ஊழலுக்கு எதிரான முன்னெடுப்பு அரசியல் ஆயுதமா?


தமிழில்: ஹஸன் இக்பால், யாழ்ப்பாணம் 
2015 ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலின்போது கூட்டரசாங்கம் வழங்கியிருந்த வாக்குறுதிகளில்
‘ஊழல் ஒழிப்பு’ பிரதான இடத்தை வகித்திருந்தது. முன்னைய அரசாங்கத்தின் ஊழல் முறைகேடுகள் நிர்வாகத்தின் சகல பகுதிகளிலும் ஆழ ஊடுருவியுள்ளன எனும் நம்பிக்கை அத்தேர்தல்களின்போது மிக பிரதான பேசுபொருளாக விளங்கியது.


மைத்திரிபால மற்றும் ரணில் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் எதுவும் அக்காலப்பகுதியில் இல்லாத காரணத்தினால் கூட்டரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்த ‘ஊழல் ஒழிப்பு’ வாக்குறுதியானது பெரிதும் நம்பப்பட்டிருந்தது.

அத்துடன் நீதித்துறை, சட்டம், ஒழுங்கு மற்றும் ஊழல் ஆணைக்குழு என்பவற்றின் சுயாதீன இயக்கத்திற்கு வழிவகுக்கும் வகையில் அரசியலமைப்பில் 19 ஆம் திருத்த சட்டமூலங்களை ஏற்படுத்தியமை குறித்த வாக்குறுதிக்கு பெரிதும் வலுச் சேர்ப்பதாக அமைந்து போனது.


எனினும், இவ்வருட ஆரம்பத்தில் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தல் காலப்பகுதியில் ‘ஊழல் ஒழிப்பு’ எனும் சுலோகம் கூட்டரசாங்கத்திற்கே பெரும் தலையிடியாக மாறிப் போனது. மத்திய வங்கி பிணை முறி விவகாரம் ஊழல் ஒழிப்பு தொடர்பில் கூட்டரசாங்கம் பெற்றிருந்த நன்மதிப்பை முற்றிலும் சிதைக்கப் போதுமானதாக அமைந்தது.


அத்துடன் முன்னைய அரசாங்கத்தை சேர்ந்த உறுப்பினர்களிடையே ஊழல் முறைகேடு தொடர்பான விசாரணைகளில் ஏற்பட்ட அசமந்தமும் நன்மதிப்பை மேலும் சீர்குலைத்தது. உள்ளூராட்சி தேர்தல் பிரசாரங்களின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊழல் எதிர்ப்பு கோட்பாட்டை பெரிதும் விளம்பரப்படுத்தியிருந்தார். இதன் மூலம் தனது கூட்டணிக் கட்சியான ஐ.தே.கவையும் அதன் தலைமையையும் ஜனாதிபதி மறைமுகமாக சாடுவதை அறிய முடியுமாக இருந்தது.

தேசிய அரசாங்கத்தின் அங்கமான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தமது கூட்டணிக் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களை எதிர்த்து மேடைகளில் கருத்துத் தெரிவித்து, வார்த்தைகளில் மோதிக் கொண்ட வகையில் உள்ளூராட்சி தேர்தல் பிரசாரங்கள் விபரீதமாகிப் போயின.


இவ்வகையான போக்கு ஒட்டுமொத்த தேசிய அரசாங்கத்தின் நம்பகத்தன்மையை இல்லாமற் செய்யுமளவுக்கு மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்கின.

அரசாங்கத்தினுள்ளேயே பல்வேறு கருத்து முரண்பாடுகள் தோன்றிய காரணத்தினால் ஊழல் முறைகேடு தொடர்பில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டிய கூட்டு எதிரணியினர் சுயாதீனமாக விடப்பட்டமை பாரிய பாதகமாக மாறிப் போனது.


அரசியல் சூழ்நிலைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அவர்கள் ஊழல் முறைகேடுகள் தொடர்பில் கூட்டரசாங்கம் மீது குற்றம் சுமத்தத் தொடங்கினர். கூட்டரசாங்கத்தினர் தமது சக கட்சியை சாடி, ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி முரண்பட்டுக் கொண்டிருந்த நிலையை தமக்கு சார்பாக பயன்படுத்திக் கொண்ட எதிரணியினர் உள்ளூராட்சி தேர்தல்களில் வெற்றிகளை சுவீகரித்துக் கொண்டனர்.


