20ஆவது திருத்தம்: நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நீக்கமும், முஸ்லிம்களின் எதிர்காலமும்ஆணையும் பெண்ணையும் உருவாக்குவதைத் தவிர மற்றெல்லாவற்றையும்
செய்வதற்கான வல்லமையைக் கொண்ட அரசியலமைப்பு ஏற்பாடு என்று வர்ணிக்கப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையின் நல்ல விடயங்களை சிறுபான்மைச் சமூகங்கள் குறிப்பாக முஸ்லிம்கள் முழுமையாக சுகிப்பதற்கு இடையிலேயே, அந்த முறைமையை மாற்றுவதற்கான முனைப்புக்கள் உச்சக் கட்டத்தை அடைந்திருக்கின்றன.

இதற்கு முன்னர் ஆட்சிக்கு வந்த பல ஜனாதிபதிகள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக வாக்குறுதியளித்தே ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினார்கள் என்றாலும் அதனை நீக்குவது போல பாசாங்கு செய்தார்களே தவிர உண்மைக்குண்மையாக நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கவில்லை. மாறாக, தமக்கிருந்த அதிகாரங்களின் வரம்பை மேலும் அதிகரித்துக் கொண்டார்கள். நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை கொண்டு வந்த ஜே.ஆர்.ஜயவர்தனவுக்குப் பிறகு அதனை உச்சபட்சமாக பயன்படுத்தியவராக மஹிந்த ராஜபக்ஷ நோக்கப்படுவதுண்டு.

2015 ஜனாதிபதித் தேர்தலில், நிறைவேற்றதிகாரத்தை ஒழித்தல் உள்ளடங்கலாக பல விஞ்ஞாபனங்களோடு களத்தில் குதித்த மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றார். ஒரு வித்தியாசமான அரசியல் தலைவராக நோக்கப்படும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்பிருந்தவர்களுக்கு மாற்றமான சில பண்பியல்புகளை வெளிப்படுத்தி வருகின்றார்.

மிக முக்கியமாக, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனக்கிருந்த சில அதிகாரங்களை அவர் குறைத்திருந்ததுடன், நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தொடர்பில் தொடர்ந்தும் சாதகமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றார்.

இந்நிலையில், அசியலமைப்பில் 20ஆவது திருத்தம் என்ற பெயரில் இன்னுமொரு திருத்தத்தைக் கொண்டு வந்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் இப்போது இலங்கையின் அரசியல் களத்தில் பேசப்படுகின்றது. அத்துடன், மக்கள் விடுதலை முன்னணி, நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதை மையமாகக் கொண்ட தனிநபர் பிரேரணை ஒன்றையும் பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்திருக்கின்றது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவதற்கு, முஸ்லிம் கட்சிகள் உட்பட சிறு கட்சிகள் முழுமையான எதிர்ப்பை தெரிவிக்கும் என்ற ஊகங்கள் வெளியாகத் தொடங்கியிருந்தாலும், வழக்கம் போல முஸ்லிம் கட்சிகள் கண்ணை மூடிக் கொண்டு இதற்கும் கையை உயர்த்தி ஆட்சியாளர்கள் மீதான தமது நன்றி விசுவாசத்தைக் காட்டி விடுவார்களோ என்ற நியாயமான அச்சம் முஸ்லிம் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு தற்போது ஏற்பட்டிருக்கின்றது. எனவே அது பற்றி பேச வேண்டிய தேவைப்பாடு எழுந்துள்ளது.

புதிய முன்னெடுப்பு
இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் அரச அதிகாரத்தை மூன்று வகையாக பிரிக்க முடியும். சட்டவாக்க அதிகாரம், நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை அதிகாரம் என்பவையாகும். இந்த அரச அதிகாரத்தை எவ்வாறு பாவிக்க வேண்டுமென்று மக்கள் விதந்துரைக்கின்றார்களோ அவ்வாறு மாத்திரமே அதனைப் பயன்படுத்த முடியும் என்று விடயமறிந்தோர் கூறுகின்றனர்.

