முஸ்லிம்கள் நாமும் இலங்கையர்தான்! கொஞ்சம் தெளிவு பெற்றுக் கொள்ளுங்கள்.


கள்ளத்தோனிகள்; வந்தேறுகுடிகள்; சிறுபான்மையினர்கள்; முஸ்லிம்கள்.
இவை அனைத்தும் ஒத்தகருத்துள்ள
சொற்களோ என்றே எண்ணத்தோன்றுகின்றது. முஸ்லிம்களைச் சிறுபான்மையினர் என்று திரும்பத்திரும்ப அடையாளப்படுத்துகின்ற போதகர்கள் எம் சமூகத்துக்குள் வலியுறுத்தும் கருத்தும் அதுதான்.

கள்ளத்தோனிகள்போல், வந்தேறுகுடிகள்போல், சிறுபான்மையினரான முஸ்லிம்களும் கொஞ்சம் ஒதுங்கி நிற்கவேண்டும்; அவர்களுக்கென்று வரையறுக்கப்பட்ட உரிமைகள் எதுவும் கிடையாது; கிடைப்பதெல்லாம் சலுகைகளும், தானங்களும்தான்; கிடைப்பதைப் பெற்றுக்கொண்டு, "நன்றிகள், ஐயா!" கூறிக்கொண்டு கொஞ்சம் ஓரமாய்ப்போய் நிற்கவேண்டும் -- இதுவே இவர்களின் போதனைகளில் தெரிகின்றது.

இவ்வாறான தாழ்வுமனப்பான்மையுடன் வளர்க்கப்படுகின்ற ஒரு சமூகம் ஒருபோதும் இந்த நாட்டுக்கு எதுவித பங்களிப்பும் செய்யாது; அது ஒருபோதும் சுயமரியாதையுடன் வாழாது; அதன் உரிமைகள் மறுக்கப்பட்டால் அதுபற்றி ஒருபோதும் கேள்விகள் எழுப்பாது.

எனவே, முதலில், நாங்கள் யார்? எமக்கிருக்கின்ற உரிமைகள் என்ன? போன்ற கேள்விகளில் நாங்கள் தெளிவுபெற்றிருக்கவேண்டும்.

முஸ்லிம்கள் நாமும் இலங்கையர்தான்! அதாவது நாங்கள் இந்த மண்ணை சக மதக்குளுக்களுடன் பகிர்ந்துகொள்கின்றவர்கள்.

எல்லா நாடுகளிலும் இருப்பதைப்போல, இந்த நாட்டிலும் எல்லோருக்கும் பொதுவான பொதுச் சட்டங்கள் இருக்கின்றன. இந்தப் பொதுவான சட்டங்களை இலங்கைவாழ் எவரும் அனுசரித்துப் போகவேண்டும். மீறினால் அவர்கள் எவரும் சட்டத்தின் பிடியில் சிக்கநேரிடும். நாட்டின் பொதுவான சட்டங்களை அனுசரித்துப்போகின்ற மதக்குழுக்கள் ஒவ்வொன்றிற்கும், தமது தனிப்பட்ட வாழ்வில், பொதுவாழ்விற்குப் பங்கம் வராத வகையில் தமது மதத்தையும் கலாச்சாரத்தையும் பின்பற்றும் உரிமை இருக்கின்றது. இது இந்நாட்டின் அரசியல் அமைப்பின் மூலமாகவே மதக்குளுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு உரிமை. இந்த உரிமை முஸ்லிம்களுக்கும் உண்டு. துரதிர்ஷ்டவசமாக, இந்த உரிமை பற்றிய சரியான புரிதல் முஸ்லிம் மதப்போதகர்கள் பலரிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

இலங்கைவாழ் முஸ்லிம்கள் முன்னொருபோதும் இன்றைய இந்த "வந்தான்-வரத்தான்" மனப்பான்மையுடன் வாழ்ந்ததே இல்லை. எம் முன்னோர் எவரும் அவ்வாறு போதிக்கவுமில்லை. இந்நாட்டு முஸ்லிம்கள் எப்போதும் சுயமரியாதையும் தன்னம்பிக்கையும் உள்ள ஒரு சமூகமாகவே வாழ்ந்திருக்கின்றார்கள். அதன்காரணமாகவே, அவர்களால், இந்தத் தேசத்தின் இருப்பை உறுதிப்படுத்துவதிலும், வளர்ச்சியைத் தோற்றுவிப்பதிலும் கடந்த காலங்களில் காத்திரமான பங்களிப்பைச் செய்யமுடிந்தது. இதற்கான ஆதாரங்கள் போர்த்துக்கேய ஆக்கிரமிப்பு காலம் முதல் புலிப் பயங்கரவாத காலம் வரை நிறைந்து கிடக்கின்றன.

