அன்று சந்திரிகாவை அரசியலுக்கு அழைத்து வந்தது போல் தான் இப்பொழுது கோத்தாபய பற்றியும் பேசுகின்றனர்.


தம்மை வீரர்களாக அடையாளம் காட்டும் தனி நபர்கள் ஜனாதிபதியாக முயற்சித்தாலும் அவர்களால் நாட்டு
மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைக்காண முடியாது என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னரும் தனிப்பட்ட நபர்களை முன்நிலைப்படுத்தி நாட்டின் தலைவர்களாக்கியபோதும் அவர்கள் எவரும் நாட்டை கட்டியெழுப்பவில்லை என அதன் மத்திய குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.

அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ களமிறங்கப் போவதாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலேயே லால்காந்த மேற்கண்ட கருத்தைத் தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“தனித் தனி வீரர்களால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. தனிநபர்கள் மக்கள் விடுதலை முன்னணிக்கு சவாலானவர்களும் அல்ல. மகிந்த ராஜபக்‌ஷ என்ற தனிநபரை நாம் சவாலாக எடுத்தோம்.

அதற்கமைய அவரைத் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பினோம். இவ்வாறான நிலையில் தனித் தனி வீரர்கள் மக்களின் பிரச்சினைகளுக்குப் பதில் வழங்கப்போவதில்லை என்றார்.

இதுபோன்றுதான் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகாயத்தில் இருந்து கொண்டுவந்தவர்போல அரசியலுக்கு அழைத்துவரப்பட்டார்.

முன்னாள் பிரதமர்களின் மகள், இன்னாருடைய மனைவி எனக் கூறியே அவரை அரசியலுக்குக் கொண்டுவந்தனர். ஆனால் அவர் நாட்டுக்கு எதனையும் செய்யவில்லை. தற்பொழுது கோத்தாபய பற்றிப் பேசுகின்றனர்” என தெரிவித்தார்.
அன்று சந்திரிகாவை அரசியலுக்கு அழைத்து வந்தது போல் தான் இப்பொழுது கோத்தாபய பற்றியும் பேசுகின்றனர். அன்று  சந்திரிகாவை அரசியலுக்கு அழைத்து வந்தது போல் தான் இப்பொழுது கோத்தாபய பற்றியும்  பேசுகின்றனர். Reviewed by Madawala News on May 17, 2018 Rating: 5