அம்பாறையில் மு.கா விற்கு வீழ்ச்சியா?




நாச்சியாதீவு பர்வீன்.
கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலானது பலம்பொருந்திய பெரிய கட்சிகளுக்கு அதிர்ச்சி
கொடுத்துள்ளது. இந்த தேர்தல் முறையிலுள்ள சாதக பாதகங்கள் தொடர்பில் தெளிவற்ற நிலையில் ஒரு அவசரமான சூழலில் புறக்காரணிகளின் அழுத்தங்களின் மத்தியிலேயே இது நடாத்தப்பட்டது. அரசாங்கமும் மக்கள் எல்லாவாக்குகளையும் நமக்கே வழங்கிவிடுவார்கள் எனும் தற்றுணிவில் களத்தில் குத்தது. இந்த தேர்தல் முறையானது சிறுபான்மை கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகளுக்கு சாதமான உள்ளீடுகளை கொண்டுள்ளதாக பரவலாக பேசப்பட்டது. குறைந்த வாக்குகளை பெறுகின்ற கட்சிகளுக்கு கூட குறிப்பாக சிறிய கட்சிகளுக்கு கூட தப்பிப்பிழைத்து உயிர்வாழ்கின்ற உத்தரவாதத்தை இந்த தேர்தல் முறை வழங்கும் என்றும் கூறப்பட்டது.

தேர்தல் முடிந்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் இந்த தேர்தல் முறையில் உள்ள சிக்கல்கள் பற்றியும், தெளிவற்ற நடைமுறைகள் பற்றியும் மக்கள் மத்தியில் குழப்பகரமான மனோநிலையே அவதானிக்க முடிகிறது. தொகுதிகளை அதிகமாக வெற்றிகொண்ட கட்சிக்கு ஆட்சியமைக்கின்ற வாய்ப்புகளை வழங்காமல் வெறும் ஓரிரண்டு ஆசனங்களை பெற்றுக்கொண்ட உதிரிக்கட்சிகள் ஆட்சியமைக்கின்ற நிலையே இந்த தேர்தல் முறையின் பலவீனமாகும்.

அநேகமாக சில சிறிய கட்சிகள்,சுயேட்சை குழுவினர் வெறும் ஒரு ஆசனத்தை மாத்திரம் வட்டாரத்தில் பெற்ற வாக்குகளை வைத்துக்கொண்டு போடுகின்ற ஆட்டமும்,காட்டுகின்ற அலம்பலும் சகிக்க முடியவில்லை. வெறும் சிலநூறு வாக்குகளை வைத்துக்கொண்டு பேரம்பேசுகின்ற சக்திகளாக சில சிறிய கட்சிகளை இந்த தேர்தல் முறையானது உருவாக்கியுள்ளது. இது இந்த தேர்தல் முறையில் உள்ள மிகப்பெரிய பலவீனமாகும். அத்தோடு பணம் உள்ள கட்சிகள் வட்டாரத்தை முடக்க தமது பணத்தை அள்ளிவீசுகின்ற முறையிலும், பணத்தை கொடுத்து மாற்றுக்கட்சியின் பட்டியல் உறுப்பினரை வாங்குகின்ற நிலையும் இந்த தேர்தல் முறை மூலம் உருவாகியுள்ளது.

மக்களால் அதிகம் விரும்பபட்டு அதிக விருப்பு வாக்குகளை பெற்று அதிக வட்டாரங்களை வென்ற கட்சியானது ஆட்சியமைக்காமல் வெறுமனே பட்டியலில் தெரிவு செய்யப்படுகின்ற உறுப்பினருக்கு சபையின் தவிசாளர் பதவியும்,உபதவிசாளர் பதவியும் வழங்கப்படுகின்ற சமநிலையற்ற ஒரு தேர்தல் முறையாக இது விளங்குகின்றது. நாடளாவிய ரீதியில் வட்டாரங்களை வெற்றிபெற்றவனின் வெற்றியானது அதன் பெறுமானத்தை இழந்து தோல்வியடைந்தவனிடம் சரணாகதி அடையும் நிலையையே இந்த தேர்தல் முறை உருவாக்கியுள்ளது எனலாம்.

