அடாவடித்தனங்களுக்கு தலைமை தாங்கும் பதுளை ஜும்மா பள்ளிவாயில் நிர்வாக சபை. தீர்வு என்ன?
நாட்டு முஸ்லிம் சமூகம் பேரினவாத செயற்பாடுகளாலும் , இன்னோரன்ன சமூக சவால்களாலும் சிக்குண்டு,
எதிர்கால இலக்கின்றி பயணிக்கின்ற இக்கால சூழலில் ‟ சமூக ஒற்றுமை ” என்ற மைய்யப் புள்ளியிலிருந்தே எமது அனைத்து நடவடிக்கைகளும்  முன்னெடுக்கப் படவேண்டும் என்ற நிலை யுள்ளது  . இந்த நிலைக்கு மிகவும் சாதகமான கேந்திரம் பள்ளிவாயலே . இஸ்லாம் வலியுறுத்துவதும் இதையே. 

              ஆனால் பதுளை ஜும்மா பள்ளிவாயிலின் அண்மைய செயல்பாடுகள் தலைகீழாக அமைத்துள்ளதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. இதற்கு சான்றாக அண்மையில் பதுளை  ஜும்மா பள்ளிவாயிளுக்குள் நிகழ்ந்த அநாகரிகமான பிற்போக்குத்தனமான செயல்பாட்டை குறிப்பிடலாம். 

          கடந்த மாதம் பதுளை ஜம்மியத்துல் உலமா தலைமையில் பதுளையிலுள்ள சிவில் சமூக அமைப்புகள் அனைத்தையும் ஒன்றினைத்து ‟ கல்வி எழுச்சி மாநாடு”  என்று ஒரு பாரிய ஒன்று கூடலை நடத்தினார்கள். அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து செயற்பட வைப்பதே இதன் நோக்கங்களுள் ஒன்றாக இருந்துள்ளது. 

         இது சம்பந்தமான ஆரம்ப கலந்துரையாடல் கூட்டமொன்றை பதுளை ஜும்மா பள்ளியில் ஜம்மியத்துல் உலமா சபியினறால் கூட்டப்பட்டுள்ளது. நிகழ்வுக்கு அழைக்கப் பட வேண்டியவர்களை பட்டியல் படுத்தும் போது UCMC அமைப்பினரை சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று ஓரிரு உலமாக்கள் ? எனப்படுவோர்களால் எதிர்ப்புத் தெரிவிக்கப் பட்டுள்ளது. எதிர்ப்புக்கான திட்டவட்டமான காரணம் சொல்லப் படவில்லை என்றாலும் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துள்ளார்கள். இவர்களுடன் சேர்ந்துதான் UCMC அமைப்பினர் தமது எதிர்கால திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற தேவையோ நிலைப்பாடோ UCMC க்கு எள்ளளவும் கிடையாது என்றாலும் ஓரிருவரின் தேவைக்காக ஒரு சமூக தேவை எவ்வாறு திசை திருப்பப் படலாம் என்பதே கேள்வி . 

           குறிப்பாக UCMC அமைப்பினர் ஷீயாக்களோ , காதியாநிகளோ , முர்தத் பட்டம் வழங்கப்பட்டவர்களோ அல்லது பகிரங்க சினா அல்லது வட்டி போன்ற வழிகேடுகளில் ஈடுபடுபவர்களோ அல்ல. மாறாக மேற்சொன்ன அனைத்து வழிகேடுகளுக்கும் எதிராக முன்னணியில் இயங்குபவர்கள் . மேலும் அரச சட்ட விதிகளுக்கமைய பதிவு செய்யப் பட்டதொரு அரச சார்பற்ற நிறுவனம் என்ற ரீதியில் ஊவா மாகாண மட்டத்தில் பல காத்திரமான சமூகப் பணிகளை மேற்கொண்டு  களத்தில் நின்று  உழைப்பவர்கள்.

 மலையக முஸ்லிம் கவுன்சில் எனும் UCMC இனர். . 
UCMC செய்த சமூக விரோத செயல்கள் என்ன ?