அரசியலமைப்பின் சரத்து 4(ஏ) ஆனது  நிறைவேற்று அதிகாரத்தை மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதிக்கு வழங்கியிருக்கின்றது. இதேவேளை 13ஆவது திருத்தமானது மறைமுகமாக அந்த அதிகாரத்தின் ஒரு பகுதியை மாகாணங்களின் ஆளுநருக்கு வழங்கியுள்ளது. மக்களின் சம்மதமின்றி இது வழங்கப்பட்டதாக சர்ச்சைகள் ஏற்பட்டதையடுத்து, ஜனாதிபதியின் பிரதிநிதியாகவே மாகாண ஆளுநர்கள் இருக்கின்றார்கள் என்று நீதிமன்றம் கூறியிருந்தது.
இவ்வாறான நிலையில், (நிறைவேற்று அதிகாரத்தை கொண்ட) ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பாக மைத்திரிபால சிறிசேன தொடர்ச்சியாக கருத்துக்களை முன்வைத்து வருகின்றதொரு சூழ்நிலையில், பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தை மேற்கொள்வது தொடர்பான தனிநபர் பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்திருக்கின்றது.

இருபதாவது திருத்தம் என்பது இதற்கு முன்னர் இரு தடவைகள் முன்வைக்கப்பட்ட வெற்றி பெறாமல் போனது. நல்லாட்சி அரசாங்கம் நிறுவப்பட்ட பின்னர் 2015 ஜூன் மாதத்தில் முதற்றடவையாக 20ஆவது திருத்தத்தை அரசாங்கம் கொண்டு வந்தது. எல்லை மீள்நிர்ணயம், புதிய தேர்தல் முறைமை உள்ளிட்ட பலதரப்பட்ட விடயங்கள் இதில் இருந்தன. ஆனால் அது வெற்றியளிக்கவில்லை.
அதன்பிறகு கடந்த வருடம் ஜூலை மாதத்தில் மீண்டும் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது. மாகாண சபைகளுக்கு ஒரே நாளில் தேர்தல் நடத்துதல் என்ற தோரணையில் மறைமுகமாக வேறு பல உப  நோக்கங்களையும் கொண்டதாக முன்னகர்த்தப்பட்ட இந்த திருத்தம் ஒப்புதலுக்காக மாகாண சபைகளுக்கு அனுப்பப்பட்ட போது பல சபைகள் தோற்கடித்தன. வட மாகாண சபை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே நிராகரித்தது.

ஆனால் முஸ்லிம் முதலமைச்சரையும் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளையும் பெரும்பான்மையாகக் கொண்டிருந்த கிழக்கு மாகாண சபையில் ஏனென்று தெரியாமலேயே அதற்கு ஆதரவளித்தனர் என்பது இலகுவில் மறந்துவிடக் கூடிய சங்கதியல்ல. எவ்வாறிருப்பினும் உயர்நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானத்தால், 20இனை கைவிட வேண்டியதாயிற்று.

அதன்பிறகு இலங்கையின் அரசியலமைப்பையே முழுமையாக மறுசீரமைத்து புதியதொரு அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டது. ஆனால் நடப்பு அரசியல் நிலைவரம் என்பது நினைத்ததை முடிப்பதற்கு ஏதுவானதல்ல என்ற சூழலில், 20ஆவது திருத்தம் போன்ற தனித்தனியான திருத்தங்களை மேற்கொள்வதில் அரசாங்கம் முன்னிற்கலாம் என்று ஊகிக்க முடிகின்றது.

