இஸ்ரேலின் பல தசாப்த கால கனவு நிறைவேறியது.


ஈரானுடனான அணுத் திட்டம் தொடர்பான 2015ம் ஆண்டு உடன்படிக்கையில் இருந்து
விலகிய அமெரிக்க ஜனாதிபதி அந்த நாட்டுடன் யுத்தத்துக்கான கதவுகளைத் திறந்து விட்டுள்ளார்.
-லத்தீப் பாரூக்-

பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளிடம் இருந்து மீண்டும் மீண்டும் விடுக்கப்பட்ட வேண்டுகோள்களைப் புறக்கணித்துவிட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 2015ம் ஆண்டில் ஏனைய உலக வல்லரசுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பனவற்றுடன் இணைந்து ஈரானுடன் செய்து கொண்ட ஈரானின் அணு சக்தி திட்டம் தொடர்பான உடன்படிக்கையில் இருந்து ஒரு தலைப்பட்சமாக விலகிக் கொண்டுள்ளார்.


அமெரிக்காவில் ஜனாதிபதிகளையும் அரசுகளையும் உருவாக்கும் மற்றும் இல்லாமல் ஆக்கும் வல்லமையைக் கொண்டுள்ள இஸ்ரேலும் அதன் யூத ஆதரவு சக்திகளும் நீண்ட காலமாக எதிர்ப்பார்த்திருந்த விடயம் இதுதான். சுவிஷேச யூத ஆதரவு கோடீஸ்வரராக இருந்து அமெரிக்காவின் ஜனாதிபதியாக மாறிய விடாப்படி குணம் கொண்ட டொனால்ட் டிரம்ப் தனது யூத எஜமானர்களின் ஆசையை நிறைவேற்றி உள்ளார். 'இந்த உடன்படிக்கையானது மிகவும் பயங்கரமானது.

ஒரு தலைப்பட்சமானது, ஒரு போதும் இவ்வாறான ஒரு உடன்படிக்கையை செய்திருக்கவே கூடாது' என்று அமெரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ளார். அது மட்டுமன்றி ஈரானுக்கு எதிராக அதி உயர் மட்ட பொருளாதாரத் தடைகள் மீண்டும் அமுலுக்கு கொண்டு வரப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.


சிஎன்என் விமர்சகர் ஒருவர் இதுபற்றி கருத்து வெளியிடுகையில் இந்த உடன்படிக்கையில் இருந்து விலகிய கையோடு ஈரானுக்கு எதிரான யுத்தப் பிரகடனத்தையும் டிரம்ப் செய்துள்ளார். இனி எந்த நேரத்திலும் அந்த யுத்தம் தொடங்கப்படலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.


தனது காலத்தில் செய்து கொள்ளப்பட்ட இந்த உடன்படிக்கையில் இருந்து தற்போதைய ஜனாதிபதி விலகி உள்ளமை பற்றி முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கருத்து தெரிவிக்கையில் 'அமெரிக்க ஜனாதிபதி மிவும் பாரதூரமான தவறைச் செய்துள்ளார்.

அமெரிக்காவின் உலகளாவிய நன்மதிப்பை இது அழித்துவிடும். இந்த முடிவானது தவறான வழிகாட்டலின் கீழ் எடுக்கப்படடுள்ளது. அதிலும் குறிப்பாக ஈரான் இந்த உடன்படிக்கையோடு இன்னமும் இணைந்திருக்கும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளமை மிகவும் பாரதூரமான தவறாகும். இந்த உடன்படிக்கை இல்லாத ஒரு நிலையில் அணு ஆயுத ஈரான் அல்லது மத்திய கிழக்கில் மற்றொரு யுத்தம் என்பனவற்றுக்கு இடையிலான குறைந்த பட்ச தெரிவு நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார். இந்த உடன்படிக்கையானது வட கொரியா போன்ற ஒரு நாட்டை கூட இராஜதந்திர ரீதியாகக் கையாளக் கூடிய ஒரு முன்மாதிரியாக அமைந்திருந்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