                       ஊவா மாகாணமெங்கும் முஸ்லிம் கல்வி மேம்பாட்டை நோக்காகக் கொண்டு,  க பொ த (சா/த) (உ /த) வதிவிடக் கருத்தரங்குகள் ஊக்குவிப்பு பாராட்டு விழாக்கள் நடத்தி வருகின்றது.    குறிப்பாக பதுளை பாத்திமா மகளிர் கல்லூரியின் உயிரோட்டமிக்க வளர்ச்சியின் பின்னணியில் இயங்கு சக்தியாக 1௦௦ % தம்மை அர்பணித்துள்ள ucmc, இன்ஷா அல்லாஹ் 2020ம் ஆண்டில் வைத்திய, பொறியியல்  மற்றும் சட்ட துறைகளுட்பட உயர்கல்விக்காக 25 மாணவிகளை அனுப்பிவைக்கும் உன்னத திட்டத்தை தற்போது அமுல் நடத்தி வருகின்றது.   

       ஊவா முஸ்லிம்களுக்கெதிராக நடந்த நடைபெறுகின்ற அநீதிகளுக்கெதிராக நேரடியாக களத்தில் நின்று போராடி பல சட்டநடவடிக்கைகளில்  வெற்றியும் கண்டுள்ளது. 

                                                             கடந்த ஆட்சி காலத்தில் பதுளை “டீன் பென்சி” நிறுவனம் இனவாதிகளின் கெடுபிடிகளுக்குள்ளான நேரத்தில், "டீன் பென்சி" உரிமையாளரை   அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ விடம் நேரடியாக அழைத்திச் சென்று நீதி கேட்டு நின்றது இந்த ucmc  நிறுவனம்.  அக்காலத்தில் பாதுகாப்பு செயலார் கோதாபயவுக்கு நேரடியாக கடிதம் எழுதவே கைநடுக்கம்  எடுக்கும் கால சூழல் என்பதை நாம் மறக்க முடியாது.  

                                  அதே போல் பதுளை மாஷா  டேக்ஸ் மீது இனவாதிகள் தாக்குதல் தொடுத்த நேரம் பதுளை பொலிஸ் நிலையத்தில் புகார் தொடுத்து            ( புகாரை ஏற்க மறுத்து பல மணி நேரம் அலையவிட்ட  நிலையிலும், பொது பல சேனா உறுப்பினர்கள் பதுளை பொலிஸ் நிலையத்திட்குள்ளேயே எம்மை மிரட்டிய போதும்) புகாரை பதிவு செய்து  அதன் மூலமாக வழக்கு பதிவு செய்து பொது பல சேனாவுக்கோ ராவணா பலயவுக்கோ  இனிமேல் அந்த  பெயரில் பதுளையில் பகிரங்க கூட்டம் நடத்த முடியாது என்று ஒரு தீர்ப்பை பெற்று சமூக அமைதியை நிலை நாட்ட எடுத்த முயற்சியை  பாதிக்கப் பட்டவர்கள் இன்றளவும் மறுக்க மாட்டர்கள். 

             தற்போது கூட  வெலிமடை  முஸ்லிம் சகோதரர் ஒருவரின் சுமார் நான்கு கோடி ரூபா பெறுமதி மிக்க காணியில் புத்தர் சிலையொன்றை பலவந்தமாக நிலை நிறுத்தி  அச்சகோதரருக்கு பகிரங்க அநீதி இழைக்கப் பட்டுள்ளது. அந்த அநீதிக்கு எதிராகவும் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு தற்போது களத்தில் நின்று செயற்பட்டுவருகின்றது இந்த  UCMC.

            புற்று நோய் மற்றும் பாரிய நோய்களுக்குள்ளானோர்களுக்காக நடத்தப் பட்டுவரும் நோயாளர் பராமரிப்பு நிலையத்தினூடாக இன மத மொழிகளுக்கப்பால் செய்து வரும் சேவையினூடாக சமூக சக வாழ்க்கைக்ககைக்கு சிறந்ததொரு முன்னுதாரணம் தந்துள்ளது இந்த UCMC. 

அதே போல் ஒவ்வொரு மாதமும் மாததிகு இரண்டு மூன்று என்ற வகையில் ஜனஸாக்களையும், நோயாளர்களையும்  ஏற்றிச் கிழக்கு உட்பட நாட்டின் பல பிரதேசங்களுக்கு சென்று வருகின்றது எமது   ucmc யின் வாகனம். 