சிறுகட்சிகளின் நிலை
முஸ்லிம் கட்சிகள் உள்ளடங்கலாக சிறு கட்சிகள் இந்த திருத்தத்தை எதிர்க்கும் சாத்தியமிருக்கின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம், 20ஆவது திருத்தத்தை தமது கட்சி முற்றாக எதிர்க்கும் என்று தெரிவித்திருக்கின்றார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியுதீனும் இவ்வாறான கருத்தையே கொண்டிருப்பதாக தெரிகின்றது. ஆனால் தேசிய காங்கிரஸ் தலைவரது நிலைப்பாடும் இதுவாகவே இருக்கலாம் ஆனால் அவரும். ஐக்கிய மக்கள் (முஸ்லிம்) கூட்டமைப்பின் தலைவரும் இன்னும் அபிப்பிராயங்களை முன்வைக்கத் தொடங்கவில்லை.

மு.கா., ம.கா., தமிழ் முற்போக்கு முன்னணி, ஈ.பி.டி.பி. உள்ளிட்ட சிறு கட்சிகள் இந்த திருத்தத்தை வெளிப்படையாகவே எதிர்க்கும் என்று அரசியல் நோக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதேநேரம் சிறு(பான்மை) கட்சித் தலைவர்களாக மனோ கணேசன், றவூப் ஹக்கீம் றிசாட் பதியுதீன் ஆகியோர் பிரதமரைச் சந்தித்து இவ்விடயமாக பேசவிருக்கின்றார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எது எவ்வாறாயினும், முஸ்லிம் கட்சிகள் எல்லாம் அதிகாரத்தில் உள்ள போது, முஸ்லிம்களுக்கு பாதகமான அல்லது சாதகமில்லாத பல திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்களின் கவனத்தை அதன்பால் குவித்து விட்டு பிறகு கடைசிக் கட்டத்தில் ஆதரவளித்திருக்கின்றார்கள் என்பதே முஸ்லிம் மக்களின் அனுபவமாகும்.

எனவே, முஸ்லிம் கட்சிகளைப் பொறுத்தமட்டில் நலன்களின் மோதல் (ஊழகெடiஉவ ழக iவெநசநளவள) அடிப்படையிலேயே அவர்கள் தமது நிலைப்பாடுகளை எடுத்து வருவதாக சொல்ல முடியும். அதாவது தமது அரசியல் எதிர்காலம், கட்சியின் சொந்த நலன், ஆட்சியாளர்கள் மீதான அதீத விசுவாசத்தை வெளிப்படுத்த வேண்டிய தேவை என்பன, முஸ்லிம்களின் அபிலாஷையை விட மேலாக தெரிகின்ற போது, அரச சார்பு நிலைப்பாடுகளை எடுத்து வருவதையே காண்கின்றோம்.
எனவே, முஸ்லிம் பொது மக்கள் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிப்பு பற்றி மட்டுமல்ல, அதிகார பரவலாக்கம், சமஷ்டி, இறைமை, சுயநிர்ணயம், தனிநாடு உருவாக்கம்  என்பவற்றில் உள்ள சூட்சுமங்களை எல்லாம் கற்றறிந்து கொள்ள வேண்டியிருக்கின்றது.