டிரம்ப் தற்போது எடுத்துள்ள முடிவின் படி ஈரானிய அரசு ஒன்றில் அமெரிக்காவைப் பின்பற்றி இதில் இருந்து வெளியேற வேண்டும் அல்லது உடன்படிக்கையின் எஞ்சிய விடயங்களைக் கொண்டு தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் தான் என்ன செய்யப் போகின்றது என்பது பற்றி ஈரான் முரண்பாடான அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. இருப்பினும் இந்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறும் டிரம்ப்பின் நடவடிக்கைகள் எவ்வாறு அமையவுள்ளன என்பதிலேயே ஈரானின் சரியான பதிலும் தங்கி
இருக்கும்.


அமெரிக்க ஜனாதிபதியின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரி ஒருவர் டிரம்ப்பின் இந்த முடிவு காரணமாக 2015க்கு முன்னர் ஈரான் மீது அமெரிக்கா விதித்திருந்த அணைத்து தடைகளும் மீண்டும் அமுலுக்கு வரும் எனத் தெரிவித்துள்ளார். இவற்றுள் சிலவற்றுக்கு உடனடியான காலக்கெடுவும் விதிக்கப்படலாம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இந்த உடன்படிக்கையை அமெரிக்கா தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் எனக் கருதியவர்கள் டிரம்ப் ஒரு சமாதானமான வழிமுறையைக் கையாள்வார் என்றே எதிர்ப்பார்த்தனர். ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் டிரம்ப்பை இந்த விடயத்தில் இணங்கச் செய்ய பெரும் முயற்சிகளை மேற்கொண்டும் அவை எதுவும் பலன் அளிக்க வில்லை. ஈரான் மீதான தடைகள் 2015ல் நீக்கப்பட்டதை அடுத்து அந்த நாட்டுடன் மீண்டும் வர்த்தக உறவுகளை மேற்கொண்ட நாடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் தமது நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள குறைந்த பட்சம் மூன்று முதல் ஆறு மாத கால அவகாசம் வழங்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அது பற்றி இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லை.


மத்திய கிழக்கு பிராந்தியத்தை ஒரு கொலைகளமாக மாற்றி அங்கு தனது அமெரிக்க பங்காளியுடன் மனித குலத்துக்கு எதிரான பல குற்றச் செய்ல்களையும், யுத்தக் குற்றங்களையும் அரங்கேற்றி வரும் இஸ்ரேல் முஸ்லிம்களுக்கு மட்டும் அன்றி இன்று முழு உலகுக்குமே அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இஸ்ரேலின் இந்தச் செயற்பாடுகளால் உலகம் ஒரு அழிவை நோக்கிச் செல்கின்றது. அதில் இருந்து இனி ஒரு போதும் மீண்டு வர முடியாது என பலர் ஏற்கனவே எச்சரித்துள்ளனர்.


மத்திய கிழக்குப் பிராந்தியத்தை சீர்குலைப்பதற்காக அங்கு செயற்கையாக ஸ்தாபிக்கப்பட்ட இஸ்ரேல் தற்போது ஈரானின் அணு வளங்களை அழித்தொழிக்க வேண்டும் என்ற போர்வையில் முழு ஈரானையும் அழிப்பதற்கான நாசகாரத் திட்டங்களை வகுத்து வருகின்றது. தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அணு வசதிகளை மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் எந்தவொரு நாடும் வைத்திருக்கக் கூடாது என்பதே இஸ்ரேலின் திட்டமாகும்.


இற்போது இந்தப் பிராந்தியத்தில் அணுசக்தி வளம் கொண்ட ஒரே நாடு இஸ்ரேல் ஆகும். 2016 செப்டம்பரில் அன்றைய அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் கொலின் பவல் இஸ்ரேலிடம் 200க்கும் அதிகமான அணு ஆயுதங்கள் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். ஈரான் தன்வசம் ஒரு அணு குண்டை கொண்டிருந்தாலும் கூட அதை அந்த நாடு பாவிக்க முடியாது. காரணம் ஈரானில் இருப்பவர்களுக்குத் தெரியும் இஸ்ரேலிடம் 200 அணு ஆயுதங்கள் உள்ளன அவற்றை அவர்கள் டெஹ்ரானுக்கு எதிராகப் பாவிப்பார்கள். அதேபோல் எங்களிடம் ஆயிரக்கணக்கில் அணு ஆயுதங்கள் உள்ளன என்று கொலின் பவல் மேலும் கூறினார்.