         மேற்படி ucmc யின் சேவைகளை குறித்துக் காட்டும் போது சில பேர்களின் முதுகில் பூரான் நெளிவது போல் இருந்தாலும் ஒரு சிலருக்காக இந்த விடயங்களை சொல்லியே ஆகவேண்டிய நிலை ஏற்பட்டதால் இவற்றை குறித்துக் காட்டினேன்,. 

இனி விடயத்துக்கு வருவோம் , 

குறிப்பிட்ட நிகழ்வில் ucmc யை ஒதுக்க வேண்டும் என்று வேண்டுதல் விடுத்தவர்கள் குறிப்பாக  நுஸ்ரான் பின்நூரியின் சிஷ்யர்கள். (ஆறுநாள் வைத்தியக் குஞ்சுகள்) அல்லது அவர்களது ஆதரவாளர்கள். இந்த நுஸ்ரான் பின்நூரியின் பண்டாரவெல வெள்ளி பயான் ( பாடசாலை கல்வி ஹராம் , பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாதீர்கள்  எனும் பயான் ) ஊடகங்களில் விமர்சித்து பகிரங்கமாக எழுதியது இந்த UCMC அமைப்பினர் என்பது தான் இவர்களின் எதிர்ப்பிற்கு காரணமாக இருக்கும் . இவர்களுடன் இன்னும் சில தனிப்பட முரண்பாடு கொண்டவர்களும் இணைந்திருக்கலாம். 

 இவர்களின் எதிர்ப்பையும் மீறி பதுளை ஜம்மியத்துல் உலமாவின் சில கண்ணியமிக்க உலமாக்கள் வினயமாக வேண்டிக் கொண்டதற்கிணங்கவும் சமூக ஒற்றுமை கருதி மேற்கொள்ளப் படும் ஒரு நல்ல நிகழ்வை சமூக பொறுப்புள்ளதொரு அமைப்பு என்ற ரீதியில் அழைப்பினை புறக்கணிக்காமல்    குறித்த  நிகழ்வில் ucmc பங்கேற்றது.  குறித்த கல்வி மாநாட்டில் பிரதான வளவாளராக தேசிய ரீதியில் பிரபலமான உலவல ஆலோசகர் ஷாபிர் ஹஷீம் அவர்கள் பங்கேற்றிருந்தார்கள் . மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டம் உலமாக்கள், அதிபர்கள் , ஆசிரியர்கள் சமூக அமைப்புகள் என பல்வேறு மட்ட சமூக உறுப்பினர்களும் இந் நிகழ்வில் பங்கேற்று பரந்தளவிலான ஆதரவு இந்த நிகழ்வுக்கு வழங்கப் பட்டிருந்தது. குறித்த இந்த நிகழ்வின் மூலம் மக்கள் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணர்வின் காரணமாக  உலவல ஆலோசகர் ஷாபிர் ஹஷீம் அவர்களின் குறித்த இந்த நிகழ்வு வாராந்த அடிப்படையில் பதுளை “ஒக்ஸ்போர்ட் சர்வதேச பாடசாலயில்’’ நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இந்த “ஒக்ஸ்போர்ட் சர்வதேச பாடசாலை’’யானது  ரிஸான் சைன் (நலீமி ) அவர்களின் தலைமையில் இயங்கும் பதிவு செய்யப் பட்ட  ஒரு தனியார் நிறுவனமாகும்.

           வளவாளர் ஷாபிர் ஹஷீம் அவர்களை குறித்த இந்த நிகழ்வில் பங்கேற்கச் செய்யும் வகையில் ஆரம்பத்திலிருந்தே ஒருங்கிணைப்பு வேலைகளை செய்த , பதுளை ஜம்மியத்துல் உலமாவின் சக அங்கத்தினரான ரிஸான் சைன் (நலீமி ) அவர்கள் பதுளையில் முஸ்லிம் இளைஞர்களின் போதைபொருள் பாவனை அதிகரிப்பை கட்டுபடுத்தவும் ,  இளம் முஸ்லிம் தம்பதிகளின் அதிகரித்து வரும்  விவாகரத்து வீதத்தை கட்டுப் படுத்தவும் குறித்த இந்த வாராந்த நிகழ்வுகளை நெறிப் படுத்தியிருந்தார் என்று அறிய முடிகின்றது.  
      நடந்து முடிந்த இரண்டாவது வாராந்த நிகழ்வில் ஒரு பெண் சகோதரி தனது முகத்திரையை அகட்டி சில கேள்விகளை கேட்டதாகக் கூறி குறித்த வகுப்பில் களேபரம் நடந்துள்ளது. வளவாளர் ஷாபிர் ஹஷீம் அவர்களை பதுளை ஜும்மா பள்ளிக்கு அழைத்து வந்த சில (உலமாக்கள் ? ) தலைமையிலானதொரு குழு குறித்த வகுப்புகளை பெண்களுக்கு திரை போட்டு நடத்தப்பட முடியாவிடின் இனிமேல் இந்த வகுப்புக்களை பதுளையில் நடத்த விட மாட்டோம் என்று கூறி ரகளை செய்துள்ளனர் . தங்களை மீறி பதுளைக்கு வந்தால் அடிப்போம் டா , கால உடைப்போம் டா என்று கூறி மிரட்டியுள்ளனர்.   குறித்த நிகழ்விற்கு பிறகு வளவாளர் ஷாபிர் ஹஷீம் அவர்கள் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப் பட்டுள்ளார். 

