கிந்தோட்டை இனக்கலவரத்தின் பின்னர் உருவாக்கபட்ட GDF பற்றி ஒரு அறிமுகம்.


கடந்த 2017 நவம்பர் மாதம் கிந்தோட்டையில் இடம் பெற்ற இனக்கலவரத்தின் பின்னர், அனர்த்தம்
தொடர்பில் பல்வேறு அமைப்பில் களப்பணியாற்றிக் கொண்டிருந்தவர்களை இணைத்து உருவாக்கப்பட்ட அமைப்பே GINTOTOA DEVELOPMENT FOUNDATION (GDF) ஆகும்.

பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் முழு ஊருக்குமான உணவு ஏற்பாடுகள், பாதிப்படைந்த குடும்பங்கள் தொடர்பிலான தகவல் திரட்டல், மீடியாக்களுக்கு தகவல் வழங்கல், உதவிகளை ஒருங்கிணைத்தல், ஆவணப்படுத்தல் நடவடிக்ைககள், பொலிஸ் பதிவுகள் மற்றும் முறைப்பாடுகளுக்கான ஏற்பாடுகள், கிராம அலுவலகர்கள், பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர்களுடனான சந்திப்புக்கள் என்று பல்வேறு மட்டங்களில் ஓயாமல் இயங்கிக் கொண்டிருந்த தனிநபர்கள் மற்றும் அமைப்பு சார்ந்தவர்களை இணைத்து கலவரம் இடம்பெற்ற மூன்றாவது நாளில் "கிந்தோட்டை அனர்த்த நிவாரணக் குழு" என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு, பின்பு "GINTOTOA DEVELOPMENT FOUNDATION (GDF)" என்ற பெயருடன் நீண்ட கால இலக்குகளோடு தொழிற்படுவதற்கு ஆரம்பித்தது. இன்று கிந்தோட்டையில் ஏனைய சங்கங்கள், அமைப்புக்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து முழு ஊரினதும் பலத்த ஆதரவுடன் இயக்க, கட்சி, ஊர் வேறுபாடுகள் களையப்பட்டு எமது GDF நிறுவனம் செயற்பட்டு வருகின்றது.
.
கிந்தோட்டை கலவரம் இடமபெற்ற நாள் முதல் இன்று வரை GDF நிறுவனம் மேற்கொண்டு வரும் பணிகள்.

1. கலவரம் தொடர்பிலான அனைத்து ஆவணப்படுத்தல் நடவடிக்கைகளையும் கலவரம் இடமபெற்று சில மணித்தியாலங்களுக்குள்ளேயே ஆரம்பித்தமை. இதன் மூலம் ஒரு முழுமையான ஆவணப்படுத்தல் நடவடிக்கைள் மேற்கொள்ளபட்டு அவை ஸீ.டீ. மற்றும் அறிக்கை வடிவங்களிலும், புத்தக வடிவங்களிலும் பராமரிக்கப்பட்டு வருகின்றமையும், தேவையான அனைத்துத் தரப்பினர்களுக்கும் அதன் பிரதிகள் வழங்கப்பட்டன. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பற்றிய முழு விபரங்களையும் திரட்டும் வகையில் தகவல் திரட்டுப் படிவம் தயாரிக்கப்பட்டு முஸ்லிம் குடும்பங்கள் மாத்திரமல்லாது பாதிப்படைந்த ஒரு சில சிங்கள வீடுகள் பற்றிய தகவல்களும் பெறப்பட்டன.

(வார விடிவௌ்ளி பத்திரிகை ஒரு முழுமையான கிந்தோட்டைக் கலவரம் பற்றிய ஒரு விசேட இதழாக வருவதற்கு எமது GDF காரணமாக இருந்தது)

2. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மாத்திரமல்லாது முழு ஊருக்குமான உணவு ஏற்பாடுகளை பக்கத்து முஸ்லிம் ஊர்களின் உதவிகளோடு ஏற்பாடு செய்தமை.

3. பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஆற்றுப்படுத்தல் நடவடிக்கைகள், சட்ட ஆலோசனைச் சேவைகள், பொலிஸ் பதிவு மற்றும் முறைப்பாடுகளைச் செய்வதற்கான ஏற்பாடுகள் போன்றவற்றினை மேற்கொண்டமை.

