ஹமாஸ் அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் அல்யஸவ்ரி அவர்களுடனான நேர்காணல்.

தமிழில்: ஹஸன் இக்பால், யாழ்ப்பாணம்
(மூலம்: Middle East Monitor)
இப்ராஹிம் பாரிஸ் அல்யஸவ்ரி 1940 இல் பெய்த் தாரஸ்
எனும் பலஸ்தீனிய கிராமமொன்றில் பிறந்தார். சியோனிஸ ஆதிக்கவாதிகளினால் அக்கிராமத்தை விட்டும் விரட்டப்பட்டு 1948 இல் குடும்ப சகிதமாக அஷ்டொத் பிரதேசத்திற்கும், பின்னர் அங்கிருந்தும் வெளியேற்றப்பட்டு அல்மஜ்தால் பகுதிக்கு குடியேறினார். சொற்ப காலமே அங்கே வாழ்க்கையை நடாத்த முடிந்தது. இறுதியில் தெற்கு காசா எல்லைப்பகுதியில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். அகதி முகாம் வாழ்க்கையும் ஐ.நாவினால் நடாத்தப்பட்ட பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியுமாக தனது இளம் பராயத்தை ஆரம்பித்தார் அல்யஸவ்ரி. 


1960 இல் மருத்துவக் கற்கை பயில்வதற்காக எகிப்து நோக்கிப் பயணமானார். அங்கே பிரபலாமாகவிருந்த இஹ்வானுல் முஸ்லிமீன் (முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி) இயக்கத்தின் கொள்கைளில் வெகுவாக ஈர்க்கப்பட்ட அவர் இயக்கத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு அயராது உழைத்து ஐந்து வருடங்களில் இயக்கத்தின் உயர்மட்ட உறுப்பினரானார்.


இவரது கொள்கைப் போக்கை அச்சுறுத்தல் எனக் கருதிய எகிப்திய அரசாங்கம் அல்யஸவ்ரியை இரு தடவைகள் கைது செய்து சிறையில் தள்ளியது. எனினும், இன்னல்களுக்கு மத்தியில் ஒருவாறாக மருத்துவக் கற்கையை பூர்த்தி செய்து காசாவுக்கு திரும்பினார். அங்கே மருந்தகம் ஒன்றை சொந்தமாக ஆரம்பித்து நடாத்தினார். காசாவின் எகிப்தின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் வேறு சில இஹ்வானுல் முஸ்லிமீன் ஆதரவாளர்களுடன் இணைந்து இயக்கத்திற்காக உழைக்கத் தொடங்கினார்.


1967 இல் இடம்பெற்ற ஆறு நாள் கொடிய யுத்தத்தில் காசா மற்றும் சினாய் பகுதிகள் இஸ்ரேலின் வசம் சென்றன. அதன் பின்னர் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் அதன் தாய் இயக்கமான எகிப்திய இயக்கத்திலிருந்து பிரிந்து தனித்து இயங்கத் தொடங்கியது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்புகளுக்கு தக்க பதிலடி வழங்க வேண்டும் என்பதில் உறுதி பூண்டு பலஸ்தீனிய இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் தன்னை தயார்படுத்திக் கொண்டது. 
இன்று வரை இஸ்ரேலின் அடாவடித்தனங்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் பலம் பொருந்திய ‘ஹமாஸ்’ என அறியப்படும் எதிர்ப்புக் குழுவினை,  1967 இல் இஸ்ரேலின் கொடிய ஆக்கிரமிப்பு இடம்பெற்று சரியாக 20 வருடங்கள் கழித்து, முதலாம் இந்திபாதா காலகட்டத்தின்போது 1987 டிசம்பரில் அல்யஸவ்ரி தனது உறுப்பினர்களுடன் இணைந்து ஸ்தாபித்தார்.


கேள்வி: ஹமாஸ் அமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன?
எமது தாயக பூமியான பலஸ்தீன மண்ணில் அத்துமீறி நுழைந்து, அப்பாவி மக்களைக் கொன்று குவித்து, எமது சொத்துக்களை நாசப்படுத்தி, எமது மக்களை சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றிய இஸ்ரேலின் அடாவடித்தனங்களை எதிர்த்துப் போரிடுவதற்காகவே ஹமாஸ் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.