சில மதிப்பீடுகளின் படி இஸ்ரேலிடம் 400 க்கும் அதிகமான அணு ஆயுதங்கள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. ஆனால் தன்னிடம் அணு ஆயுதம் இருப்பதாக ஒருபோதும் இஸ்ரேல் பகிரங்கமாக ஒப்புக் கொண்;டதில்லை. இருந்தாலும் இது எல்லோரும் அறிந்து வைத்துள்ள ஒரு பகிரங்க விடயமே. அது மட்டுமன்றி அணு ஆயத பாவனையை தவிர்க்கும் எந்த ஒரு சர்வதேச உடன்பாட்டிலும் இஸ்ரேல் இதுவரை ஒப்பமிட்டதும் இல்லை.


மத்திய கிழக்கில் உள்ள வளம் மிக்க பெரிய நாடுகளை அழிக்க வேண்டும் என்ற தனது திட்டத்தில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் ஆதரவோடு செயற்பட்டு வரும் இஸ்ரேல் இதுவரை ஈராக், லிபியா, சிரியா ஆகிய நாடுகளைப் பதம் பார்த்துள்ளது. சவூதி அரேபியா, எகிப்து உற்பட ஏனைய வளைகுடா நாடுகளில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆதரவோடு நிலைகொண்டுள்ள வெற்கம் கெட்ட கொடுங்கோல் ஆட்சியாளர்களின் மூலம் இஸ்ரேல் நிலைமைகளைக் கையாண்டு வருகின்றது. இந்த நாடுகளின் ஆட்சியாளர்கள் தமது இஸ்ரேல் மற்றும் மேலைத்தேச பங்காளிகளுடன் சிறந்த முறையில் ஒத்துழைத்து முஸ்லிம்களுக்கும் இஸ்லாமிய உலகுக்கும் எதிரான திட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர்.


இன்று இந்தப் பிராந்தியத்தில் இஸ்ரேலுக்கு நேரடி அச்சுறுத்தலாக இருக்கும் ஒரே நாடு ஈரான் மட்டுமே. எனவே இஸ்ரேலின் அழிவுத் திட்டத்தில், பட்டியலில் இருக்கும் அடுத்த நாடு ஈரான் என்பதில் எவ்வித சந்தேகமும் கொள்ளத் தேவை இல்லை. ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்குத் தேவையான ஒரு வாய்ப்பை ஏற்கனவே இஸ்ரேல் உருவாக்கி வருகின்றது. பிராந்தியத்தில் அடுத்து அழிக்கப்படப் போகும் நாடாக ஈரானை மாற்றுவதற்கான ஏற்பாடுகளில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது. இதற்கு வாய்ப்பாக இஸ்ரேல் சிரியா பிரச்சினையில் மூக்கை நுழைத்து சிரியாவின் வடபகுதியில் தனது படைகளைக் களம் இறக்கி உள்ளது.


கடந்த வார முற்பகுதியில் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெத்தன்யாஹு அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அங்கு அவர் ஈரானுக்கு எதிரான தனது நடவடிக்கைகளுக்கான ஆதரவைத் திரட்டி உள்ளார்.
ஈரான் தனது அணு ஆயுத திட்டம் தொடர்பாக மேற்குலக நாடுகளுக்கு பொய் கூறி உள்ளது என்பதை நிரூபிப்பதற்கான பல ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாக நெத்தன்யாஹு அங்கு தெரிவித்துள்ளார். இது தொடர்பான கணினித் திரை விளக்கம் ஒன்றை அவர் அங்கு நடத்தி உள்ளார். ஆனால் தன்வசம் இருந்த பல கோவைகளின் முகப்பையும் சில சிடிக்களையும்  மட்டும் தான் அவர் அங்கு காட்டி உள்ளார்.