தேசிய அரசாங்கத்தின் அதிகாரச் சமநிலையில் ஏற்பட்டுள்ள தளம்பல்:
வர்த்தகக் கொடுக்கல்வாங்கல் ஒன்றில் பெருந்தொகையான இலஞ்சப் பணம் கைமாறியுள்ள குற்றச்சாட்டின் பேரில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலகத்தின் பணியாளர் குழுவின் தலைமை அதிகாரியின் கைது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.


நாடளாவிய ரீதியில் இலஞ்ச ஊழல்கள் மலிந்துள்ள இக்காலப்பகுதியில், இலஞ்ச ஊழல் குற்றத்தில் சிக்க வைக்கும் முயற்சியில் குறிப்பாக ஜனாதிபதி செயலக பணியாளர் குழுத் தலைவரை தெரிவு செய்தமை ஏன் எனும் கேள்வி எழுகிறது.


மூன்று மாதங்களுக்கு முன்னதாக உள்ளூராட்சி தேர்தல் பிராசாரங்களின்போது ஊழல் மோசடி ஒழிப்பு தொடர்பில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தனது செயலக குழுத் தலைமை அதிகாரியே ஊழல் குற்றச்சாட்டில் கைதாகி இருப்பது பெருத்த தர்மசங்கடமான நிலையை உருவாக்கியுள்ளது.


அரசாங்கத்தின் உயர் மட்டமான, ஜனாதிபதி செயலகத்தின் தலைமை அதிகாரியே ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருப்பது, ஜனாதிபதி தன்னை மக்கள் மத்தியில் ஊழல் மோசடி ஒழிப்பு நடவடிக்கைகளில் வெற்றிவாகை சூடிய ஒருவராக பெருமிதமாக வெளிக்காட்டிக் கொள்ள முடியாத நிலையைத் தோற்றுவித்துள்ளது.


தேசிய அரசாங்கத்தின் உள்ளே வலுச் சமநிலையை பாதிக்கும் நிகழ்வாக இது மாறிப் போயுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் பிரதமரை பதவி இழக்கச் செய்யும் ஜனாதிபதியின் முயற்சி தோல்வியடைந்த பிற்பாடு தேசிய அரசாங்கத்தின் அதிகாரச் சமநிலை ஐக்கிய தேசிய கட்சியின் பக்கம் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது.

ஜனாதிபதி செயலக பணியாளர் குழுத் தலைவரையே ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்திருப்பது சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்ட நோக்கங்களை நோக்கி பயணிப்பதையும், அரசியல் தலையீடுகள் அதிகாரத்தில் இல்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. எனினும், சுயாதீன ஆணைக்குழுக்களின் உறுதிப்பாடு மற்றும் நம்பகத் தன்மையை அதிகரிப்பதற்கு மேலும் பல முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கின்றது.


அரச சுயாதீன ஆணைக்குழுக்களின் பலவீனம் பற்றிக் குறிப்பிடுகையில் இலஞ்சம் ஊழலுக்கு எதிரான ஆணைக்குழுவின் பணிப்பாளர் சரத் ஜயமன்னே, ‘கடந்த 23 வருட காலப் பகுதியில் நால்வர் மாத்திரமே ஊழல் மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளனர்’ என தெரிவிக்கின்றார்.
அவர் மேலும் கூறுகையில்,


‘ஊழல் மோசடிகள் தண்டனைக்குரிய குற்றம் என 1994 இல் சட்டமியற்றப்பட்டு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நிறுவப்பட்டது.  கடந்த 23 வருட காலப் பகுதியில் 75 வழக்குகள் நீதிமன்றம் வரை எடுத்துச் செல்லப்பட்டன.


அதில் நான்கு வழக்குகள் மாத்திரமே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட வழக்குகளாக அமைந்துள்ளது. கடந்த வருடத்தில் மாத்திரம் 57 ஊழல் மோசடி வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. ஒரு வருடத்தில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாக இது அமைந்தது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சுயாதீன நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிப் போக்கு என இதனை அடையாளப்படுத்தலாம்’ என தெரிவித்துள்ளார்.

இலஞ்ச ஊழலுக்கு எதிரான சுயாதீன ஆணைக்குழுவின் அதிகாரங்களை அதிகரித்தல்:

இலஞ்ச ஊழலுக்கு எதிரான ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேலும் தெரிவிக்கையில், இலஞ்ச ஊழல் சட்டம், இலஞ்ச ஆணைக்குழு சட்டம் மற்றும் சொத்து மதிப்பாய்வு சட்டங்களில் திருத்த மூலங்கள் கொண்டுவரப்படவுள்ளது. இலஞ்ச ஊழல் சுயாதீன ஆணைக்குழுவில் காத்திரமான, துணிச்சல் மிக்க அதிகாரிகள் இடம்பெறாத காரணத்தினால் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் பேரில் பெரும் புள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் கால தாமதம் ஏற்படுகின்றது.


பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 200 இற்கும் அதிகமான அதிகாரிகள் இலஞ்ச ஊழல் தொடர்பான மோசடிகளைக் கண்டறிவதற்கான துறையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். எனினும், அவர்களில் ஒருவர் கூட துறைசார் நிபுணத்துவங்களைக் கொண்டவர்களாக இல்லை. இலஞ்ச ஊழல் மோசடி தொடர்புபட்ட குற்றங்களை கண்டறிய கணக்கியல் துறையிலும் குறித்த அதிகாரிகள் சாணக்கியம் மிக்கவர்களாக இருத்தல் வேண்டும்.
ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டின் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் துறைசார் அறிவு குறைந்தவர்களாக உள்ள அதேவேளை அதிகாரிகளின் எண்ணிக்கையிலும் பாரிய வெற்றிடம் நிலவுகிறது.


வெறும் 6 மில்லியன் சனத்தொகை கொண்ட ஹொங்கொங் நாட்டில் 1,200 இலஞ்ச ஊழல் விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 21 மில்லியன் சனத்தொகை கொண்ட எமது நாட்டிலோ வெறுமனே 200 இலஞ்ச ஊழல் விசாரணை அதிகாரிகளே நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஹொங்கொங் நாட்டின் இலஞ்ச ஊழல் விசாரணை அதிகாரிகள் அத்தனை பேரும் பட்டதாரிகளும் துறை சார் நிபுணத்துவம் பெற்றவர்களுமாவர்.


இலஞ்ச ஊழல் சுயாதீன ஆணைக்குழுவின் அதிகாரங்களை அதிகரிக்கும் பொருட்டு அதற்கென சிறப்பு நீதிமன்றங்களை நிறுவ அரசு ஆலோசித்து வருகின்றது. இதற்கென விசேட நீதித்துறை சட்டமூலங்கள் உருவாக்கப்படவுள்ளன. ஒவ்வொன்றும் மூன்று நீதிபதிகளைக் கொண்டதாக மூன்று சிறப்பு நீதிமன்றங்கள் காலை மற்றும் மாலை அமர்வுகள் என நாளாந்த அமர்வுகளை நடாத்தக்கூடிய வகையில் அமைக்கப்படவுள்ளன.


இச்சிறப்பு நீதிமன்றங்களில் இலஞ்சம், ஊழல், மோசடி மற்றும் அரசியல்வாதிகளினால் இழைக்கப்படும் அரசியல் குற்றங்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெறும். முன்னைய அரசாங்கத்தின் உயர் மட்டங்களில் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்படும் பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் இன்னும் வழக்கு விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் கிடப்பில் உள்ளன. சில விசாரணைகள் அசமந்தமான முறையில் ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கின்றன.   
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் காத்திரமான முதலீடுகளை செய்ய அரசு முயல வேண்டும். இவ்வகையான முதலீடுகள் வெகு சீக்கிரத்தில் அரசியல் மற்றும் பொருளாதார நலன்களை நாட்டுக்கு விளைவிப்பதாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை.


ஊழல் மோசடிகள் உரிய வகையில் வெளிக்காட்டப்பட்டு தண்டனை பெற்றுக் கொடுக்கப்படாவிட்டால் நிர்வாக சீர்கேடுகள் தாண்டவமாடும். இறுதியில் ஒட்டுமொத்த பொருளாதாரமும் வீழ்ச்சியடையும். அரசியல்வாதிகள் ஊழல் குற்றங்களில் ஈடுபடுகையில் சட்டத்தில் இருந்தும் தண்டனைகளில் இருந்தும் இலகுவில் தப்பித்துக் கொள்ள முடியும் எனும் போக்கு மாற்றப்பட வேண்டும்.


சட்டங்கள் இறுக்கமானதாக, சுயாதீனமாக இயங்கக் கூடியதாக அமைதல் வேண்டும். நாட்டு மக்களின் நலன்கள் கருத்திற்கொள்ளப்படாது தமது சொந்த ஆதாயங்கள் இங்கு முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது. 