கேள்வி:ஹமாஸ் அமைப்பு உருவாக்கத்தின் பின்னணி பற்றி கூற முடியுமா?
1967 இல் ஆறு நாள் யுத்தத்தில் இஸ்ரேல் படைகள் கிழக்கு ஜெரூசலம், மேற்குக் கரை, காசா எல்லை பகுதி, சினாய் மற்றும் கோலன் குன்றுப் பகுதிகளை பலவந்தமாக கைப்பற்றிக் கொண்டது.


இஸ்ரேலின் அத்து மீறிய அடாவடித்தனங்களையும் பலவந்த முற்றுகைகளையும் எதிர்த்து தீர்க்கமான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என காசா பகுதியில் ஒன்றுகூடிய இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க உறுப்பினர்கள் மத்தியில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, ‘ஆயுதம் ஏந்துவதே இஸ்ரேலின் அடாவடித்தனங்களை கட்டுப்படுத்தும் ஒரே வழி... உடனடியாக நாம் ஆயுதப் படையை உருவாக்க வேண்டும்’ என  ஷெய்க் அஹ்மத் யாஸின் தனது ஆலோசனையை முன்வைத்தார். எனினும், ஏனைய உறுப்பினர்கள் குறித்த ஆலோசனைக்கு இணங்கவில்லை. அவர்களது தீர்மானமோ தூரநோக்கு கொண்டதாக விளங்கியது.


இஸ்ரேலை எதிர்த்து நேரடித் தற்காப்பு தாக்குதல்களில் ஈடுபடுவதற்கு முன்னர் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தை பலம் பொருந்தியதாகவும் ஆள் பலம் மிக்கதாகவும் காத்திரமானதாகவும் மாற்றிக் கொள்ள வேண்டும் எனத் தீர்மானித்து உடனடியாக ஆயுதக் குழுவை உருவாக்கும் திட்டம் பிற்போடப்பட்டது.


 இதற்கிடையே எகிப்துடன் சமாதான ஒப்பந்தம் இடம்பெற்று இஸ்ரேல் படைகள் சினாய் பகுதியை மீளக் கையளித்தது. எனினும், ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளில் அப்பாவிப் பொதுமக்களுக்கு எதிரான இஸ்ரேலின் அட்டூழியங்கள் அதிகரித்தே சென்றன. எடுத்துக்காட்டாக இஸ்ரேலிய கனரக வாகன ஓட்டுநர் பலஸ்தீன தொழிலாளர்கள் மீது கனரக வாகனத்தை தாறுமாறாக செலுத்தி நான்கு பலஸ்தீனர்களை கொன்று விட்டு தைரியமாக தப்பித்துச் செல்லுமளவுக்கு மனித உரிமை மீறல்கள் மலினப்பட்டுப் போயின.
குறித்த நிகழ்வு பலஸ்தீன மக்களின் ஆத்திரத்தை தூண்டியது. கிளர்ச்சிப் படையொன்றை சடுதியில் உருவாக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தை நாம் அப்போது உணர்ந்து கொண்டோம். பலியான பலஸ்தீன தொழிலாளர்களின் மரணச் சடங்கில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


அவர்களுக்கு மத்தியில் உரையாற்றிய நாம் இஸ்ரேலின் எதேச்சதிகார போக்கை எதிர்த்துப் போரிடுமாறும் அப்பாவிப் பொதுமக்களைப் பாதுகாக்குமாறும் உற்சாகப்படுத்தினோம். ஆயுதங்கள் பற்றிக் கேள்வி எழுந்தபோது கையில் கிடைப்பதைக் கொண்டு போரிடுமாறு வலியுறுத்தினோம். அவை கற்களாகவோ போத்தல்களாகவோ இருப்பினும் சரி. எறிகணைகள் என்றே கருதிப் போரிடுவோம். நியாயமான கோபத்தை வெளிக்காட்டுவோம் என உரத்துக் கூறினோம்.


மரணச் சடங்கு இடம்பெற்று சில நாட்களின் பின்னர் ஷெய்க் யாஸின் அவர்களின் இல்லத்தில் கூடிய இஹ்வானுல் முஸ்லிமீன் உறுப்பினர்களாகிய நாங்கள், எம்மை இஸ்ரேலின் அக்கிரமத்தை எதிர்த்துப் போரிடும் ‘ஹமாஸ்’ உறுப்பினர்களாக பிரகடனப்படுத்திக் கொண்டோம்.
ஆரம்பத்தில் ‘ஹம்ஸ்’ (பற்றாளர்) எனும் பதம் பின்னர் ஹமாஸ் என திரிபடைந்தது. ‘கற்களின் புரட்சி’ அல்லது ‘மஸ்ஜித்களின் புரட்சி’ என அறியப்பெற்ற எமது முதலாவது பிரகடனத்தை வெளியிட்டோம்.