நாடு துண்டாடப்படுமா?
நிறைவேற்றதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டால் நாடு துண்டாடப்படும் என்று ஒரு தரப்பு எடுத்த எடுப்பில் கூறுகின்றது. இது உண்மையில் உடனடியாக நடைமுறைச் சாத்தியமானதல்ல என்பதுடன் நாடு எவ்வாறு துண்டாடப்படும் என்பதையும் அந்த தரப்பினர் தெளிவாகக் கூறவில்லை. எடுத்த எடுப்பில் தமிழர்களுக்கு எதிரான தோரணையில் கருத்துத் தெரிவித்து சிங்கள மக்கள் மத்தியில் காலூன்றவே அவர்கள் விரும்புகின்றார்கள். ஆனால் அதன் சாத்தியம், சாதக பாதங்கள் பற்றி ஆராய வேண்டிய தேவை முஸ்லிம்களுக்கு இருக்கின்றது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை காணப்படுமாயின், முஸ்லிம்களுக்கு பாராளுமன்றத்தில் பலம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மாகாண சபைகளில் அதிகாரம் இருந்தாலும் இல்லையென்றாலும் கடைசியில் உயர்ந்தபட்;ச நிறைவேற்றதிகாரத்தை கொண்டுள்ள ஜனாதிபதி விரும்பினால் அந்த அதிகாரத்தை பயன்படுத்தி முஸ்லிம்களுக்கு ஏதாவது நல்லது செய்ய முடியும். முஸ்லிம்களின் ஆதரவை பெறுவதற்கான ஜனாதிபதிகள் அந்த அதிகாரத்தை நமக்குச் சார்பாக பயன்படுத்தலாம்.
ஆனால் அந்தப் பலம் இல்லாது போனால் அதுவும் புதிய தேர்தல் முறைமையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறையும் சூழலில் ஜனாதிபதிக்கும் நிறைவேற்றதிகாரம் இல்லாது போய் விடுமாக இருந்தால் அவ்வாறான நன்மைகள் முஸ்லிம்களுக்கு கிடைக்காது. அந்த அதிகாரம் எங்கெங்கல்லாம் பகிரப்படுகின்றதோ அங்கங்கெல்லாம் முஸ்லிம்களுக்கு அதிகாரம் இருந்தாலொழிய வேறு எந்த வழியிலும் எதனையும் சாதிக்க முடியாத நிலை ஏற்படும் என்று சுட்டிக் காட்டப்படுகின்றது.

13அவது திருத்தத்தின் படி மாகாண சபைகளின் ஆளுநர்களுக்கு அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும் அது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியால் கொடுக்கப்பட்ட அதிகாரமாகவே இருந்தது. அதனது மூக்கணாங்கயிறு ஜனாதிபதியிடம் இருந்தது எனலாம். எனவே நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டால் ஜனாதிபதியின் மூலம் முஸ்லிம்கள் சாதித்துக் கொள்ளக் கூடிய ஒரு சில விடயங்களையாவது செய்ய முடியாத நிலைமை ஏற்படும் என்ற பொதுவான கருத்து காணப்படுகின்றது.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டால் நாடு துண்டாடப்படும் என்பதில் நேரடியான உண்மைகள் இல்லை. ஆயினும், 20ஆவது திருத்தத்தின் ஊடாக அல்லது அரசியலமைப்பு மறுசீரமைப்பின் ஊடாக அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்படும் சாத்தியம் இல்லாமலில்லை. அவ்வாறு நடைபெற்றால் ஜனாதிபதியிடம் இருந்து நிறைவேற்று அதிகாரத்தை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பெற்றுவந்த மாகாண ஆளுநர்களுக்கு அவ்வகையான உயர் அதிகாரம் (அதிகாரப் பகிர்வின் ஊடாக) நேரடியாகவே கிடைக்கும்.

இச்சூழலில் வடக்கையும், கிழக்கையும் இணைக்கும் முயற்சியில் தமிழ் தேசியம் வெற்றி பெறுமாக இருந்தால் இணைந்த வடகிழக்கின் ஆளுநருக்கும் அவ்வதிகாரம் வந்து விடும். எனவே இது முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் நல்லதல்ல என்று மாற்றுக் கருத்தாளர்கள் கருதுகின்றனர். உண்மையில், அவ்வாறு அதிகாரம் வருவதாலும் நாடு பிரிபடாது. அதிகாரப் பரவலாக்கம் திறந்த மனதுடன் அமுல்படுத்தப்படுமாக இருந்தால் மக்களுக்கு நன்மைகள் கிடைப்பதற்கான நிகழ் தகவுகளே அதிகமாக உள்ளன என்ற கருத்தும் இருக்கின்றது.