இந் நிகழ்வின்  ஓரிரு தினகளுக்கு பிறகு பதுளையை சேர்ந்த உலமா என்று தன்னைக் கூறிக்கொள்ளும் ஒருவர்  வளவாளர் ஷாபிர் ஹஷீம் அவர்களின் உதவியாளர் ஒருவரை தொலை பேசியில் தொடர்பு கொண்டு ,“ அவன பதுளைக்கு வரவானா என்று சொல்லு வந்தா அவன கொல்லுவம் , அவன்ட பொண்டாடிக்கு மாப்புள இருக்க மாட்டான் , புள்ளகளுக்கு வாப்பா இருக்க மாட்டான்  எண்டு சொல்லு , இங்க ஜிஹாத் பட இறுக்கி தெரியுமா” என்று மிரட்டியுள்ளார் இந்த கார்ட் போர்ட் வீரரான பதுளை ஜிஹாத் படை உலமா . (தயவு செய்து  கண்ணியமிக்க உலமாக்கள் மன்னித்துக் கொள்ள வேண்டும்)

                 இது இவ்வாறு இருக்க கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பதுளை ஜும்மா பள்ளி நிர்வாகி ஒருவரால் ரிஸான் சைன் (நலீமி) அவர்கள் பதுளை ஜும்மா பள்ளிக்கு அழைக்கப் பட்டுள்ளார் . பதுளை ஜும்மா பள்ளியினுள் தனியாக பிரிக்கப் பட்டுள்ள பிரத்தியேக பகுதியில் குறித்த கூட்டம் ஒழுங்கு செய்யப் பட்டுள்ளது.  அங்கே பதுளை ஜம்மியத்துல் உலமாவின் பல உறுப்பினர்களும் , பதுளை ஜும்மா பள்ளி நிர்வாகிகள் சிலரும் இன்னும் சில ஊர்வாசிகளினதும் முன்னிலையில் குறித்த நிகழ்வுகளை பற்றி விசாரிக்கப் பட்டுள்ளார். அத்துடன் குறித்த வகுப்புகள் தொடர்ந்தும் பதுளையில் நடைபெற கூடாது அது தடுக்கப் பட வேண்டும் என்று கட்டளை இடப் பட்டுள்ளார். இதற்கிடையில் குறித்த அறைக்கு வெளியே ஏற்கனவே பல பொய்களை கூறி ஏமாற்றி அழைத்துவரப் பட்ட இளைஞர்கள் சிலர் மிகவும் ஆவேசமாக கதவுகளில் தட்டியும் கதவுகளில் தள்ளியும்  கர்ஜனை செய்துகொண்டு இருந்துள்ளார்கள். இந்த நிகழ்வுகளுக்கு மத்தியில் அஷ்ஷேஹு ரிஸான் செயின் அவர்கள் தாம் இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்ததற்கான நோக்கங்களை குறித்த சபையினருக்கு தெளிவு படுத்தி யுள்ளார். அதாவது பதுளை முஸ்லிம்களுக்கு மத்தியில் போதைப்பொருள் பாவனை வீதம் அதிகரித்து வருவதையும் அதை தடுக்கும் முறைகளையும் , மற்றும் பதுளையில் விவாக ரத்து வீதம் அதிகரித்துள்ளதையும் அதற்கான மாற்று நடவடிக்கைகளையும் தாம் மேற்கொள்ள வேண்டியது எதமது சமூகக் கடமையென்றும் பதுளை ஜம்மியாவுடன் சேர்ந்து இவற்றை நடைமுறை படுத்த இதுதான் காரணம் என்றும் விளக்கமளித்துள்ளார். ஆனால் இவரின் விளக்கத்தை கேட்குமளவு பொறுமை அந்த சபையிலிருந்த சிலருக்கு இருந்திருக்க வில்லை. அதேவேளை ரிஸான் சைன் (நலீமி)யின் நிலைப்பாட்டின் உண்மை நிலையை விளங்கிய உலமாக்கள் சிலர் நிர்வாக சபை அங்கத்தினர் சிலர் , பொதுமக்கள் சிலர் இக்கூட்டதிலிருந்த ஒரு சிலரின் அடாவடி தனத்திற்கு கட்டுண்டு மௌனமாகவே இருந்துள்ளனர். இவ்வளவுக்கும் ரிஸான் சைன் (நலீமி) அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் இரண்டு முறை (ஹார்ட் அட்டார்க் ) மாரடைப்பு நோயால் தாக்கப் பட்டு சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டு வைத்தியரால்  கண்டிப்பான ஒய்வு பரிந்துரைக்கப் பட்டு ஓய்விலிருக்க வேண்டியவர் என்பது குறிப்பிடத் தக்கது. இவர் செய்த சமூக துரோகம் இருண்ட எதிர்காலத்தை நோக்கிய பதுளை முஸ்லிம் சமூகத்தின் மீட்சியே ஆகும். 