கேள்வி: எகிப்திய இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்திற்கும் ஹமாஸ் அமைப்பின் தோற்றத்திற்கும் தொடர்புகள் இருந்தனவா?

எகிப்திய இஹ்வானுல் இயக்கத்துடனோ அல்லது வேறு நாடுகளில் இயங்கிய இஹ்வானுல் இயக்கத்துடனோ நாம் எவ்வித தொடர்புகளையும் ஹமாஸ் உருவாக்கத்தின்போது நாம் கொண்டிருக்கவில்லை. நேரடித் தொடர்புகள் அன்றி, இஹ்வானுல் இயக்கத்துடன் அப்போதும் இப்போதும் கொள்கை அளவிலான தொடர்புகளை மாத்திரமே நாம் கொண்டுள்ளோம்.


அந்நியர்கள் எமது இஸ்லாமிய மண்ணில் அத்துமீறி நுழைந்து அட்டூழியங்கள் புரியும்போது எதிர்த்து நின்று போராட வேண்டும் எனும் வகையில் ஹமாஸ் மற்றும் இஹ்வான் ஆகிய இரு இஸ்லாமிய அமைப்புக்களும் கருத்தொருமித்து நிற்கின்றன. எனினும், புவியியல் மற்றும் அரசியல் காரணிகளைக் கருத்திற்கொண்டு இரு அமைப்புக்களும் தத்தமது இலக்கை அடையும் வழிவகைகளில் மாறுபாடான முறைகளைக் கையாள்கின்றன.
ஹமாஸ் உருவாக்கத்தின் ஆரம்ப கட்டத்தில் அதனை நாம் ‘பலஸ்தீனிய இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் இராணுவ படையணி’ என்றே அடையாளப்படுத்தியிருந்தோம். அதே அடையாளத்துடனே நாம் நீண்ட காலம் நிலைதிருந்தோம்.

கேள்வி: ஆரம்ப கட்டங்களில் ஹமாஸ் அமைப்பின் இலக்கை அடையும் வழிவகைகளும் கொள்கைகளும் எவ்வாறு அமைந்திருந்தன?
ஆரம்ப கட்டங்களில் கற்களை கொண்டு தாக்கியும் டயர்களை எரித்தும் போராடினோம். ஆர்ப்பாட்டங்கள் மற்றும் இஸ்ரேலிய உற்பத்தியைப் பகிஷ்கரித்தல் என்பனவும் எமது வழிமுறைகளாக அமைந்திருந்தன. பின்னர் படிப்படியாக எமது எதிர்ப்பு வழிமுறைகள் பலம் பொருந்தியதாக உருப்பெற்றன. எம்மை சமூக மற்றும் அரசியல் களங்களில் இருந்து வேரோடு பிடுங்குவதற்கான நோக்குடன் மூன்று நேரடி இஸ்ரேலிய தாக்குதல்களை வெற்றிகரமாக அடுத்தடுத்து எதிர்கொண்டு பிராந்தியத்தில் காத்திரம் மிக்க சக்தியாக தோற்றம் பெற்றோம்.


வழிமுறைகள் மாறினாலும் அன்றும் இன்றும் எமது இலக்குகள் மாற்றமடையவில்லை. எம்மை எமது சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றிய இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடி எமது தாயக நிலங்களை மீட்டெடுப்பதுவே எமது இறுதி இலக்கு.

கேள்வி: இஸ்ரேலை எதிர்ப்பதன் பிரதான நோக்கம்?
அவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள். 1940 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை எமது நிலங்களை படிப்படியாக சுரண்டி, பலரைப் படுகொலை செய்து,  பலஸ்தீனர்களை சொந்த மண்ணிலிருந்து துரத்தி நாடற்ற அகதிகளாக ஆக்குவதை எதிர்ப்பது எமது உரிமை.

கேள்வி: ஹமாஸ் அமைப்பானது இஸ்ரேலியர்கள் மற்றும் யூதர்கள் இடையேயான தனித்துவமான வேறுபாடுகளைக் கருத்திற்கொண்டு செயற்படுகிறதா?