இதற்கு தேசிய சூறா கவுன்ஸில் (NSC) நிறுவனம் ARC என்ற சட்டத்தரணிகளின் சங்கத்தினூடாக எமது நிறுவனத்தோடு மிகவும் ஒத்துழைப்புடன் செயற்பட்டது. அத்தோடு, NFGG கட்சி மற்றும் VOICE OF MOVEMENT ( V- MOVE) நிறுவனமும் பல்வேறு கட்டங்களில் எமக்குத் தேவையான சட்ட ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்கியது. அத்தோடு, முஸ்லிம் கவுன்ஸில் ஒப் சிரி லங்கா மற்றும் முஸ்லிம் மீடியா போரம் நிறுவனங்களின் தலைவர் அமீன் ஸேர் மற்றும் அவருடைய அமை்பபுக்கள் ஊடாகவும் பல்வேறு ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்பட்டன.

4. கலவரம் இடம்பெற்று மறுநாளே கிந்தோட்டைக்கு விஜயம் செய்த அகில இலங்கை ஜம்ிஇய்யதுல் உலமா பிரதிநிதிகளோடு பல்வேறு கட்ட அமர்வுகளை மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

5. தேசிய மட்ட முஸ்லிம் நிறுவனங்களுடனான சந்திப்புக்களை மேற்கொண்டு GDF னால் தயாரிக்கப்பட்ட ஸீ.டி மற்றும் Appeal for Gintota, Details of Affected Families போன்ற ஆவணங்களும் கையளிக்கப்பட்டன. குறிப்பாக சிரி லங்கா ஜமாஅதே இஸ்லாமி, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, தேசிய சூறா கவுன்ஸில், ஜம்இய்யதுஷ் ஷபாப், YMMA, Aluthgama Development Foundation (ADF) போன்ற நிறுவனங்களை சந்தித்து எமது ஆவணங்கள் கையளிக்கப்பட்டன.

6. எமது கோரிக்கையினை ஜம்இய்யதுஷ்ஷபாப் நிறுவனத்தினால் பாதிக்​கப்பட்ட குடும்பங்களிலுள்ள பாடசாலை செல்லும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் பாடசாலைப் புத்தகப் பொதி வழங்கப்பட்டன. அந்த நிகழ்வை எமது GDF நிறுவனம் ஒருங்கிணைத்தது. அதே போல் எமது வேண்டுகோளை ஏற்று Oxford Printers நிறுவனம் பாதிக்கப்பட்ட குடும்பங்களிலுள்ள அனைத்து கல்வி கற்கும் பிள்ளைகளுக்கும் பாடசாலை அப்பியாசப் புத்தங்கள், கற்றல் சார் கருவிகள் வழங்கப்பட்டன. இதில் சில பெயர் குறிப்பிடாத ஊர் தனவந்தர்களும் இருக்கின்றனர். இந்நிகழ்வையும் எமது GDF நிறுவனம் ஒருங்கிணைத்தது.

அத்தோடு ஜமாஅதே இஸ்லாமி வழங்கிய ரூ. ஐந்து இலட்சம் நிதியுதவியைக் கொண்டு கலவரத்தின் போது சேதமாக்கப்பட்ட அனைத்து "கேட்"டுகளும் திருத்தியமைக்கப்பட்டன. முஸ்லிம் வீடுகள் மாத்திரமல்லாது, சிங்களவர் கையாலேயே முஸ்லிம் வீடுகள் என்று நினைத்து சேதமாக்கப்பட்ட எட்டு சிங்கள வீடுகளின் கேட்டுக்களும் முழுமையாகத் திருத்திக் கொடுக்கப்பட்டன. அத்தோடு, எமது GDF நிறுவனத்தின் செயற்பாடுகளால் கவரப்பட்ட ஜமாஅதே இஸ்லாமி நிறுவனம் தமது அமைப்பினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளும் நுண்கடன் செயற்றிட்டத்தினையும் GDF நிறுவனத்தினூடாக கிந்தோட்டையிலும் மேற்கொள்ள இணக்கம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினால் வழங்கப்பட்ட நிதியுதவிகள் கொண்டு கலவரத்தினால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நஷ்டஈடுகள் வழங்கப்பட்டன.