அவை எல்லாம் ஈரான் தனது அணு ஆயுத திட்டம் தொடர்பாகக் கூறியுள்ள பொய்களுக்கான ஆதாரங்கள் என்று ஒரு நாடகத்தை அங்கு அரங்கேற்றி உள்ளார். ஈரானின் அணு சக்தி வளங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சில இடங்களின் படங்கள் மற்றும் காட்சிகள் என்பனவற்றையும் அவர் அங்கு காட்டி உள்ளார். ஈரான் தொடர்ந்தும் அணு ஆயுத ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது என்பதையும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

பத்தி எழுத்தாளர் ட்ரிடா பாரிஸ் 2018 மே மாதம் மூன்றாம் திகதி 'கனசர்வேடிவ்' என்ற இதழுக்கு எழுதியுள்ள கட்டுரையில் ஈரானுடனான யுத்தத்தின் விளிம்புக்கு அமெரிக்காவை இழுத்து வர இஸ்ரேல் பிரதமர் முயற்சி செய்கின்றார் என்று குறிப்பிட்டுள்ளார். ஈரான் உடன்படிக்கையில் இருந்து டிரம்ப் வெளியேறல் என்பது ஈரானுடனான யுத்தத்தை விரைவில் யதார்த்தமாக்குகின்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


நிலைமை மிகவும் மோசம் அடைகின்ற போது யுத்தப் பிரகடனம் செய்யும் அதிகாரத்தை பிரதமருக்கு வழங்கும் வகையில் இஸ்ரேல் பாராளுமன்றம் அண்மையில் ஒரு சட்டமூலத்தை நிறைவேற்றி உள்ளது.
இஸ்ரேல் பிரதமரும் அமெரிக்காவின் புதிய இராஜாங்க செயலாளர் மைக் பெம்பியோவும் அண்மையில் சந்தித்துப் பேசிய பின்னர்தான் இந்தக் குற்றச்சாட்டுக்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.


எவ்வாறேனும் உலக அணு ஆயுத கண்டகானிப்பு மையமான சர்வதேச அணுசக்தி முகவராண்மை (ஐயுநுயு) இஸ்ரேலின் கருத்துக்களை திட்டவட்டமாக மறுத்துள்ளது. '2009ம் ஆண்டுக்குப் பின் அணு ஆயுதம் ஒன்றை வெடிக்கச் செய்யும் வகையிலான எந்தவிதமான நம்பத் தகுந்த நடவடிக்கைகளும் ஈரான் தரப்பில் இருந்து மேற்கொள்ளப்பட்டமைக்கான எவ்வித நம்பத்தகுந்த அறிகுறிகளும் இல்லை' என்று ஐயுநுயு அறிவித்துள்ளது.


நியாயமான சிந்தனை உள்ள இஸ்ரேல் அரசியல்வாதியான கிளாட் அட்ஸ்மன் தெரவித்துள்ள கருத்தில் நெத்தன்யாஹு கோத்திரவாத சிந்தனை கொண்டவர்களுக்கு உளவியல் ரீதியாக ஒரு கண்கவர் கருத்தை முன்வைத்துள்ளார். மிகப் பெரிய அளவில் குவிக்கப்பட்ட பாரிய அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள், அணுஆயுதங்கள், இலட்சக்கணக்கான மக்களைக் கொல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் போன்ற ஆயுதக் குவியலின் நடுவே அமர்ந்து கொண்டு ஒரு கோமாளி தனது பிராந்தியத்தில் உள்ள இன்னொரு நாட்டின் மீது குற்றம் சாட்டிக் கொண்டு முதலைக் கண்ணீர் வடித்துக் கொண்டுள்ளார்.