இறுதியில், குறிப்பிட்ட  நிகழ்சிகளை நடத்துவதை தாம் நிறுத்திக் கொள்ளத் தயார் , ஆனால் தாம் முன்வைத்த சமூக பிரச்சினைகளுக்கு மாற்றுத் தீர்வுகளை முன்வைப்பது யார் என்ற கேள்வியை சபையில் கேட்டுள்ளார். ரிஸான் சைன் (நலீமி) அதைப்பற்றி நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் என்று குறிப்பிட்டவர்கள் கூற அல்லாஹ்வை சாட்சி வைத்து அந்த இடத்திலிருந்து வெளி நடந்துள்ளார். 

அத்தருணத்தில் குறித்த அறைக்கு வெளியில் காத்திருந்த சிலரால் கடுமையான அச்சுறுத்தல்களுக்கு ஆளாக்கப் பட்டுள்ளார்.                                               “கால உடைப்பெண்டா  , நீ பலன்கொடையான் நீ பலன்கொடைக்கே போடா என்று அச்சுறுத்தப் பட்டுள்ளார். இனுமொரு உலமாவான , பொதுவாக எல்லா தரப்பினருடனும் நன்றாக பழகும் மத்தியஸ்த போக்குடைய தப்லிக் ஜமாத்தை சேர்ந்த  இக்பால் மௌலவி அவர்களையும் தாக்க முற்பட்டுள்ளனர்.   பள்ளி பிரதம கதீப் அவர்களும் ( இவரும் தப்லிக் ஜமாஅத் கொள்கையுடையவர்) மிரட்டப் பட்டுள்ளார். இவை அனைத்தும் ஒருசிலரின் வேண்டுதல் படி அல்லது விருப்பப் படி மேற்படி உலமாக்கள் நடந்து கொள்ளவில்லை என்பது தான் இவர்களின் இந்த அடாவடித்தனங்களுக்கு காரணம். 

பொதுவாக இஸ்லாத்திற்கு அல்லது முஸ்லிம்களுக்கு ஒரு தீங்குவரும்போது கொதித்தெழும் இளைஞர்களின் உணர்வுகளை கிளறிவிட்டு அவர்களை பிழையாக வழி நடத்தியுள்ளது இந்த தீவிராவாத கும்பல்.

         ஆகவே பதுளை வாழ் ஜமாதினர்களின் கண்ணியமிக்க உலமாக்கள், புத்திஜீவிகள் ,  மற்றும் சான்றோர்களிடம் சில கேள்விகளை முன்வைக்கலாம் என்று நினைக்கின்றேன் . இந்த கேள்விகள் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா , மற்றும் தப்லீக் ஜமாஅத் உயர்நிலை நிர்வாகிகளுக்கும் பொருந்தும் வழமையான உங்கள் மௌனம் களைந்து பதில் தர முன்வாருங்கள். 

 அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான பள்ளிவாயில்களை தமது அப்பன் பாட்டன் சொத்துகளை போல் பராமரிக்க நினைக்கும் இதுபோன்ற பள்ளி நிர்வாகிகளின் செயல்பாடுகள் சமூகத்தில் எத்தகைய சீர்கேடுகளை உண்டுபண்ணிவிடும் என்பது பற்றி இவர்களுக்கு கௌன்சலிங் செய்வது எப்போது? ( இதில் ஒரு நிர்வாகிதான் சம்பந்தப்பட்டிருந்தாலும் ஏனையவர்களின் மௌனம் இச்செயல்பாடுகளுக்கான அங்கீகாரமாகம்)

 இந்த ஜனநாயக நாட்டின் சட்டம் ஒழுங்கை தம் சொந்த கையிலெடுத்து சுதந்திரமான ஒரு சமூக பிரஜையை விசாரிக்கும் உரிமையை இவர்களுக்கு கொடுத்தது யார். 

 இலங்கை சட்ட விதிகளுக்கு அமைய பதிவு செய்யப் பட்டு பல வருடகாலம் பழைமையான ஒரு தனியார் கல்வி நிறுவனத்தின் நிகழ்ச்சி யொன்றை உடனடியாக நிறுத்தச் சொல்லும் அதிகாரத்தை இவர்களுக்கு தந்தது யார். 

 ஒரு உலமாவை ஒரு ஆசிரியரை , ஒரு அதிபரை , கண்ணியப் படுத்த தெரியாத இவர்களுக்கெதிராக கையோங்கும் , நாக்கூசாமல் தூசணத்தால் ஏசும் , அப்பட்டமான பிரதேச வாதத்தை கக்கும்  இவர்களுக்கு அகுலாக்குகளை கற்றுக் கொடுக்க இன்னும் எத்தனை நாற்பது நாட்கள் கூட்டிச் செல்லப் போகின்றீர்கள் . ( தயவு செய்து நல்லொழுக்கம் முள்ள தப்லிக் சகோதரர்கள் பிழையாக எண்ணங் கொள்ளவேண்டாம் ) 

 அல்லாஹ்வின் மாளிகைக்குள் நடந்து கொள்ள வேண்டிய உசூல்களை அடிக்கடி  சொல்லித்தரும் ஒரு நல்ல வழக்கம் தப்லிக் ஜமாத்தில் உள்ளது. இந்த சண்டியர்களுக்கு விளங்கும் வகையில் எப்போது உசூல் சொல்ல போகிறீர்கள். 

                                              நல்லவர்கள் மௌனம் களையும் வரையில் மேற்படி கேள்விகளுக்கு விடை கிடைக்காது என்று நன்றாகவே அறிந்து வைத்துள்ளோம் . என்றாலும் பகிரங்கமாக தீமையை செய்வதும் , நன்மையை ஏவி தீமையை தடுக்காமல் இருப்பதும் அல்லாஹ்வின் பார்வையில் சமமானது என்ற இறை நியதியை ஞாபகமூட்ட வேண்டியதால் எழுதி வைக்கின்றேன். 

இறுதியாக குறித்த நிகழ்வை ( ஷாபிர் ஹஷீமின் வாராந்த உலவல ஆலோசனை நிகழ்வு )  மலையக முஸ்லிம் கவுன்சில் மூலமாக முன்னெடுக்க தேவைப்படின் இன்ஷா அல்லாஹ் இந்த சமூகத்தின் நலவு நாடி அதை முன்தொடர எங்களுக்கு எந்த தடையுமில்லை என்பதையும் சொல்லி முடிக்கின்றேன் . வஸ்ஸலாம்.  

ஏ எம் எம் முஸம்மில் – பதுளை.
அடாவடித்தனங்களுக்கு தலைமை தாங்கும் பதுளை ஜும்மா பள்ளிவாயில் நிர்வாக சபை. தீர்வு என்ன?  அடாவடித்தனங்களுக்கு தலைமை தாங்கும் பதுளை ஜும்மா பள்ளிவாயில் நிர்வாக சபை.  தீர்வு என்ன? Reviewed by Madawala News on May 12, 2018 Rating: 5