ஆம், நிச்சயமாக. சியோனிஸ்ட்கள் என்று அடையாளப்படுத்தப்படும் இஸ்ரேலியர்களே எமது நிலங்களை ஆக்கிரமிப்பவர்கள். எமது உரிமைகளை பறித்தெடுப்பவர்கள். இன்றும் எமக்குச் சொந்தமான நிலங்களில் அட்டூழியங்கள் புரிபவர்கள்.


மாறாக, நாம் மதிக்கும் மதமொன்றை அச்சொட்டாகப் பின்பற்றுபவர்கள் யூதர்கள் என்றே நாம் வேறுபடுத்தி இனங்காண்கிறோம்.  ஒட்டுமொத்த யூதர்களையும் நாம் எதிர்க்கவில்லை. அவர்கள் உலகில் எப்பாகத்தில் இருப்பினும் சரியே. அவர்களை, அவர்களது நியாயமான உரிமைகளை நாம் மதிக்கின்றோம்.

ஆனால், நாம் சியோனிஸ்ட்களுக்கு எதிரானவர்கள். அவர்கள் யூதர்களாகவோ, உலகில் எப்பாகத்தில் இருப்பவர்களாகவோ இருக்கலாம். சியோனிஸ்ட்களை நாம் அடியோடு வெறுக்கிறோம். சியோனிஸ கொள்கை வேறு யூத கொள்கை வேறு. இரண்டையும் நாம் குழப்பிக் கொள்வதில்லை.

கேள்வி: எதிர்காலங்களில் பலஸ்தீன் தாயகத்தை மீட்கும் பட்சத்தில் யூதர்களை உங்களது நிலத்தில் உங்களுடன் இணைந்து வாழ அனுமதிப்பீர்களா?


கண்டிப்பாக, அவர்கள் எம்முடன் இணைந்து வாழ அனுமதிக்கப்படுவர். அவர்கள் மில்லியன் கணக்கில் இருந்தாலும் சரியே. எம்மை எமது நிலத்திலிருந்து வெளியேற்றாத வரை யூதர்களுடன் எமக்கு எவ்வித முரண்பாடுகளுமில்லை. வரலாற்றை சற்று புரட்டிப் பார்ப்போமேயானால், இஸ்லாமிய ஆட்சியின் கீழ் யூதர்கள் செழுமையாகவும் பாதுகாப்பாகவும் வாழ்ந்த பல்வேறு சந்தர்ப்பங்களை நாம் கண்டுகொள்ள முடியும்.
இன்றும் பல அரபு நாடுகளில் நாம் காண்பதைப் போல் சியோனிஸ்ட்கள் பலஸ்தீனை ஆக்கிரமிப்பதற்கு முன்னதாக பலஸ்தீனர்களுடன் யூதர்கள் இணைந்தே வாழ்ந்து வந்தனர்.

கேள்வி: பலஸ்தீன் – இஸ்ரேல் முறுகல் தொடர்பில் ஹமாஸ் அமைப்பிடம் காத்திரமான சமரச திட்டங்கள் உள்ளனவா?


கண்டிப்பாக, இஸ்ரேலுடனான முறுகல் நிலைக்கு தீர்க்கமான தீர்வுகளை எட்டும் வகையில் சமாதான பேச்சுக்கள் தொடர்பான பல முன்மொழிவுகள் எம்மிடம் உள்ளன. ஹமாஸ் உருவாக்கத்தின் ஆரம்பம் முதலே ஷெய்க் யாஸின் தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றை அறிவித்திருந்தார். 1967 இல் இஸ்ரேல் ஆக்கிரமித்துக் கொண்ட பலஸ்தீனிய நிலங்கள் மீளக் கையளிக்கப்பட வேண்டும் மற்றும் தாக்குதல்கள் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும் எனும் நிபந்தனைகளை கொண்டதாக அவரது முன்மொழிவுகள் அமைந்திருந்தன. எனினும், இஸ்ரேல் தனி நாட்டை அங்கீகரிப்பதோ அல்லது பலஸ்தீனர்களின் எந்தவொரு நியாயமான உரிமைகளை விட்டுக் கொடுப்பதாகவோ இருக்கும் பட்சத்தில் சமரச முயற்சிகளுக்கு நாம் ஒருபோதும் இணங்க மாட்டோம்.

