூறுகின்றனர். துட்டகைமுனு, எல்லாளனுடன் போரிட்ட சந்தர்ப்பத்தில் எதிரிகள் தாக்க வருவதை அவதானிப்பதற்காக ‘பெலும்கல’– ‘கண்காணிக்கும் கல்’ என்ற பாதுகாப்பிடம் அமைக்கப்பட்டிருக்கிறது. பின்னர் அதன் நினைவாக அவ்விடத்தில் விகாரையொன்று நிறுவப்பட்டு வழிபாடுகளில் ஈடுபட்ட இடம்தான் இப்பகுதி என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை இபலோகம உதவி பிரதேச செயலாளர் ஜ.ஜீ.ஆர்.ஐ.பண்டார ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், வீடமைப்பு அதிகார சபைக்கு பிரதேச செயலாளர் குறித்த பிரதேசத்தில் 15 ஏக்கர் காணியை வழங்கியமையை  உறுதியளித்தார்.

இது பற்றி பிரதேச செயலாளர் சஜீதா பானு ஊடகங்களுக்கு கருத்து வெ ளியிடுகையில் “தான் வீடமைப்பு அதிகார சபைக்கு குறித்த காணியில் 15 ஏக்கர் அனுமதி வழங்கும் சந்தர்ப்பத்தில் அப்பகுதி தொல்லியல் பகுதியாக இனம் காணப்பட்டிருக்கவில்லை. பின்னர் நிர்மாண வேலைகள், ஆரம்பிக்கப்பட்டபோது தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து தொல்லியல் திணைக்களத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்ததுடன் அவ்விடத்திற்கு நேரில் சென்று உண்மைகளைக் கண்டறிந்தேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் மாவட்ட வீடமைப்பு அதிகார சபையின் பிரதேச முகாமையாளர் திருமதி எஸ்.டீ.கே.விஜேரத்ன ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் குறித்த பகுதி தொல்லியல் இடம் என்பது தனக்குத் தெரியாதென்றும் அவ்விடத்தைத்தான் முன்னர் சென்று பார்வையிடவில்லையென்றும் கூறிய அவர் புராதன சின்னங்கள் அங்கு அழிவுக்குள்ளாகவில்லையென்றும் கூறியுள்ளார். 
இந்த துப்புரவாக்கல் பணியானது புதைபொருள் அகழ்ந்தெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று மக்கள் கூறுவதில் உண்மையில்லை என்றும் ஒரு சில ஊடகங்களே இப்படிப் பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றன என்றும் அவர் விளக்கியுள்ளார். இது விடயமாக தொல்லியல் திணைக்களத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதேவேளை தொல்லியல் பணிப்பாளர் நாயகம் பி.பீ.மண்டாவல கூறுகையில்  “பிரதேச செயலாளர், கிராமசேவை அதிகாரி, வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக தொல்பொருள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.
ஞானசார தேரர் விஜயம்
பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தலைமையில்  பொதுபலசேனா அமைப்பின் குழுவினர் கடந்த திங்கட் கிழமை இபலோகம பிரதேச செயலாளர் பிரிவில் பெலும்கல தொல்பொருள் பிரதேசத்திற்கு விஜயம் செய்து டோசர் பண்ணப்பட்டுள்ள பகுதியைப் பார்வையிட்டுள்ளனர். இதன்போது ஞானசாரதேரர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்,  இபலோகம பிரதேச செயலாளர் பெரும் தவறு செய்துள்ளார். பொறுப்பான பதவியில் இருக்கும் அவர் காணியொன்றினை ஒதுக்கிக்கொடுக்கும்போது அது தொடர்பில் ஆராய்ந்து பார்த்திருக்க வேண்டும். பொறுப்பான பதவியில் இருப்பவர் சிங்களவரா? தமிழரா? முஸ்லிமா? என்பதில் எமக்குப் பிரச்சினையில்லை. அவர் தனது கடமையை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

'' சுமார் 20 வருடங்களுக்கு முன்பு இப்பிரதேசம் அபிவிருத்தி செய்யப்படுவதற்காக முயற்சிக்கப்பட்டபோது இங்கு தொல்பொருட்கள் இருப்பதாகவும் பாதுகாக்கப்பட்ட பிரதேசம் எனவும் தொல்பொருள் திணைக்களம் தெரிவித்து இப்பிரதேசத்தை பாதுகாத்துள்ளது. இதனால் அன்று அந்த அபிவிருத்தித் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

நாம் கவலைப்படுகிறோம். தொல்பொருட்கள் சிங்களவர்களுக்கு மாத்திரம் சொந்தமானதல்ல. இந்நாட்டில் பிறந்த அனைவருக்கும் சொந்தமானதாகும். இவ்வாறான தேசிய கொள்ளைகள் இடம் பெறுவதை தொல்பொருள் திணைக்களம் நிறுத்தவேண்டும்.

தொல்பொருள் சட்டம் இந்நாட்டில் அமுல்படுத்தப்படாவிட்டால் சட்டத்தைக் கையிலெடுத்தாவது தொல்பொருட்களை நாம் பாதுகாப்போம். நாட்டில் உள்ள தொல்பொருள் சட்டத்தை அமுல்படுத்தாது கறைபடிய வைப்பதால் எந்த பலனுமில்லை. அதனால் சட்டத்தை அமுல்படுத்தி தொல்பொருள் அழிவுகளை, புதைபொருள் கொள்ளைகளைத் தடுக்குமாறு அரசாங்கத்தை வேண்டிக்கொள்கிறோம்'' என்றார்.

பிரதேச செயலாளருக்கு இடமாற்றம்.
இதற்கிடையில் இந்த சர்ச்சை காரணமாக இபலோகம பிரதேச செயலாளர் சாஜிதா பானு அறுராதபுரம் அரசாங்க அதிபர் அலுவலகத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பான விசாரணைகள் முடிவுறும் வரை அவர் தற்காலிகமாக இவ்வாறு இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் தவறிழைத்திருப்பதாக தெரிய வந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இனவாத கண்ணோட்டம் வேண்டாம்
இந்த விடயத்தில் முஸ்லிம் பிரதேச செயலாளர் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இதனை இனவாத கண்ணோட்டத்தில் சித்திரிக்க சிங்கள ஊடகங்களும் சில பௌத்த அமைப்புக்களும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தான் இதற்கு அனுமதி வழங்கும் போது இது தொல்பொருள் காணியாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கவில்லை என்று பிரதேச செயலாளர் சாஜிதா பானு மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். 

இது விடயத்தில் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டியது தொல் பொருள் திணைக்களமேயாகும்.
இந் நிலையில் இதனை திசை திருப்பி முஸ்லிம் பெண்ணான பிரதேச செயலாளரை பழிவாங்கவும் அவர் சார்ந்த இனத்தையும் மதத்தையும் தவறாக சித்திரிக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவையாகும்.
-Vidivelli
இபலோகம விவகாரம்: இனவாதமாக சித்திரிப்பது ஏன்? இபலோகம  விவகாரம்: இனவாதமாக சித்திரிப்பது ஏன்? Reviewed by Euro Fashions on May 11, 2018 Rating: 5