ஜம்மியத்தில் உலமாவின் தோல்வி.


– ஸலாஹுதீன் –
இலங்கை முஸ்லிம்களின் தலைமைத்துவமாக தம்மை வரித்துக் கொண்டு
90 வருட காலம் கோலோச்சிய அகில

இலங்கை ஜம்இய்யதுல் உலமா என்றொரு சபை இனியும் தேவைதானா அல்லது இதனை முஸ்லிம்களின் தலைமையாக தொடர்ந்தும் ஏற்றுக் கொள்வதா என்ற கேள்விக்கு  சமூகம் விரைவில் விடைகண்டு விடும் எனத் தெரிகிறது

நாட்டில் ஆங்காங்கே நடத்தப்பட்டு வரும் மன்றங்களிலும் சபைகளிலும் தற்போது புதியதொரு தலைமை உருவாக்குவது தொடர்பான விடயமே பேசுபொருளாக மாறியிருக்கின்றது

முஸ்லிம் சமூகத்துக்கான தலைமை ஒன்று இல்லை என்கின்ற உண்மையை நடந்து முடிகின்ற ஒவ்வொரு சம்பவங்களும் உணர்த்திச் செல்கின்றன. இது தான் தனக்கான ஒரு தலைமையைத் தேடும் படலத்தை சமூகத்தில் தூண்டிவிட்டிருக்கிறது.

அப்படியானால் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைமைச் சபை இல்லையா என்ற கேள்வி எழும்புவதற்கு வாய்ப்பில்லை என்கின்ற அளவுக்கு ஜம்இய்யதுல் உலமா மீதான நம்பிக்கையீனம் தான் சமூகத்தில் வளர்ந்திருக்கிறது

94 வருடங்களாக  ஜம்இய்யதுல் உலமா இலங்கையில் இயங்கி வருகிறது என்பதைத் தவிர வேறெதனை அது சாதித்திருக்கின்றது என்ற கேள்விக்கு ஜம்இய்யதுல் உலமாவிடம் எண்ணிலடங்காத பதில்கள் இருக்கலாம்

ஆனாலும் தலைமையாக இருந்து சமூகத்துக்குச் செய்ய வேண்டியவை என சமூகம் பட்டியல் போட்டு வைத்திருக்கின்ற விடயங்களில் ஜம்இய்யதுல் உலமா பதிலளிக்கும் நிலையில் எதுவும் செய்யப்படவில்லை என்பதை மிம்பர் போட்டுத் தான் சொல்ல வேண்டியதில்லை.

உலமாக்களின் சபை என்ற வகையில் மார்க்க விவகாரங்களில் அது முஸ்லிம் சமூகத்துக்குச் செய்திருக்க வேண்டிய விடயங்கள் ஏராளம் இருக்கின்றன. உலமா சபையின் அங்கத்தவர்களான உலமாக்கள் எங்கிருந்து வருகிறார்கள்

இலங்கையில் முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட சுமார் 235 மத்ரஸாக்களில் இருந்து தான் உலமாக்கள் இங்கு வந்து சேருகிறார்கள்

இவர்களை உலமாக்கள் என அடையாளம் காண்பதற்கு குறித்த மத்ரஸாக்கள் வழங்கும் ஷஹாதாக்களை ஆவணமாகப் பயன்படுத்துகிறார்கள்

ஆனால் குறித்த மத்ரஸாக்களை அடையாளம் காண்பதற்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா என்ன ஆவணங்களை வேண்டியிருக்கிறது

உலமாக்களை உருவாக்குகின்ற மத்ரஸாக்கள் உலமா சபையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டுமென்ற எந்தக் கட்டாயமுமில்லை

உலமா சபையின் நெறிமுறைகளுக்கேற்ப பட்டம் வழங்கியிருக்க வேண்டும் என்ற எந்தத் தேவைப்பாடும் இல்லை. குறித்த விடயப்பரப்பில் கற்கையைப் பூர்த்தி செய்தவர்கள் தான் உலமாக்களாக இருக்க முடியும் என்ற கொள்கை வகுப்புக்களும் கூட இல்லை.

உலமாக்கள் உருவாகி வரக் கூடிய மத்ரஸாக்களை ஒருங்கிணைப்பதற்கான எந்தப் பொறிமுறையும் 90 வருடங்களாக உலமா சபையிடம் இல்லை என்பதோடு, மத்ரஸாக்களுக்கான பொதுவான பாடத்திட்டம் ஒன்றையாவது இதுவரை காலத்துக்கும் ஜம்இய்யதுல் உலமா உருவாக்கவும் இல்லை. இலங்கையில் மத்ரஸாக்களை பதிவு செய்யும் வேலையை அரசாங்கமே செய்கிறது

முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்திலேயே மத்ரஸாக்கள் பதிவு செய்யப்படுகின்றன. இவர்களாவது ஒரு பொதுவான பாடத்திட்டத்தை உருவாக்கினார்களா என்று கேட்டால், பொதுவான பாடத்திட்டம் ஒன்றின் கீழ் மத்ரஸாக்களை ஒருங்கிணைப்பதற்கான முயற்சி நடந்திருக்கிறது, ஆனால் இறுதித் தறுவாயில் ஜம்இய்யதுல் உலமாவின் தலையீட்டால் அந்த முயற்சி கைவிடப்பட்டிருக்கிறது என்று தான் தெரியவருகிறது