கேள்வி: ஒஸ்லோ ஒப்பந்தம் ஹமாஸ் அமைப்பின் சுயாதீன செயற்பாடுகளில் எவ்வகையில் தாக்கங்களை ஏற்படுத்தியது?

ஒஸ்லோ ஒப்பந்தத்தை ஹமாஸ் அங்கீகரிக்கவில்லை. பலஸ்தீனர்களின் நியாயமான தாயக மீட்புப் போராட்டத்தையும் மக்களின் போராட்ட குணத்தையும் மெல்லச் சுரண்டும் பாதக முயற்சியாகவே ஒஸ்லோ ஒப்பந்தங்களை ஹமாஸ் நோக்குகிறது.


பலஸ்தீன அதிகார சபை உருவாக்கப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்ட சில பகுதிகளை மீள வழங்கப்பட்டதும், பலஸ்தீன அதிகார சபை ஹமாஸ் அமைப்புக்கு எதிராக செயற்பட்டது. எமது உயர்மட்ட உறுப்பினர்கள் பலரைக் கைது செய்தது. பலஸ்தீன அதிகார சபையினால் எமது உறுப்பினர்களில் பலர் சித்திரவதை செய்தே கொல்லப்பட்டனர். எனினும், அது தொடர்பான எதிர்த் தாக்குதல்களில் நாம் ஈடுபடவில்லை. அப்போது கூட பலஸ்தீன அதிகாரசபையை எதிர்த்து நாம் ஆயுத ரீதியில் போராடவில்லை.


 ‘எமது துப்பாக்கிச் சன்னங்கள் எச்சந்தர்ப்பத்திலும் ஒரு பலஸ்தீன உயிரைக் குடிக்காது’ எனும் எமது சுலோகத்தை நாம் ஒருபோதும் மறந்துவிடவில்லை.
2006 தேர்தல்களில் ஹமாஸ் வெற்றிவாகை சூடியது, ஹமாஸ் அமைப்பு ஒட்டுமொத்தமாக அழிந்து போவதில் இருந்து காப்பாற்றப்பட்டதாக அமைந்து போனது. அதற்குப் பின்னர் பலஸ்தீன அதிகார சபையின் அச்சுறுத்தல்களில் இருந்து எம்மை நாம் தற்காத்துக் கொண்டோம். காசா பகுதியில் எமது இருப்பின் அழிப்பு என்பது அசாத்தியமானது என்பதை உணர்ந்த பலஸ்தீன அதிகார சபை காசாவை கைவிட்டது. இறுதியில்பலஸ்தீன அதிகார சபை  இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களின் வகிபாகத்திற்கு ஒத்த ஓர் அமைப்பாக அது தொழிற்பட்டு வந்தது. 

கேள்வி: ஹமாஸ் அமைப்பு மீதான இஸ்ரேலிய மற்றும் பலஸ்தீன அதிகார சபையின் எதிர்ப்புகள் எவ்வாறு அமைந்தன?


ஹமாஸ் அமைப்பு புரட்சி இயக்கமாக பிரகடனப்படுத்தப்பட்டு ஓரிரு வாரங்களின் பின்னர் ஷெய்க் யாஸின் அவர்களைத் தவிர்த்து ஏனைய அனைத்து ஹமாஸ் அமைப்பின் ஸ்தாபகர்களும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளால் கைது செய்யப்பட்டனர். ஹமாஸ் அமைப்பின் அபரிமிதமான வளர்ச்சிப் போக்கைக் கண்டு திகைத்த இஸ்ரேல், இரண்டு வருடங்கள் கழித்து ஷெய்க் யாஸின் அவர்களையும் ஹமாஸின் புதிய தலைவர்களையும் கைது செய்யுமாறு உத்தரவிட்டது.

கற்களில் தொடங்கிய ஹமாஸ் கிளர்ச்சிக் குழுவானது கத்திக்கு மாறி, துப்பாக்கிகளில் சங்கமித்த 1990 காலப்பகுதிகளில் மிரண்டு போன இஸ்ரேல் பெருந்தொகையான ஹமாஸ் உறுப்பினர்களைக் கைது செய்து தெற்கு லெபனானுக்கு நாடு கடத்தியது.