இருப்பினும், வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்ட பின்னர், சமஷ்டி போன்ற ஒரு தீர்வு வழங்கப்படுமாயின் சுயநிர்ணயத்தை அமுல்படுத்த மத்திய அரசாங்கம் தடை விதிக்குமாக  இருந்தால், அவ்விடயத்தை மாநில அரசாங்கம் பெரிதுபடுத்தி சர்வதேச மயமாக்கம் செய்யலாம். அந்த நிலைமை தொடருமாக இருந்தால் சர்வதேச ஆதரவுடன் நீண்டகாலத்தில் வடகிழக்கோ அல்லது வேறு எந்த மாகாணமோ பிரிந்து செல்ல முற்படக் கூடும் என்ற உலக அனுபவத்தின் அடிப்படையிலேயே இதற்கு சிங்கள, முஸ்லிம் செயற்பாட்டாளர்களில் ஒரு பகுதியினர் எதிர்ப்பு தெரிவிப்பதாகக் குறிப்பிட முடியும்.

ஆதரவும் எதிர்ப்பும்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்தலை பிரதான கருப்பொருளாகக் கொண்ட 20ஆவது திருத்தத்தை, அதன் உள்ளடக்கங்களைப் பொறுத்து சில சிங்கள கட்சிகளும் அரசியல்வாதிகளும் ஆதரிக்கலாம், சில கட்சிகள் எதிர்க்கும். அநேகமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரிக்கும் என்றே ஊகிக்க முடிகின்றது. அதற்கான காரணங்களும் உள்ளன. அதுபற்றி விபரிக்கத் தேவையில்லை.

20ஆவது திருத்தம் கொண்டுவரப்படும் என்றோ அதன்மூலம் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்றோ அரசாங்கம் இன்னும் அறுதியும் உறுதியுமாக தேதி குறிப்பிட்டு அறிவிக்கவில்லை. ஆனால் அதற்கு சாத்தியங்கள் இல்லாமலும் இல்லை.

பௌத்த உயர்பீடங்கள் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பை ஆட்சேபிக்கும் என்று தெரிகின்றது. அதேபோல் இரு பிரதான முஸ்லிம் கட்சிகள் உள்ளடங்கலாக இதனால் பாதிக்கப்படக் கூடிய சிறுகட்சிகள் பல இதனை எதிர்க்கும் என்பதும் வெளிப்படையாக புலனாகின்றது. குறிப்பாக முஸ்லிம் கட்சிகள் மற்றும் சிறுகட்சிகளின் தலைவர்கள், அரச உயர்மட்ட தலைவர்களை சந்தித்து உத்தேச 20ஆவது திருத்தம் குறித்து கலந்தாலோசித்து, தமது நிலைப்பாடுகளை தெரிவிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.

அரசியலமைப்பை துண்டுதுண்டாக திருத்தாமல் தேசிய விடயங்களை முழுமையாக உள்ளடக்கிய விதத்தில் முழுமையான அரசியலமைப்பு மறுசீரமைப்பை மேற்கொள்ள இந்தக் கட்சிகள் வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் தேசிய முக்கியத்துவம் மிக்க விடயங்கள் என்று வரும்போது, தேசிய பிரச்சினைக்கான தீர்வு (அதாவது அதிகாரப் பகிர்வு),  பாராளுமன்ற தேர்தல் முறை மாற்றம், ஜனாதிபதி பதவியின் அதிகாரநிலை குறித்த கருத்து என்பவற்றை குறிப்பிட முடியும்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முறையான சட்ட ஏற்பாடுகளோடு அல்லாமல் சூட்சுமமான முறையில் நீக்கினால் அது முஸ்லிம்களுக்கு ஆபத்தாகவே அமையும். அத்துடன் அதிகாரப் பகிர்வு கூட மிக நல்ல ஒரு கோட்பாடு என்றாலும், முன்பின் யோசிக்காமல் செயற்படும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் பொடுபோக்குத்தனத்தால், அது முஸ்லிம்களுக்கு கடுமையான எதிர்விளைவுகளை கொண்டு வரக்கூடும் என்ற அபாய ஒலிகள் தற்போது எழுப்பப்படுகின்றன.

