காத்திருக்கும் கரங்கள்..


எம்.எம்.ஏ.ஸமட்-
கடந்த காலங்களை விடவும் அண்மைக்காலமாக இயற்கை மற்றும் செயற்கை அனர்த்தங்கள்
உலகில் பரவலாக இடம்பெற்று வருவதைக் காண முடிகிறது. புயல், சூறாவளி, வெள்ளம், பூகம்பம், காட்டுத்தீ போன்ற இயற்கை அனர்த்தங்களினால் உலகளவில் ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக் கணக்கணோர் பாதிக்கப்பட்டும் மாண்டும் போகின்றனர். 

கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் 3,90,937 பேர் உயிர் இழந்துள்ளமையை சர்வதேச புள்ளி விபரங்களின் மூலம் அறிய முடிகிறது.

இந்நிலையில், இயற்கை மற்றும் செயற்கை அனர்த்தங்களினால் இலங்கை மக்களும் காலத்திற்குக் காலம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 30 வருடகால யுத்தத்தினால்  பல்லாயிரக்கணக்காணோர் பாதிக்கப்பட்டும் ஆயிரக்கணக்கான உயிர்கள் மாண்டும் போயுள்ளன. 

யுத்தம் விட்டுச் சென்ற வலியினதும் வேதனையினதும் குரல்கள் இன்னும் வடக்கு, கிழக்கில் தினமும் ஒலித்துக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

அவ்வாறான சூழலில்தான் அண்மையில், எரிபொருட்கள் மற்றும் போக்குவரத்து கட்டணங்களில் ஏற்படுத்தப்பட்ட அதிகரிப்பானது மக்களை வெகுவாக பாதித்திருக்கிறது. அரசியல் கட்சிகள் மற்றும் சில சிவில் அமைப்புக்கள் இவற்றுக்கு சாதாகமான கருத்துக்களையும் எதிரான கருத்துக்களையும் தெரிவித்து வரும் நிலையில், மக்கள் விடுதலை முன்னணி போன்ற அரசியல் கட்சிகள் இவற்றிற்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி போராட்டங்களை முன்னெடுப்பதற்கான முஸ்திப்புக்களை மேற்கொண்டுள்ளமை அறிந்ததே.

அத்துடன், பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்திற்கு வெளியிலும் இவற்றிற்கெதிரான கடும் விமர்சனக் குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும் நிலையில்தான் சீரற்ற காலநிலையினால் 20 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்தத்தின் பாதிப்புக்கு மக்கள் ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். விலைவாசி உயர்வின் தாக்கம்போன்று இயற்கை அனர்த்தங்களின் தாக்கங்களும் மக்களை நிம்மதியற்ற நிலைக்குள் தள்ளிவிட்டிருக்கிறது.

மழை வெள்ளம், மண்சரிவு, இடி, மின்னல், வறட்சி, மினி சூறாவளி, போன்ற இயற்கை அனர்த்தங்களுடன், சிவப்பு மழை, மஞ்சள் மழை, மீன்மழை, விண்கற்கள் விழுதல் போன்ற அதிசயங்களும் இலங்கை மக்களை காலத்திற்குக் காலம் பாதிப்புக்களுக்கும், அச்சத்துக்கும்  ஆளாக்கிக் கொண்டிருக்கின்றன. அவை தவிர, விபத்துக்களினால் ஏற்படும் உயிர்ச்சேதங்களும்,  சமூக விரோதச் செயற்பாடுகளான கொலை, கொள்ளை, போதைப்பொருள்பாவனை, வன்முறை, சிறுவர், பெண்கள் மீதான துஷ்பிரயோகங்கள், தற்கொலை, கருக்கலைப்பு, கடத்தல் போன்றவையும் நாட்டில்  அதிகரித்துக் கொண்டிருப்பதும் அதனால், பெறுமதிமிக்க உயிர் இழப்புக்கள் ஏற்படுவதும் இடம் பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.

அனர்த்தங்களும் பாதிப்புக்களும்
மனித செயற்பாட்டினால் ஏற்படும் செயற்கை அனர்த்தங்களை தடுக்க முடிந்தாலும், இயற்கையின் நியதியினால் நிகழும் அனர்த்தங்களை மனிதனால் தடுத்து நிறுத்த முடியாது. அதற்கு மனிதன் சக்தி பெற மாட்டான்.

மழை வெள்ளம் உட்பட பூகம்பம், பூமியதிர்ச்சி, சூறாவளி, இடி மின்னல், மண்சரிவு, வறட்சி போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் என்று கட்டியம் கூறினாலும், அவை எப்போது, எந்த நேரத்தில், எவ்வாறு ஏற்படும் என்று திட்டவட்டமாகக் கூறவோ அல்லது அவ்வாறு ஏற்படும் இயற்கை அனர்த்தங்களைத் தடுக்கவோ மனிதன் திறனற்றவன்.