இதற்க்கு பல உதாரணங்களை சுட்டமுடியும்.அனுராதபுர மாவட்டத்தில் கஹடகஸ்திகிலிய பிரதேச சபையில் 10 வட்டாரங்களில் 7 வட்டாரங்களை மகிந்த அணியினர் கைப்பற்றினர் ஏனைய மூன்று வட்டாரங்களும் ஐ.தே .க, ஸ்ரீலங்கா சுதந்தர கட்சி, சுயேட்சை குழு ஆகியன தலா ஒவ்வொரு வட்டாரங்களை வென்றெடுத்தன. இந்த சபையின் தவிசாளராக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்று வெறும் 2 ஆசனங்களை மட்டுமே பெற்றுக்கொண்ட சுயேட்சை குழுவுக்கே வழங்கப்பட்டது. அவ்வாறே உபதவிசாளர் பதவியானது பட்டியல் மூலமாக தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கப்பட்டது. வெற்றிபெற்றவர்கள் எதிரணியில் அமர ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக பட்டியல் ஆசனம் இங்கு உருவாகியிருப்பதை நாம் அவதானிக்க முடியும்.

இவ்வாறே அனுராதபுர மாவட்டத்திலுள்ள இன்னுமொரு பிரதேச சபையான முஸ்லிம்கள் அதிகமாக வாழுகின்ற பிரதேச சபையான ஹொரவபொத்தான பிரதேச சபையும் விளங்குகின்றது. ஐ.தே.கட்சியானது ஆட்சியமைப்பதற்காக அத்தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவரை பட்டியலுக்கூடாக தெரிவு செய்து அவரை அந்த சபையின் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிகமாக மக்களால் விரும்பப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் வலுவற்றுக்கிடக்க மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் கதிரையில் அமர்ந்து கோலோச்சும் சமனற்ற சிக்கலான பின்னத்தினை இந்த தேர்தல் அடையாளப்படுத்தியுள்ளது எனலாம். இந்த அரசியல் ரீதியான தெளிவான பார்வையில்தான் இம்முறை உள்ளூராட்சி சபை தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வகிபாகம் தொடர்பில் அவதானிக்க வேண்டியுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக எட்டு (8) உள்ளூராட்சி மன்றங்களில் முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்றார்கள் மட்டுமல்ல இந்த ஆறுசபைகளிலும் முஸ்லிம் ஒருவரே மேயராகவோ அல்லது தவிசாளராகவோ ஆக முடியும். இதில் அக்கரைப்பற்று நகர சபைமற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபை ஆகியன முன்னாள் அதாவுல்லாவின் ஆளுகைக்குள் இருப்பதனை நாம் மறுக்க முடியாது. அதாவுல்லாவின் மீதான அதிகபட்ச நம்பிக்கையானது இவர்களுக்கு கடந்த காலத்தில் பெற்றுக்கொடுத்த அபிவிருத்திகளை அந்த மக்கள் இன்னும் மறக்கவில்லை என்றோ அல்லது மாற்று அரசியல் சக்திகளுக்கு அங்கே நுழைவதில் உள்ள சாதக பாதகங்கள் தொடர்பிலோ ஆராயவேண்டியுள்ளது.

அக்கறைப்பற்றை விடுத்து மீதமுள்ள ஆறு சபைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது பலத்தை இழந்துள்ளதா? அதற்க்கு மாற்றீடாக உருவாக்கப்பட்டுள்ள கட்சி எது? உண்மையில் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான சக்திமிக்க ஒரு அரசியல் களம் அம்பாறையில் உள்ளதா என்கின்ற அடிப்படைக்கேள்விகள் தொடர்பில் நாம் நோக்கவேண்டும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முகவெற்றிலையாக கருதப்படுகின்ற கல்முனையிலும் மு.கா வீழ்ந்து விட்டது என அற்பமான அரசியல் இலாபத்தினை நோக்காக்கொண்டு செய்திகள் பரப்பப்படுகின்றன.இதன் உண்மைத்தன்மை பற்றி விரிவாக நோக்கினால் இந்த செய்திகளில் உள்ள புனைவுகள் பற்றி அறிந்து கொள்ளமுடியும்.

அம்பாறையில் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான மாற்று அரசியல் சக்தியாக சிலரால் கருதப்படுவது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் காட்சியாகும். அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு அம்பாறையில் கடந்த 2015 ஆண்டு பொதுத்ததேர்தலில் அண்ணளவாக 33,000 வாக்குகள் கிடைத்தன இருந்தும் அக்கட்சிக்கு ஒரு ஆசனம் கூட அம்பாறையில் கிடைக்கவில்லை. ஆனால் ஐ.தே .கட்சியுடன் இணைந்து அந்த தேர்தலில் களமிறங்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 3 ஆசனங்களை பெற்றுக்கொண்டது. 