அழுத்கம கலவரத்தின் பின்னர் அங்கு உருவாக்கப்பட்டு இன்று வரை மிகச் சிறப்பாக செயலாற்றி வரும் Aluthgama Development Foundation (ADF) நிறுவனத்துடன் பல்வேறு கட்ட அமர்வுகளை எமது GDF மேற்கொண்டது மட்டுமன்றி, எதிர்காலங்களில் பல்வேறு விடயங்களில் இணைந்து செயற்படவும் தீர்மானித்துள்ளது. பாதிக்ப்பட்ட குடும்பங்களுக்காக ADF நிறுவனம் ஒரு நிதியொதுக்கீட்டினை மேற்கொண்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

7. ஊர் மக்களின் நிதியுதவிகள் திரட்டப்பட்டு கலவரத்தின் போது முழுமையாக பாதிக்கப்பட்ட ஒரு வீடு முற்றாகத் திருத்திக் கொடுக்கப்பட்டதோடு, சிறை பிடிக்கப்பட்ட முஸ்லிம் சகோதரர்களின் குடுபங்களுக்குத் தேவையான உதவிகளும் தொடர்ந்து வழங்கப்பட்டன.

8. காலி மாவட்ட ஜம்இய்யதுல் உலமா மற்றும் காலி மாவட்ட பள்ளிவாயல் சம்மேளனம் போன்ற அமைப்புக்களுடன் பல்வேறு கட்ட அமர்வுகளை எமது GDF மேற்கொண்டது. அதன் பயனாக, அவர்களிடமிருந்து பல்வேறு கட்டங்களில் கிடைத்த நிதியுதவிகள் கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பல்வேறு அடிப்படையில் உதவிகளை எமது GDF மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக, சேதமாக்கப்பட்ட அனைத்து ஜன்னல்கள் மற்றும் கதவுகளை திருத்தியமைப்பதற்கான நிதியினை மேற்படி இரு அமைப்புக்களும் இணைந்து கட்டம் கட்டமாக வழங்கி வருகின்றது.

9. அரசாங்க இழப்பீட்டினைப் பெற்றுக் கொடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் எமது நிறுவனம் இன்று வரை மேற்கொண்டு வருகின்றது. அதற்காக பல்வேறு கட்ட சந்திப்புக்களை மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சராக வஜிர அபேவர்தன போன்றவர்களோடு மேற்கொண்டது. இன்று வரை மேற்கொண்டு வருகின்றது. ஆனால், அரச இழப்பீடு வழங்கப்படுவதிலும் பலத்த பாரபட்சம் மற்றும் இழுத்தடிப்பு மேற்கொள்ளப்படுவதனை கசப்பாயினும் இங்கு சொல்லிக் கொள்ள வேண்டும்.

இவை கலவரம் தொடர்பிலான எமது GDF ன் செயற்பாடுகளாகும்.

இது போக, கிந்தோட்டை எனும் ஊரைக் கட்டியெழுப்பி கல்வி, அரசியல், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக கட்டியெழுப்பும் நோக்குடன் எமது GDF நிறுவனம் பலத்த அர்ப்பணிப்புக்களோடு செயலாற்றி வருகின்றது. அதன் உறுப்பினர்கள் இரவு பகல் பாராது நிறுவனத்திற்காக உழைக்கின்றனர். வாரம் இரண்டு, மூன்று கூட்டங்கள் கூட்டப்படுகின்றன. ஒவ்வொரு அங்கத்தவர்களும் தம்மால் முடியுமான பங்களிப்புக்களை வழங்குகின்றனர். இதில், குறிப்பாக சொல்லப்பட வேண்டிய விடயம், இயக்க, அரசியல், ஊர், மற்றும் ஏனைய கருத்து முரண்பாடுகள் இங்கு முழ்மையாகக் களையப்பட்டுள்ளது என்பதே ஆகும்.

கிந்தோட்டை மாணிக்கக் கல் வியாபாரத்தில் பேர் பெற்ற ஊராகும். மாணிக்கக் கல் வியாபாரத்தினை மேம்படுத்தவும், வியாபாரம் நடைபெறும் "பத்தை" என்ற இடத்தினால் பாதை ஒழுங்குகள் மீறப்படுவதனை ஒழுங்குபடுத்தவும் எமது GDF நிறுவனத்தினால் மாணிக்கக் கல் வியாபாரிகளின் சங்கம் ஒரு துணை நிறுவனமாக உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த சங்கம் பல காத்திரமான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றது.

அதே போன்று கிந்தோட்டையிலுள்ள ஜூம்ஆ பள்ளிகள், சாதாரண பள்ளிகள் மற்றும் தக்கியாக்களை உள்ளடக்கி அனைத்துப் பள்ளிவாயல் சங்கமும் எமது GDF குடைக்கின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வருட ரமழான் ஏற்பாடுகள் மற்றும் வழிகாட்டல்கள் தொடர்பில் எமது GDF நிறுவனம் அனைத்துப் பள்ளிவாயல் சங்கத்தினூடாக ஊருக்கு வழிகாட்டல்களை வழங்கி வருகின்றது.