கடந்த மாதத்தின் பிற்பகுதியிலும் இம்மாதத்தின் முதல் வாரத்திலும் ஏற்பட்டிருந்த காலநிலை மாற்றத்தினால் இலங்கை மக்கள் வெளுத்துக்கட்டிய வெயிளினால் பல அசௌகரியங்களை எதிர்கொணடிருந்தனர். இந்நிலையில, தெற்கு, தென்மேற்கு, மேல், மத்திய, சப்ரகமு மாகாணங்களில் ஏற்பட்டுள்ள இச்சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் மக்கள் பல பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். இக்கட்டுரை எழுதும் நேரம் வரை சீரற்ற காலநிலையினால் 20 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவினால் 18 பேர் உயிர் இழந்தும்;, 125,954 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்கள் உறவினர் வீடுகளிலும், பாடசாலைகளிலும் மத வழிபாட்டு தளங்களிலும் தங்கியுள்ளனர். அதிகளவில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக கம்பஹா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்கள் காணப்படுகின்றன. இச்சீரற்ற காலநிலையின் காரணமாக ஏற்பட் வெள்ளப் பெருக்கு மற்றும் மண் சரிவினர் மக்களின் இயல்பு வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வெள்ளப் பெருக்கின் காரணமாக பல வீடுகளும் முற்றாகவும் பகுதியளவிலும் பாதிப்படைந்துள்ளதுடன், பல ஏக்கர் வயல், பெருந்தோட்டப் பயிர் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பல வீடுகள் மற்றும் வர்த்த நிலையங்ளுக்குள் மழைவெள்ளம் புகுந்ததனாலும் வீட்டு உடமைகளும் பாதிக்கப்பட்ட நிலையில் மக்கள் அசௌகரியத்திற்குள்ளாகியுள்ளனர்.அவற்றோடு தரைவழிப் பயணங்களும் சில பிரதேசங்களில் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஒட்டுமொத்த நாட்டு மக்களும் இச்சீரற்ற இக்காலநிலையினால் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். இக்காலங்களில் மக்கள் வழிப்புணர்வுடனும் முன்னெச்சரிக்கையுடனும் செயற்படுவது தங்களையும், தங்களது உடமைகளையும் பாதுகாத்துக்கொள்ளக் கூடியதாக அமையும்.

அனர்த்தகால முன்னெச்சரிக்கை
மழை வெள்ளம் மண்சரிவு காரணமாக சூழல் பாதிக்கப்படுவதுடன், மக்களி;ன் சுகாதாரத்துக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், இவ்வாறான இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும்போது முன்னெச்சரிக்கையுடனும் அவதானத்துடனும் செயற்பட்டு பாதுகாப்பு நடைமுறைகளைப் பேணுவதுடன், சுகாதார நடைமுறைகளைகளையும் கையாள வேண்டும். அப்போது அனர்த்தங்களினால் ஏற்படுகின்ற அனாவசிய விளைவுகளைத் தவிர்த்துக்கொள்ள முடியும். இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிபாளாரினால் விடுக்கப்பட்டுள்ளது.

அனர்த்தம் ஏற்ப முன்னரும் அனர்த்தங்கள் நிகழும்போதும் அதன் பின்னரும் கடைபிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்துவது அவசியமாகும்.

இயற்கை  அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும்  அது எல்லோருக்கும் பொதுவான இறைவனின் நியதிப்படியே நிகழ்வதாக மதங்களை நம்புவோர் நம்பிக்கை கொள்கின்றனர். ஏனெனில் உலக சனத்தொகையில் 80 வீதமானோர் மத நம்பிக்கை கொண்டவர்கள் என அண்மைய ஆய்வொன்று சுட்டிக்காட்டுகிறது.

இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுவதைத் தடுக்க, தவிர்க்க முடியாத போதிலும, முன்னெச்சரிக்கையுடனும் அவதானத்துடனும் செயற்படுவதன் மூலம் பாதிப்புக்களைக் குறைத்துக் கொள்ள முடியும். அந்தவகையில், மழை வெள்ளம், மண்சரிவு ஏற்படக் கூடிய அல்லது ஏற்பட்ட பிரதேசங்களில் நீங்கள் இருப்பின் உங்கள் அனர்த்த முகாமைத்துவ அதிகாரியுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் முக்கியமான ஆவணங்களை இறுக்கமான பிளாஸ்ரிக் அல்லது நீர் உட்புகாத வகையில்  இட்டு பாதுகாப்பான இடத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

பாதுகாப்பான இடத்தை நோக்கிப் புறப்பட்டுச் செல்லுங்கள், வானொலி, தொலைக்காட்சி மற்றும் உள்ளுர் அனர்த்த முகாமைத்துவக் குழுக்கள் மூலம் விடுக்கப்படுகின்ற எச்சரிக்கைத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். நம்பிக்கையான ஊடகங்களிலிருந்து சரியான தகவல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். வதந்திகளை நம்புவதைத் தவிர்த்துக்கொள்ளுவது அவசியம். அத்துடன், உத்தியோக பூர்வ எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்துவதும் கூடாது. அவ்வாறு அலட்சியப்படுத்தும்போதுதான் அதிகளவிலான விளைவுகளை, பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிடுகிறது.