ஹமாஸின் வளர்ச்சியைக் கண்டு சகிக்காத இஸ்ரேல் 2003 இல் ஷெய்க் யாஸின் அவர்களையும் ஹமாஸின் ஆயுதக் கிளையாக பரிணானம் பெற்றிருந்த அல்கஸ்ஸாம் படையணியின் உயர்மட்ட உறுப்பினர்கள் பலரையும் படுகொலை செய்தது. இதனையடுத்தே ஹமாஸ் எதிர்ப்புப் போக்கை பலஸ்தீன அதிகார சபையும் பின்பற்றத் தொடங்கியது.
எனினும், இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன அதிகார சபையிடம் இருந்து வந்த பல்பக்கத் தாக்குதல்களையும் அல்லாஹ்வின் கிருபையால் வெற்றிகரமாக எதிர்கொண்டு, பலஸ்தீனிலும் வெளிநாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களைக் கொண்டதாக ஹமாஸ் அமைப்பு வீறுநடை போட்டே வருகிறது.


உலகெங்கிலும் வாழும் முஸ்லிமல்லாத மாற்று மத சகோதாரர்களும்கூட  ஹமாஸின் கொள்கை, கோட்பாடுகள், போராட்ட நியாயங்கள் என்பவற்றை ஆராய்ந்து, ஹமாஸ் அமைப்பின் ஆதரவாளர்களாக திகழும் வண்ணம் ஹமாஸ் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது என்றால் மிகையாகாது.
கண்மூடித்தனமாக இஸ்ரேலின் ஆக்கிரமிப்புகளுக்கு ஆதரவு வழங்கும் நாடுகளில் ஆயிரக்கணக்கான பிரஜைகள் தமது அரசாங்கத்தை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட்டு, இஸ்ரேல்-பலஸ்தீன் முறுகலுக்கு நியாயமான வகையில் தீர்வுகளைக் காண வலியுறுத்தக் கூடியளவு ஹமாஸ் அமைப்பு சர்வதேச ரீதியில் மக்கள் அபிமானங்களை வென்றுள்ளது. 

கேள்வி: தற்கொலைத் தாக்குதல்கள், மனித வெடிகுண்டுத் தாக்குதல்கள் என்பவற்றை தாக்குதல் உத்தியாக கைக்கொண்ட வகையில் ஹமாஸ் அமைப்பின் நன்மதிப்பு சிதைந்து போனது. இது பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?


பலஸ்தீன மக்களை படுகொலை செய்யாத எந்தவொரு சமூகத்தின் மீதும் ஹமாஸ் இதுவரை தாக்குதல்களைத் தொடுக்கவில்லை.
இனிமேலும் தொடுக்காது. ஒரு கட்டத்தில் அப்பாவிப் பலஸ்தீன பொதுமக்களின் மீதான இஸ்ரேலின் மட்டு மீறிய அத்துமீறல்கள் பொறுத்துக் கொள்ள இயலாத அளவுக்கு அதிகரித்தன. அதேநேரம் பலஸ்தீன அதிகார சபையும் இஸ்ரேலும் இணைந்து மேற்கொண்டிருந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் ஹமாஸ் அமைப்பின் சுயாதீன இயக்கத்தின் வீரியத்தைக் குறைத்திருந்தன.


இவ்வகையான இக்கட்டான ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் தவிர்க்க முடியாத ஒரு தாக்குதல் உத்தியாக தற்கொலைத் தாக்குதல்களை நிகழ்த்த வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு ஹமாஸ் அமைப்பு தள்ளப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் அடாவடித்தனங்களை பலஸ்தீன அதிகார சபை கண்டும் காணாது போல் இருப்பதைப் போன்று எம்மால் இருந்து விட முடியாது.

பலஸ்தீனிய அப்பாவி மக்களின் உயிர்களை இஸ்ரேல் ஒரு பொருட்டாகவும் மதிப்பதில்லை. அவர்களைப் போன்ற இழிவான போர் உத்திகளை நாம் கையாளவில்லை.


இஸ்ரேல் எனும் நாடானது பலஸ்தீன அப்பாவி பொதுமக்களின் பிணங்களின் மீது கட்டப்பட்டது என்பதை நாம் மாத்திரமல்ல உலக நாடுகள் அனைத்தும் நன்கறிந்தே வைத்துள்ளன. எனினும், இஸ்ரேலைப் போன்று உயிர்களை மதிக்காத, சட்டை செய்யாத கேடுகெட்ட போக்கை நாம் எமது அமைப்பில் கையாளவில்லை. இக்கட்டான சூழ்நிலை ஒன்றின்போது வேறு வழிகள் முற்றிலும் அடைக்கப்பட்டிருந்த தருணம் நாம் தற்கொலைத் தாக்குதல்கள் நடாத்த வேண்டிய பலவந்த நிலைக்கு ஆளானோம்.