ஊழல் மோசடி கைதுகளும் முன்னேறி வரும் நடைமுறைகளும்:
ஊழலுக்கு எதிராக ஒன்றுதிரள்வதன் முக்கியத்துவம் தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அரசியல் தலைவர்கள், பிரபலம் மிக்கவர்கள் இப்பிரசாரங்களில் ஈடுபட வேண்டும்.
 ஊழலுக்கு எதிரான முன்னெடுப்புக்கள் அனைத்தும் அரசியல் பழிவாங்கல்கள் என பிரசாரம் செய்து ஊழலின் பாதக விளைவுகளை எதிர்த் தரப்பினர் இழிவளவாக்க முயல்கின்றனர். இவ்வகையான வாதப் பிரதிவாதங்களை முறியடிக்கும் வகையில் சிறந்த பிரசாரப் பொறிமுறைகளை அரசு முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது.


ஜனாதிபதி செயலக பணிக்குழுத் தலைவர் பெருந்தொகையான இலஞ்சப் பணத்தை எதிர்பார்த்து, நியாயமாக இடம்பெற்றிருக்க வேண்டிய வர்த்தகக் கொடுக்கல்வாங்கல் ஒன்றை மூன்று வருடங்களுக்கும் மேலாக தடை செய்துள்ளார் என இதுவரை கிடைக்கப் பெற்றுள்ள ஆதாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. பொருளாதார அபிவிருத்திக்கு ஊழல் மிகப் பெரிய முட்டுக்கட்டையாக விளங்குகின்றது என்பதை இது விளக்குகிறது.


அதிகாரிகள் இலஞ்சம் எதிர்பார்க்கும் பட்சத்தில் முதலீட்டாளர்கள் குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வேறு நாடுகளில் முதலிடுவதற்கு சென்று விடுகின்றனர். இலங்கையில் முதலிடுவதற்கு பாரிய இலஞ்சங்களை வழங்க வேண்டியிருப்பின், வலிந்து இங்கே முதலீடுகளை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு என்ன தேவை இருக்கிறது?


ஜனாதிபதி செயலக பணிக்குழுத் தலைவரின் கைது மற்றும் விசாரணைகளில் குறுக்கிட்டு தடை செய்வதற்கோ அல்லது பாதுகாப்பதற்கோ ஜனாதிபதி எவ்வகையிலேனும் முயற்சிக்கவில்லை என்பது குறித்துக் காட்டப்பட வேண்டிய விடயம்.

கூட்டரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள தரப்புகள் மற்றைய தரப்பினரை வலுவிழக்கச் செய்யும் கைங்கரியமாக குறித்த ஊழல் குற்றச்சாட்டுக்கள் பயன்படுத்தப்படக் கூடாது. தற்போதைய நிலைவரப்படி ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கூட்டுறவாக, ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.


ஜனாதிபதி செயலக பணிக்குழுத் தலைவர் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருப்பது போன்ற ஒரு விடயத்தை முன்னைய அரசாங்கத்தில் எதிர்பார்த்து விட முடியாது. முன்னைய அரசாங்கத்தின்போது அரசியல் தலையீடுகள் மிகைத்து குற்றவாளிகள் இலகுவில் தப்பித்து வந்ததை நாம் அறிவோம்.


ஒரு நாடு அபிவிருத்தியடைய வேண்டுமெனில், அந்நாட்டில் பின்பற்றப்படும் நடைமுறைகள் அபிவிருத்தியடைந்த நாட்டில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளை பிரதிபலித்து நிற்க வேண்டும். அபிவிருத்தியடைந்த நாடாக இருந்தாலும் சரி அபிவிருத்தியடைந்து வரும் நாடாக இருந்தாலும் சரி அதிகாரத்தில் இருப்போர் சொந்த நலன்களுக்காக ஊழல் குற்றவாளிகளை தண்டனைகளில் இருந்து விலக்களிக்கவே முயன்று வருகின்றனர்.


அபிவிருத்தியடைந்த நாடுகளில் ஒரு வித்தியாசம் என்னெவெனில், சட்டம் ஒழுங்கு அனைவருக்கும் சமம் என்றவகையில் இஷ்டங்களுக்கும் அச்சங்களுக்கும் அப்பாற்பட்ட வகையில் சட்டம், ஒழுங்கு பிரயோகிக்கப்படும். இவ்வகையான நடைமுறையை நோக்கி இலங்கையின் இலஞ்ச ஊழலுக்கு எதிரான சுயாதீன ஆணைக்குழு நகர வேண்டும். 

(நன்றி: எங்கள் தேசம் பத்திரிகை)
ஊழலுக்கு எதிரான முன்னெடுப்பு அரசியல் ஆயுதமா? ஊழலுக்கு எதிரான முன்னெடுப்பு அரசியல் ஆயுதமா? Reviewed by Madawala News on May 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.