வெள்ளப்பெருக்குக் காலங்களில்  பயணிப்பதற்காகப் பாதைகளைப் பயன்படுத்தும்போது கூடிய அவதானம் அவசியம். ஏனெனில் ஒரு சில பிரதேசங்களில் மழை வெள்ள நீரை வழிந்தோடச் செய்வதற்காக தற்காலிக வடிகான்கள், குழிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கும். அவதானமின்றிப் பயணிப்பின் அவற்றினால் ஆபத்தை எதிர்நோக்க வேண்டி ஏற்படலாம். அதனால், அவதானத்துடனும் முன்னெச்சரிக்கையுடனும் செயற்படுவதன் மூலம் அனர்த்தங்களைக் குறைக்கலாம்.

சுகாதார நடவடிக்கையில் அக்கறை
மழைவெள்ளம் ஏற்பட்ட பின்னர் தொற்று நோய்கள் பரவுவதற்;கு வாய்ப்புக்கள் அதிகமாகும். தற்போது மழை வெள்ளம் ஏற்பட்டுள்ள பிரதேசங்களில் குடிநீர் நிலைகள் மாசடைந்திருக்கக் கூடும். அத்துடன், ஒரு சில பிரதேசங்களில் மலசல கூடங்களும் சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கக் கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கலாம். நுளம்புகளும் பெருகி வளரக் கூடும். இவற்றின் காரணமாக வயிற்றோட்டம், வாந்திபேதி,  நுளம்புகளினால் ஏற்படக் கூடிய டெங்குக் காய்ச்சல் போன்ற பல தொற்று நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் அதிகளவில் காணப்படலாம்.

அனர்த்த காலங்களில் எவ்வாறான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென்ற விழிப்பணர்வைப் பெற்றுக்கொள்வதோடு அவற்றின் படி செயற்பட முயற்சிக்க வேண்டும். குறிப்பாக இக்காலங்களில் சிறுவர்களை தொற்றுநோய்கள் அதிகளவில் பாதிக்கக் கூடும் என்பதால் சிறுவர்களின் பாதுகாப்பில் அதிக அக்கறை செலுத்துவதும் பெற்றோரின் பொறுப்பாகவும் அவசியமாகவுமுள்ளது. அத்தோடு பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தேவைகளும் நிறைவு செய்யப்பட உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதும் முக்கியமாகும்.

பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பு
அனர்த்தங்களினால்; பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இருப்பிடங்களை விட்டு பாடசாலைகளிலும், வழிபாட்டுத்தளங்களிலும், உறவினர்கள் வீடுகளிலும் தற்காலிகமாகத் தங்கியுள்ளனர். இவர்களின் அன்றாக வாழ்வியல் பாதிக்கப்பட்டுள்ளன. நலன்புரிநிலையங்களில் தங்கியுள்ளனர். இவ்வர்களுக்கான நிவாரணங்கள் எவ்வித பாகுபாடுமின்றி அரசினால் வழங்கப்படுவது அவசியமாகும். அரசாங்கம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு முன்னெடுத்து வருகின்றன நிலையில் பாதிக்கப்படாத தனிநபர்களும், அமைப்புக்களும் முன்வர வேண்டுமென்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்

வெள்ளத்தினாலும், மண்சரிவினாலும் பாதிக்கப்பட்டு நிம்மதியாக உறங்குவதற்குக் கூட முடியாத நிலையில் மக்கள் துயரப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சில குடும்பத்தினர் உறவுகளைப் பலிகொடுத்திருக்கிறார்கள், சொத்துக்களை இழந்திருக்கிறார்கள். மக்களின் சமூகக் கட்டமைப்புக்களும், வாழ்வாதாரமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அத்தனையும் இழந்து எதிர்காலமே கேள்விக்குறியானதொரு நிலையில,; மக்கள் துயரத்தோடும், வேதனையோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் வீண்விரைத்தை ஏற்படுத்துகின்ற நிகழ்வுகள ஒரு சில தனிநபர்களினாலும், அமைக்களினாலும் மேற்கொள்ளப்படுவது  தவிர்க்கப்பட வேண்டியதாகும்.