ரமழானை வரவேற்கும் நோக்கோடு ஊர்மட்டத்தில் ஒரு பாரிய சிரமதானமொன்றினை மேற்கொள்வதற்கு எமது GDF முயற்சித்தது. என்றாலும், அந்த முயற்சியினை ஹஜ்ஜுப் பெருநாளில் செய்வதென்று முடிவெடுக்க்பபட்டுள்ளதோடு, எதிர்வரும் வருடங்களில் ரமழானை முன்னிட்டு ஒரு சிரமதானத்தினை ஏற்பாடு செய்து அதனை வருடாந்த ஒரு செயற்றிட்டமாக மேற்கொள்வதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில், GDF ன் கல்வி அபிவிருத்திப் பிரிவு, இன நல்லினக்கம் சார்ந்த பிரிவு, வணிக அபிவிருத்திப் பிரிவு, ஜனாஸா நலன்புரிப் பிரிவு, சூழல் சுற்றாடல் அபிவிருத்தி சார்ந்த பிரிவு, பெண்கள் வலுவூட்டல், குடும்பவியல் மற்றும் இணக்கப்பாட்டுப் பிரிவு, போதை ஒழிப்பு மற்றும் இளைஞர் வலூவூட்டல் பிரிவு, அரசியல் மற்றும் அரச நிர்வாகவியல் விழிப்புணர்வு சார் பிரிவு போன்ற பிரிவுகளை உருவாக்கி ஒரு முழுமையான வழிகாட்டலை ஊருக்கு வழங்கி கிந்தோட்டையினை கல்வி, அரசியல், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெற்ற, யாராலும் அசைக்க முடியாத ஒரு சக்திவாய்ந்த ஊராக மாற்றியமைக்கும் முயற்சிகளில் மிக அர்ப்பணிப்புடன் செயற்பட எமது GDF திடவுறுதி பூண்டுள்ளது. அதற்கு உங்கள் அனைவரினதும் துஆவும், ஒத்துழைப்பும் எமக்கு மிக அவசியமாகும்.

கடைசியாக, சிங்கள இனவாதிகள் எமது ஊரைத் தாக்கியதால் ஒரு பக்கம் சில பொருளாதார ரீதியான இழப்புக்கள் ஏற்பட்டாலும் மறுபக்கம் அந்தத் தாக்குதல் எமது ஊரை விழிப்படையச் செய்து விட்டது. கருத்து முரண்பாடுகள், பிளவுகள் களையப்பட்டு இன்று அனைவரும் ஒரு புள்ளியில் சங்கமிக்கின்றார்கள். GDF நிறுவனம், கிந்தோட்டை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்கமான Old Gintota Zahirians ஆகியன எழுச்சியடைந்து வீறு நடை போடுகின்றது. அத்தோடு School Development Committee (SDC), Old Girls association போன்ற அமைப்புக்களும் எழுச்சி பெற்று வருகின்றன. அனைத்து நிறுவனங்களும் ஒன்றுக்ெகான்று ஒத்துழைப்புடன் செயற்படுகின்றது. கிந்தோட்டையிலிருந்து Forum for Education and Ethical Development - FEED - Gintota என்றநிறுவனம் முழு தென்மாகாணத்திலிருந்தும் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்படும் முஸ்லிம் மாணவர்களுக்கு மாதாந்த புலமைப் பரிசில்களை வழங்கி வருகின்றது. இந்த எழுச்சிகளுக்கு காரணமான சிங்கள இனவாதிகளுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம் என்று தான் சொல்ல வேண்டும்.

இன்ஷா அல்லாஹ், எதிர்காலங்களில் எமது கிந்தோட்டை முழு இலங்கைக்கும் உரு சிறந்த முஸ்லிம் ரோல் மொடல் ஊராக மாறும்.

(அவசரமாகப் பதிந்த பதிவு என்பதனால் எழுத்துப் பிழைகள் அதிகம் இடம் பெற வாய்ப்புண்டு. அதற்காக மன்ளிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்.)

- ரஸ்மி ( Galle) -
கிந்தோட்டை இனக்கலவரத்தின் பின்னர் உருவாக்கபட்ட GDF பற்றி ஒரு அறிமுகம்.  கிந்தோட்டை இனக்கலவரத்தின் பின்னர் உருவாக்கபட்ட  GDF பற்றி ஒரு அறிமுகம். Reviewed by Madawala News on May 16, 2018 Rating: 5