 ஆனால் அந்த தேசமோ தனக்கு எதிராக இழைக்கப்படவுள்ள குற்றங்களில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இவ்வாறான ஆயுதங்களைப் பெற்றுக் கொள்ளும் முயற்சியில் தான் ஈடுபட்டுள்ளது. தத்தித் தத்தி நடக்கும் ஒரு குழந்தை இன்னொரு குழந்தையின் கீழ் ஆடையை சுட்டிக் காட்டுவது போலவே நெத்தன்யாஹுவின் செயல் அமைந்துள்ளது. ஆனால் சுட்டிக்காட்டும் இந்தக் குழந்தையின் கீழ் ஆடையின் பல இடங்களில் இருந்தும் அசிங்கம் வழிந்து கொண்டிருப்பதை அந்தப் பிள்ளை உணராமல் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.


மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் இஸ்ரேலிடம் மட்டும் தான் அணு ஆயுத வல்லமை உள்ளது என பரவலாக நம்பப்படுகின்றது. தன்னுடைய அணு ஆயுத அல்லது பாரிய அழிவை ஏற்படுத்தும் ஆயுத வளங்களுக்குள் இஸ்ரேல் இதுவரை எந்தவொரு சர்வதேச அமைப்பையும் அனுமதித்தது கிடையாது.
சர்வதேச சமூகத்துக்கு இஸ்ரேல் அரங்கேற்றி வரும் அர்த்தமற்ற நாடகக் காட்சிகள் வெறுப்பையே ஏற்படுத்தி உள்ளன. சிரேஷ்ட ஐரோப்பிய ராஜதந்திரி ஒருவர் இதுபற்றி ராய்ட்டர் செய்திச் சேவைக்கு அளித்துள்ள தகவலில் 'எங்களுக்கு இதுபற்றி எல்லாம் தெரியும். இதில் முக்கியமாக அவதானிக்கப்பட வேண்டிய விடயம் எதுவெனில் 2015 உடன்படிக்கையை ஈரான் மீறியுள்ளதாக நெத்தன்யாஹு இதுவரை எந்த உறுதியான ஆதாரங்களையும் முன்வைக்கவில்லை. 1999 க்கும் 2003க்கும் இடைப்பட்ட காலத்தில் ஈரான் நடத்தியதாகக் கூறப்படும் அணு ஆயுத ஆராய்ச்சிகள் தொடர்பான தகவல்களை அவர்கள் எங்காவது பாதுகாத்து வைத்திருந்தால் அதை ஒரு மூலோபாய உணர்வுபூர்வமான சொத்தாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் தற்போது இல்லை. அவ்வாறான தகவல்களை சேகரிப்பவர்களை புத்திசாலிகள் அல்லது விவேகமானவர்கள் என்றும் எடுத்துக் கொள்ள முடியாது' என்று தெரிவித்துள்ளார்.


2015 உடன்படிக்கைக்குப் பின்னரும் ஈரான் அணுத் திட்டத்தை தொடர்ந்துள்ளது என்று குற்றம் சாட்டும் வகையிலான ஆவணங்களைத் திரட்டியுள்ளதாகத் தான் இஸ்ரேல் கூறியுள்ளது. இது ஈரானின் எஞ்சியுள்ள அணு வளங்களைத் தாக்கி அழிப்பதற்கான ஒரு போலிக் குற்றச்சாட்டே தவிர வேறு உண்மைகள் எதுவும் அதில் இல்லை.


உலக வல்லரசு சக்திகளோடு ஈரான் செய்து கொண்ட இந்த 2015ம் ஆண்டின் புரிந்துணர்வு உடன்படிக்கையை மாற்றி அமைக்க வேண்டும் என அமெரிக்கா ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தது. இது தொடர்பாக ஒரு காலக்கெடுவை விதிக்குமாறும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது ஐரோப்பிய சகாக்களைக் கேட்டுள்ளார் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் முன்னர் அறிவித்திருந்தார்.
இஸ்ரேலின் பல தசாப்த கால கனவு நிறைவேறியது. இஸ்ரேலின் பல தசாப்த கால கனவு நிறைவேறியது. Reviewed by Madawala News on May 12, 2018 Rating: 5