தங்களின் பணங்கள் ஏழைகளின் வாழ்வு ஒளிபெறவும், அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு வேதனையோடு வாழும் மக்களின் வாழ்வாதாரம் கட்டியெழுப்பப்படுவதற்கும் பயன்பட வேண்டும்.  அவர்கள் மீண்டும் எழுவதற்கு உதவியாக அமைய வேண்டும்.

பல நல்லுள்ளம் படைத்தவர்கள் தங்களது பணங்களை இதற்காக செலவளித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் சுட்டிக்காட்டுகின்ற வேளையில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணங்கள் சேகரிக்கப்படுவதிலும். அவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுவதிலும் அநீதி ஏற்படாமலும், மோசடி இடம்பெறாமலும் இருப்பதும் அவசியமென்பது வலியுறுத்தப்பட வேண்டியதாகும்.

அத்தோடு, காலத்திற்குக்காலம் அனர்த்தங்கள் ஏற்படுவதும் அதனால் பாதிக்கப்படும் மக்கள் தங்களது குறைகைள கோருவதும் அனர்த்தங்கள் நிறைவுற்றவுடன் மக்களின் கோரிக்கைகள் மறக்கப்பட்டுவிடுவதும் என்ற நிலை எந்த ஆட்சி வந்தாலும் தொடர்கதையாகவே உள்ளன. பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தராதரம், அரச சுற்றுநிருப நிபந்தனைகள் என்பவை பாராது பாதிக்கப்பட்டவர்கள் எவராக இருந்தாலும் பாதிக்கப்ட்டவர்கள் என்ற தகைiமையை மாத்திரம் கருத்திற்கொள்ளப்பட்டு அவர்களுக்கான உதவிகள் மற்றும் நிவாரணங்கள் வழங்கப்படுவது அவசியமாகும்.

ஒரு சில அரச அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதில் பொடுபோக்காவும், அதிகாரங்களை அளவு கடந்து உபயோகித்தையும் கடந்தகாலங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களின்போது காணமுடிந்தது. அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் விசனத்திற்கு இத்தகைய அதிகாரிகள் உள்ளாகினா.;

அத்தகைய நிலைமை இந்நாட்களில் ஏற்படுத்தாது, தற்போது மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு, என்பவற்றினால் பாதிக்கபட்டுள்ள மக்களின் அடிப்படை, அவசரத் தேவைகள் எவை எனக் கண்டறியப்பட்டு அவர்களின் இந்த நிர்க்கதியான நிலைக்கான நிவாரணங்களை வழங்குவதற்காக உரிய நடவடிக்கைகள் முன்னெடுப்பட வேண்டும்.

இன, மத பேதமின்றி அனைத்து சமூகங்களையும் சார்ந்தோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அரசினதும் ஏனைய மனித நேயங் கொண்டவர்களினதும் உதவிகளை எதிர்பார்த்து  அவர்களின் கரங்கள் காத்திருக்கின்றன. சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்கள் என அனைத்து மதத்தைச் சார்ந்தோரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்கள் இந்நோன்பு காலங்களில் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதால் அவர்கள் நிம்மதியாக இந்நோன்பு காலத்தில் நோன்பு நோற்பதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் தனிநபர்களும், அமைப்புக்களும் முன்வந்து நிறைவேற்ற வேண்டிய தேவையுள்ளது.

முஸ்லிம்களுக்கு மாத்திரமின்றி, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உதவி செய்ய முயுமானவர்கள் தங்களது மனிதநேயத்தை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் இதுவெனக் கொள்ளலாம். அதிலும், முஸ்லிம்கள் இறை கட்டளையின் பிரகாரமும், நபி காட்டிய வழி முறையிலும் ரமழான் கால நன்மைகளைச் செய்வதற்கும் தர்மங்களைப் புரிவதற்கும்;  முயற்சிக்கின்றபோதுதான் அதன் முழுமையான பயனை அடைந்துகொள்ள முடியும்.
அந்தவகையில,; இலட்சக்கணக்கில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு மனிதாபிமான உதவிகளை வேண்டி தங்களது கரங்களை விரித்துக் காத்திருக்கும் இத்தேசத்து மக்களுக்கு முடிந்தவரை நமது நேசக்கரங்களை நீட்டி அவர்களின் கண்ணீரைத்துடைக்க இந்த ரமழான் மாதத்தில் கிடைத்துள்ள சந்தர்ப்பத்தைப் முஸ்லிம்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதோடு, அதிகாரத்தில் உள்ளவர்கள் மக்களின் தற்காலிக, நிரந்தர தேவைகளை நிறைவேற்றி வைக்க முன்வர வேண்டுமென்பதும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுவது காலத்தின் கட்டாயமாகும்.
வீரகேசரி – 2018.05.26

காத்திருக்கும் கரங்கள்..  காத்திருக்கும் கரங்கள்.. Reviewed by Madawala News on May 27, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.