ஆனால், இன்றைய முஸ்லிகளோ, கைகளைக் கட்டிக்கொண்டு, தலைகளில் இருக்கின்ற தொப்பியைக் கழட்டி கமக்கட்டில் வைத்துக்கொண்டு, வாய்மூடி, ஒதுங்கி நிற்கும்படி ஊக்குவிக்கப்படுகின்றார்கள். முஸ்லிம்களைச் சிறுபான்மையினர் என்று திரும்பத்திரும்ப அடையாளப்படுத்துவதன் நோக்கமும் விளைவும் அதுவே.

இந்த நாடு இலங்கைவாழ் மக்கள் அனைவருக்கும் சொந்தமான ஒரு நாடு. அது முஸ்லிம்களுக்கும் சொந்தம். அதன் பாதுகாப்பில், அதன் வளர்ச்சியில் ஒவ்வொரு முஸ்லிம்களும் அக்கறை காட்டவேண்டும்; பங்கெடுக்கவேண்டும். ஆனால், "கள்ளத்தோனிகள் - வந்தேறுகுடிகள் - சிறுபான்மையினர்கள்" மனப்பாங்குடன் இருந்துகொண்டு, சுயத்தை இழந்துவிட்டு, தொப்பியைக் கழட்டி கமக்கட்டில் வைத்துக்கொண்டு அந்தப்பங்களிப்பைச் செய்யமுடியாது. தனிப்பட்ட சுயத்தை இழந்தவர்களால், பொதுச்சமூகத்தின் இருப்பிற்குப் பங்காற்ற முடியாது. எனவே முதலில் நாங்களே எங்களைச் சிறுபான்மையினர் என்று தொடர்தேற்சியாக அடையாளப்படுத்துவதை நிறுத்தவேண்டும்.

இந்த நாடு எல்லாப்பக்கங்களிலுமிருந்து சுரண்டப்பட்டுக்கொண்டிருக்கின்றது. வரி என்ற பேரில் கொள்ளை அடிக்கப்படுகின்றது; அது அப்படியே மேலைத்தேய முதலாளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. பானையிலே சோறு இல்லாததால், வருடந்தோறும் இலட்சக்கணக்கான மக்கள் வெளிநாடுகள் நோக்கிப்படையெடுத்துக்கொன்டிருக்கின்றார்கள். இந்த நாட்டில், வறுமையும் குற்றச் செயல்களும் தாண்டவமாடுகின்றன.

இந்த அவலங்களைப் போக்குவதில் முஸ்லிம்கள் அக்கறை காட்டவேண்டும்; பங்களிப்புச் செய்யவேண்டும். அக்கறை காட்டாதவர்கள், பங்களிப்புச் செய்யாதவர்கள்தான் வெறும் தண்டச்சோறுகள்.

ஆகவே முஸ்லிம்களால் எவ்வாறான பங்களிப்புகளைச் செய்யமுடியும் என்ற கேள்வியை நாங்கள் அவசியம் எழுப்பவேண்டும்.

மேலே நான் சுட்டிக்காட்டிய அவலங்களை இஸ்லாத்தினால் மாத்திரம்தான் தீர்க்க முடியும். எனவே இந்நாட்டு மக்களின் பொதுவான பிரச்சினைகளுக்கு இஸ்லாமியத் தீர்வுகளை நாம் முன்வைக்கவேண்டும். ஆனால், யாரவது அவ்வாறு செய்தால், "வாயைப் பொத்துங்கள்; இது முஸ்லிம்களின் நாடுகள் அல்ல; நாங்கள் இங்குள்ள சிறுபான்மையினர்கள்; நீங்கள் இந்த நாட்டை இஸ்லாமிய ஆக்கிரமிப்பு செய்ய முனைகின்றீர்கள்; இனங்களுக்கிடையான முறுகல்களைத் தோற்றுவித்துவிடுவீர்கள்" என்று ஏதோவொரு வசனம் பேச ஆரம்பித்து விடுகின்றார்கள் இந்தப் போதகர்கள் சிலர்.

ஆனால், அதே போதகர்கள்தான் மிம்பர்களில் நின்றுகொண்டு, "இம்மை மறுமைக்கான வெற்றியை அல்லாஹ் இந்த தீனிலேதான் வைத்திருக்கின்றான்," என்று தினமும் மீட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இதற்குரிய அர்த்தம்தான் இந்நாட்டு மக்களை ஆட்டுவிக்கும் அவலங்களை இஸ்லாத்தினால் மாத்திரம்தான் தீர்க்க முடியும் என்பது. புரியாமலே பேசிக்கொண்டிருக்கின்ற இவர்கள் புரிந்து பேசுகின்றவர்கள் மீது எரிந்துவிழுகின்றார்கள்!