எனவே, முஸ்லிம் கட்சிகளின் உள்மன நிலைப்பாடு என்ன? வெளியில் சொல்கின்ற காரணம் என்ன? அவ்விடயத்தில் தெளிவுடன் இருக்கின்றார்களா? எதைப் பற்றி அரச உயர்மட்டத்தி;டம் பேசப் போகின்றார்கள் என்பதில் முஸ்லிம்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
ஜனாதிபதி பதவியை (நிறைவேற்றதிகாரத்தை) இல்லாதொழிப்பது தொடர்பான தமது இறுதி நிலைப்பாடு என்ன என்பதை முஸ்லிம் கட்சிகள் வெளிப்படையாக கூற வேண்டும். தமிழர்கள் உயர்ந்தபட்ச அதிகாரப் பகிர்வை கோருகின்றார்கள். இதில் பொலிஸ், காணி அதிகாரங்களும் உள்ளடக்கம். அத்துடன் சமஷ்டிக்காகவும் சகோதர தமிழ் சகோதரர்கள் குரல் கொடுக்கின்றார்கள். 

இது 20 இன் மூலமோ அல்லது அரசியலமைப்பு மறுசீரமைப்பின் ஊடாகவோ மேற்கொள்ளப்படலாம்.
ஆகவே முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பதற்காகவே உருவாக்குகின்றோம் என்று கூறிய முஸ்லிம் கூட்டமைப்பினர் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உள்ளடங்கலாக அனைத்து முஸ்லிம் அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகளும் தமது நிலைப்பாட்டை தெளிவுறச் சொல்ல வேண்டும்.

ம.வி.மு. சொல்லியிருப்பது போல விளக்கமில்லாக் குழப்பங்கள் இருக்கலாம். 20ஆவது திருத்தம் என்பது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை மாற்றியமைப்பதற்கு அப்பால் மறைமுகமாக முஸ்லிம்களுக்கு சில அனுகூலங்களையும் கொண்டு வரலாம். அப்படியென்றால் அது முறையாக செய்யப்பட வேண்டும்.

முஸ்லிம்கள் அதிகாரப் பகிர்வுக்கோ, பரவலாக்த்திற்கோ  எதிர்ப்பானவர்கள் அல்லர். ஆனால் கடந்த, நிகழ்கால அனுபவங்கள், அரசியல் போக்குகள், முஸ்லிம் அரசியல்வாதிகளின் கையறுநிலை என்பன அது குறித்த அச்சத்தை மேலோங்கச் செய்திருக்கின்றன என்பதே நிதர்சனமாகும். அதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டு, வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டு, அதிகாரம் பகிரப்பட்டு, ஆளுநர்கள் அதிக அதிகாரத்தைப் பெறுவார்களாக இருந்தால் ஒரு இனத்தின் அரசியல் மேலாதிக்கம் ஏற்படும் சாத்தியமிருக்கின்றது என்று அச்சம் முஸ்லிம்களிடையே பரவலாக ஏற்படத் தொடங்கியுள்ளது.

எனுவே. நிறைவேற்று அதிகாரம் தொடர்ந்து நீடிக்க, அல்லது நியாயமான அடிப்படையில் அது திருத்தப்படுவதற்கும், இனப் பிரச்சினை தீர்வில், அதிகாரப் பரவலாக்கத்தில் முஸ்லிம்களுக்குரிய பங்கை உறுதி செய்வதற்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்னிற்க வேண்டும்.

பம்மாத்து அரசியல் தேவையில்லை!
- ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி - 14.05.2018)
20ஆவது திருத்தம்: நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நீக்கமும், முஸ்லிம்களின் எதிர்காலமும் 20ஆவது திருத்தம்: நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நீக்கமும், முஸ்லிம்களின் எதிர்காலமும் Reviewed by Madawala News on May 14, 2018 Rating: 5