இந்த வகையில் தமது சபையில் அங்கத்தவர்களாக இருக்க வேண்டிய உலமாக்களை உருவாக்குகின்ற மத்ரஸாக்கள் விடயத்திலேயே ஜம்இய்யதுல் உலமா தோல்வியடைந்திருக்கிறது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் உத்தரவுகளை செயற்படுத்துகின்ற மையங்களாகவும் உலமாக்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் நிலையங்களாகவும் பள்ளிவாசல்கள் தொழிற்படுகின்றன

இலங்கையில் இருக்கும் 2500 க்கு மேற்பட்ட பள்ளிவாசல்களில் பெரும்பாலானவை எந்த ஒருங்கிணைப்புகளுக்கும் கீழ் வராமல் தன்னிச்சையாகவே செயற்படுகின்றன.

இந்தப் பள்ளிவாசல்கள் எப்படி இயங்க வேண்டும், என்னென்ன பணிகளைச் செய்ய வேண்டும் என்றெல்லாம் வகுத்துக் கொடுக்கின்ற பொறுப்பு ஜம்இய்யதுல் உலமாவைத் தவிர வேறு யாருக்கும் இல்லை

ஆனால் இந்தத் 90 வருட கால ஜம்இய்யதுல் உலமாவின் வரலாற்றில் இன்றுவரை இது நடைபெறவில்லை. அனைத்துப் பள்ளிவாசல்களையும் ஒரு வலையமைப்பின் கீழ் தொழிற்படச் செய்கின்ற பணியிலும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தோல்வியடைந்திருக்கிறது.

1924 இல் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தோற்றம் பெறும் போது காதியானிகளை எதிர்கொள்வதே அவர்களின் பிரதான சவாலாக இருந்தது. இந்தச் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டமை அப்போதைய ஜம்இய்யதுல் உலமாவின் சாதனையாகவே கருதப்பட வேண்டும்

அதற்குப் பின்னரான 90 வருட காலப்பிரிவில் இலங்கை முஸ்லிம் சமூகத்துக்குள்ளாலும் வெளியாலும் பல்வேறு பிரிவுகளும் தோற்றம் பெற்றிருக்கின்றன. சமூகத்துக்குள்ளால் தோற்றம் பெற்றவற்றில் பல்வேறு சிந்தனைப் பிரிவுகளுக்கும் உரிய அமைப்புக்களும் ஜமாஅத்துக்களும் உருவாகியுள்ளன.

ஜம்இய்யதுல் உலமா இஸ்லாம் பற்றி வைத்துள்ள கொள்கைகளுக்கு மாற்றமான பல சிந்தனைகள் சமூகத்துக்குள்ளால் இந்த அமைப்புக்களாலும் ஜமாஅத்களாலும் இற்றைவரை பரவியிருக்கின்றன

இவற்றில் சில நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய நவீன சிந்தனைகளாகவும் இன்னும் சில சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய சிந்தனைகளாகவும் இன்னும் சில வழிபிறழ்ந்த கொள்கைகளாகவும் உள்ளன

இவற்றுக்குச் சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுப்பதோ, அல்லது நிராகரிப்பதோ, அல்லது இந்தச் சிந்தனைப் பிரிவுகள் முன்வைக்கின்ற விடயங்கள் தொடர்பில் சரியான தீர்வை முன்வைப்பதோ உலமாக்களின் சபையாகிய ஜம்மியதுல் உலமாவின் பொறுப்பின் கீழேயே வருகிறது. ஆனால் இன்றுவரை இந்த விடயங்களில் சமூகம் குழம்பிப் போய் அது சமூகத்தின் இருப்பையே நாட்டில் கேள்விக்குறியாக்கும் அளவுக்கு வந்த பின்னரும் இவை தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டை எடுத்து சமூகத்துக்கு வழிகாட்டுவதில் உலமாக்களின் தலைமைத்துவ சபை என்ற வகையில் ஜம்இய்யதுல் உலமா தோற்றுப் போயிருக்கிறது.


 மத்ரஸாக்கள், பள்ளிவாசல்கள், ஜமாஅத்துக்கள் அனைத்துமே உலமாக்களின் சபையான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நேரடி வழிகாட்டலில் இயங்க வேண்டியவைகளாக இருந்தும் இந்த முக்கியமான பணியை இன்றுவரை ஜம்இய்யதுல் உலமா செய்யவில்லை

சமூகத்தில் இன்றுவரை நிலவுகின்ற பிரச்சினைகளுக்கும் பிளவுகளுக்கும் இந்த மூன்று பகுதிகளும் தான் காரணமாக இருக்கின்றன. ஜம்இய்யதுல் உலமா இந்த விடயங்களில் தலையிட்டு பிரச்சினைகளைத் தீர்த்து வைக்காமைதான் இன்று முஸ்லிம் சமூகத்துக்குள்ளே நடக்கும் வெட்டுக் குத்துக்களுக்கும் காட்டிக் கொடுப்புக்களுக்கும் காரணமாக அமைந்திருக்கின்றன

மொத்தமாகச் சொல்லப் போனால், சமூகத்தின் இன்றைய பின்னடைவுக்கு ஜம்இய்யதுல் உலமாவால் மட்டுமே செய்யப்பட முடியுமான விவகாரங்களில் ஜம்மியதுல் உலமா தனது பணியை முழுமையாகச் செய்யாதமை தான் காரணமாகும்.