இன்னும் சிலரோ இந்நாட்டின் "தேசிய நலனில் அக்கறை கொள்வோம்," என்று விமானமேறிப், பறந்து திரிந்து பேசுகின்றார்கள். இதற்குரிய அர்த்தம்தான் இந்நாட்டு மக்களை ஆட்டுவிக்கும் பிரச்சினைகள் அனைத்திற்கும் இஸ்லாம்தான் தீர்வு என்பது. புரியாமலே பேசிக்கொண்டிருக்கின்ற இவர்கள் புரிந்து பேசுகின்றவர்கள் மீது எரிந்துவிழுகின்றார்கள்!

இந்த நாட்டுப் பிரஜைகள் ஒவ்வொருவருக்கும் சிந்திக்கவும், தாம் சிந்திக்கின்ற கருத்துக்களைப் பொதுவெளியில் முன்வைக்கவும் உரிமை உண்டு. இந்நாட்டு மக்களை ஆட்டுவிக்கும் பிரச்சினைகளுக்கான இஸ்லாமியத் தீர்வுகளை முன்வைப்பது வெறுமனே சிந்தனைகளைப் பொதுவெளியில் முன்வைப்பதுதான். சிந்தனைகளை முன்வைப்பது ஏதோ பெளதீக ரீதியான ஒரு ஆக்கிரமிப்பு என்பதுபோல் சிலர் அலட்டிக்கொள்வது இவர்களின் சிந்தனைத் தெளிவின்மையையே காட்டுகின்றது.

இந்த நாட்டை யார் ஆட்சி செய்கின்றார்கள் என்பதில் முஸ்லிம்களுக்கு எதுவித அக்கறையும் இல்லை. அது மகிந்தவாக இருக்கட்டும்; இல்லை மைத்திரியாக இருக்கட்டும்; ஏன் அது ஞ்சான சாரவாகவே இருந்து விட்டுப்போகட்டும். ஆனால் அது எப்படி ஆளப்படவேண்டும் என்பதில் எமக்கு அக்கறை உண்டு. அந்த அக்கறை இந்த நாட்டின் ஆட்சி முறைமையினால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற ஒவ்வொரு பெளத்தன், ஹிந்து, கிறிஸ்தவன், முஸ்லிம் மீதும் எமக்கிருக்கின்ற அக்கறை.

வட்டிப் பொருளாதார முறைமை இந்நாட்டில் இருக்கும் வரைக்கும் இந்நாட்டில் வறுமை ஒழியாது; வறுமை இருக்கும் வரைக்கும் அதனோடு தொடர்புள்ள ஒழுக்கவீழ்ச்சி, குற்றச் செயல்கள் போன்றவை குறையாது. இந்நாட்டை ஆட்சி செய்பவர்கள் எந்த மதத்தவராக இருந்தாலும் அவர் முதலாளித்துவத்தின் முகவராக இருக்கும் வரைக்கும் இந்த நாட்டிலே இறைமை இருக்காது.

(உதாரணமாக) வட்டிப் பொருளாதார முறைமையை ஒழித்து ஒரு இஸ்லாமியப் பொருளாதார முறைமையை நிறுவலாமே என்று ஆலோசனை சொல்பவன் இலங்கையை முஸ்லிம்களுக்குத் தாருங்கள் என்று கேட்கவில்லை. அவன் ஒட்டுமொத்த இலங்கைச் சமூகத்தின் பொருளாதாரப் பிரச்சினைக்கும் ஒரு தீர்வுச் சிந்தனையைச் சொல்கின்றவன்.

(இஸ்லாமியத்) தீர்வுச் சிந்தனைகள் இருக்கின்றன. அவற்றிலேதான் அனைத்து மனிதர்களதும் பிரச்சினைகளுக்கான தீர்வு இருக்கின்றது. அவற்றை ஏற்பதும் மறுப்பதும் இந்நாட்டு மக்களின் கைகளில் உள்ள விடயம். நாம் அதை முஸ்லிம்கள் யார்மீதும் திணிக்கவில்லை. (இஸ்லாமியத்) தீர்வுச் சிந்தனைகளை ஏற்பவர் நன்மை அடைவார்; மறுப்பவர் நஷ்டமடைவார். இது முஸ்லிம்களின் அறிவியல் நிலைப்பாடு. அவ்வளவுதான்.
முஸ்லிம்கள் நாமும் இலங்கையர்தான்! கொஞ்சம் தெளிவு பெற்றுக் கொள்ளுங்கள். முஸ்லிம்கள் நாமும் இலங்கையர்தான்!  கொஞ்சம் தெளிவு பெற்றுக் கொள்ளுங்கள். Reviewed by Madawala News on May 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.