இன்று இஸ்ரேலிய எதிர்ப்பு களத்தில் பல்வேறு வழிமுறைகளை எம்மால் கைக்கொள்ளக் கூடிய சுயாதீன நிலையை நாம் ஏற்படுத்திக் கொண்டுள்ளோம். இனிமேலும் கடந்த காலங்களைப் போன்று தற்கொலை தாக்குதல்களை வழிமுறையாக கைக்கொள்ளப் போவதில்லை என்பதில் நாம் உறுதியாகவுள்ளோம். தற்கொலைத் தாக்குதல்கள் என்பன எமது அமைப்பின் வளர்ச்சிப் படிமுறைகளில் நாம் கடந்து வந்த கசப்பான படிகளாகும்.

கேள்வி: ஹமாஸ் அமைப்பின் கொள்கைகள் மாற்றியமைக்கப்பட்டது ஏன்?
எமது கொள்கைகளை நாம் ஒருபோதும் மாற்றவில்லை. மாறாக, தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருந்த சில சரத்துக்களை நாம் மேலும் தெளிவாக விளக்க முயன்றுள்ளோம். உதாரணமாக, யூதர்களை எதிர்த்துப் போராடுவதே ஹமாஸ் அமைப்பின் இலக்கு என்பது தப்பபிப்பிராயம். ஆக்கிரமிப்பு இஸ்ரேலை எதிர்த்துப் போராடுவதும் தாயகத்தை மீட்பதுமே உண்மை நிலைவரம். பலஸ்தீன மக்களின் நலன்களைக் கருத்திற்கொண்ட வகையில் எமது கொள்கை சரத்துக்கள் சிலவற்றை முன்னுரிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். போர் நிறுத்தத்தின் பாதக விளைவுகளை விளக்கியுள்ளோம்.


கேள்வி: ஹமாஸ் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டு ஏறத்தாழ 30 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் எவ்வகையான இலக்குகள் நிறைவேறியுள்ளன?
இஸ்ரேல், பிராந்திய மற்றும் சர்வதேச நாடுகள் இணைந்து தாயக மீட்புப் போராட்ட வேட்கையை பலஸ்தீன மக்களிடம் இருந்து பிடுங்கி எறிய பல வகைகளிலும் முயற்சித்த போதும் அத்தீபத்தை அணையாது ஒளிர்விக்கச் செய்வதில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். பலஸ்தீனர்களின் உரிமைப் போராட்டத்தை நியாயப்படுத்தியுள்ளோம்.

இஸ்ரேலினால் அடக்குமுறைகளுக்குள்ளான பலஸ்தீன மக்களின் நம்பிக்கைப் பெருவெளியாக நாம் திகழ்கிறோம்.

சியோனிஸ்ட்கள் என்பவர்கள் எமது தாயகத் திருடர்கள் என்பதை பல தலைமுறையினருக்கு பயிற்றுவித்து, சியோனிஸ்ட்கள் ஒரு போதும் பலஸ்தீனர்களின் நேசர்களாக விளங்க மாட்டார்கள் என்பதையும் புரிய வைத்துள்ளோம். அதேவேளை யூதம், சியோனிசம் இடையேயான வேறுபாடுகளை செவ்வனே கற்றுக் கொடுத்துள்ளோம்.
பலஸ்தீன மக்களின் வேட்கையே ஹமாஸின் வேட்கை. ஹமாஸ் ஒரு போதும் அதன் கொள்கைகளில் பிறழ்வடையாது. மூன்று தசாப்தங்களுக்கு பின்னரான ஹமாஸின் வரலாற்றுப் பக்கங்களே இவையாகும்.

கேள்வி: ஹமாஸ் அமைப்பின் எதிர்காலப் போக்கும் அதன் இலட்சியமும் எவ்வாறாக அமையும்?

‘பலஸ்தீன மக்களின் சுதந்திரமும் தாயக மீட்புமே ஹமாஸின் நாடித்துடிப்பு.’

ஹமாஸ் அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் அல்யஸவ்ரி அவர்களுடனான நேர்காணல். ஹமாஸ் அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் அல்யஸவ்ரி அவர்களுடனான நேர்காணல். Reviewed by Madawala News on May 12, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.