நகைப்புக்குரிய விடயம் என்னவென்றால், உலமா சபையால் மட்டுமே செய்ய முடியுமான பணிகளை விட்டு, அது விளம்பரம் தேடும் களச் செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதாகும். இதனால் களத்தில் எந்த சிவில் அமைப்புக்களும் தோன்ற விடாமல் ஜம்இய்யதுல் உலமா கவனமாக காய் நகர்த்தியிருக்கிறது

இதனை ஜம்இய்யதுல் உலமா தனது வெற்றியாக நினைக்கலாம். ஆனால் இது ஒட்டு மொத்த சமூகத்தினதும் தோல்வியாகும். முஸ்லிம் அரசியல்வாதிகள் சோரம் போயுள்ள நிலையில், காத்திரமாகச் செயற்பட வேண்டிய எந்த சிவில் அமைப்புக்களும் சமகாலத்தில் களத்தில் இல்லை.

யாராவது சகவாழ்வு தொடர்பில் செயற்பட்டால் அதனை விழுங்கி விடுவது, யாராவது வெள்ள நிவாரணம் என்று வந்தால் அதிலும் தலையிடுவது என எல்லாவற்றையும் தலையில் போட்டுக் கொண்டதால் களத்தில் இன்று வரை பலமானதொரு சிவில் அமைப்பு உருவாக முடியவில்லை

இன்று பலமானதொரு சிவில் நிறுவனத்தின் தேவை வெகுவாக உணரப்பட்ட போதும், அப்படியொன்றைக் காணமுடியாமல் செய்துவிட்ட தவறு ஜம்இய்யதுல் உலமாவையே சாரும். இதனுடைய பயனைத் தான் சண்முகா கல்லூரி அபாயா விவகாரத்தில் சமூகம் சந்தித்தது

முஸ்லிம்களின் உடைக் கலாச்சாரத்துக்கு எதிர்ப்பு வந்த போது இந்த விவகாரத்தில் தலையிட்டிருக்க வேண்டிய ஜம்இய்யதுல் உலமா, இது நிவாரணப் பணி அல்ல, அதனால் எங்களுக்குச் சம்பந்தமில்லை என்பது போல பேசாமல் இருந்து விட்டது.

இதுபோன்ற பலவிடயங்கள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவை தலைமைச் சபையாக ஏற்றுக் கொள்வதில் சமூகத்தின் மத்தியில் நம்பிக்கையீனங்களையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி இருக்கின்றன

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா என்ற பாரிய சக்தியின் பின்னால் சமூகம் ஒன்றுதிரள்வதற்கு எப்போதும் தயாராகவே இருந்தது. ஆனாலும் தனது பணியில் அது விடுகின்ற தவறுகளாலும், தலைமைக்கு இருக்கக் கூடாத விடாப்பிடியான பிடிவாதங்களாலும் மக்கள் அந்த சபையினை விட்டுத் தூரமாகத் தொடங்கியுள்ளனர்

இனி புதியதொரு தலைமைத்துவ சபையொன்று கதையாடல்களில் சமூகம் ஈடுபடவும் தொடங்கியிருக்கிறது. இருக்கின்ற தலைமைகளுக்கு மேலதிகமாக இன்னுமொரு சபையைக் கொண்டு வருதலில் சமூகத்தில் இணக்கப்பாடான கருத்துக்கள் இல்லாவிட்டாலும், வேறுவழியில்லை என்ற நிலைமையில் சமூகம் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவது தெரிகிறது.

இந்தச் சந்தர்ப்பத்தை இஸ்லாத்துக்கு விரோதமான வழிகெட்ட கொள்கைகளும் பயன்படுத்திக் கொள்ள முடியும். அப்படி நடக்குமிடத்து அந்தத் தலைமையை நோக்கி முஸ்லிம் சமூகத்தின் தலைமைகளில் அதிருப்தி கொண்டவர்கள் சாயவும் முடியும்

அப்படி ஒரு அபாயம் நடக்குமானால் அதற்குரிய முழுப் பொறுப்பையும் தற்போதுள்ள ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையும் இதன் நிர்வாக உறுப்பினர்களுமே பொறுப்பேற்க வேண்டும்.

மூலம்  -மீள்பார்வை - ( 19 /5/2018)
ஜம்மியத்தில் உலமாவின் தோல்வி. ஜம்மியத்தில் உலமாவின் தோல்வி. Reviewed by Euro Fashions on May 19, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.