பொதுத்தேர்தல் நடைபெற்று சுமார் மூன்றாண்டுகள் நெருங்குகின்ற இந்நேரத்தில் இந்த உள்ளூராட்சி சபை தேர்தல் நடைபெற்றுள்ளது இதில் சுமார் 43,000 வாக்குகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெற்றுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரசை பொறுத்த மட்டில் இது அவர்களுக்கு பெரும் வெற்றிதான் ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு இது பெரிய பாதிப்புகள் எதனையும் ஏற்படுத்தாது என்பதனை தெளிவான புள்ளிவிபரமும்,தேர்தல் முடிவுகளும் இனம்காட்டியுள்ளன.

கடந்த பொதுத்தேர்தலை விடவும் 10.000 ஆயிரம் வாக்குகளை அதிகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெற்றுள்ளது இந்த 10.000 மேலதிக வாக்குகளின் சொந்தக்காரர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அல்லர் மாறாக முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் செயலாளர் ஹசன் அலி, அட்டாளைசேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அன்ஸில், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தாஹிர்,  முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத் (அப்துல் ரசாக்), ஹனீபா மதனி ஆகிய ஐவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை விட்டு ஒருதலைப்பட்சமாக வெளியேறி ஐக்கிய சமாதான கூட்டமைப்பு எனும் பெயரில் அகில அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் இணைந்து கொண்டனர். இவ்வாறே  சம்மாந்துறையின் முன்னாள் தவிசாளர் நௌசாதும் அக்கட்சியில் இறுதி நேரத்தில் சேர்ந்து கொண்டார் எனவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெற்றுக்கொண்ட மேலதிக 10 ஆயிரம் வாக்குகள் மேற்சொன்ன அறுவரின்  வாக்கு வாங்கியாகவே கணக்கிடப்பட வேண்டும்.

இங்கு ஒருவிடயத்தை நினைவு படுத்திக்கொள்ள வேண்டும் இந்த ஆறுபேரும்  சாமானியர்களல்லர். மாறாக மக்களால் உயர்பதவிகளில் அமர்த்தப்பட்டவர்கள். ஒரு இராஜாங்க அமைச்சர், ஒரு மாகாண சபை உறுப்பினர், மூன்று  பிரதேச சபைகளின்  தவிசாளர்கள், ஒரு மாநகர சபை உறுப்பினர் இப்படி அதிகாரமிக்கவர்களாக இருந்தவர்கள் இந்த அறுவரின்  கட்சி மாற்றத்தின் பிரதிபலன் வெறும் 10 ஆயிரம் வாக்குகள் மட்டும்தான் என்றால்  தலா 1700  வாக்குகள் இருப்பதை இது நிறுவிநிற்கிறது. அல்லது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வாக்கு வங்கியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் என இதனை கருதினால் இந்த ஆறுபேரும்  செல்லாக்காசுகள், வாக்குவங்கியற்றவர்கள் எனும் முடிவுக்கு நாம் வரவேண்டியுள்ளது. 

கடந்த 3 வருட கால எல்லையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் வழங்கப்பட்ட தொழில் வாய்ப்புக்கள், சின்ன சின்ன அபிவிருத்திகள், திணைக்கள தலைவர் பதவிகள், இன்னும் தனிப்பட்ட உதவிகள் என்று ஏராளம் செய்துள்ளார்.

 இந்த செயற்பாடுகளின் பிரதிபலனாக கூட இந்த 10000 வாக்குகள் இருக்கலாம் எனவும் எண்ணத்தோன்றுகிறது. எனவே இம்முறை தேர்தலில் வெறும் 10 ஆயிரம் மேலதிக வாக்குகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெற்றுக்கொண்டமையானது அவர்களின் முன்னேற்றமாக கொள்ள முடியாது. காரணம் அதற்கான மூலதனங்கள் அதிகம் அவர்களிடம் இருந்தும்  அடையாளப்படுத்த முடியாத வாக்குகளாகவே இவற்றை இனங்காண முடியும். 

அம்பாறையில் அக்கரைப்பற்று சபைகள் தவிர்த்து ஏனைய சபைகளை நோக்குமிடத்து அட்டாளைச்சேனை பிரதேச சபையிலுள்ள 11 தொகுதிகளில் 8 தொகுதிகளில் மு.கா வெற்றியீட்டியுள்ள அதேவேளை அ.இ.ம.காவினர் ஒரேயொரு தொகுதியை மட்டுமே வெற்றிபெற்றனர். 

இறக்காமம் பிரதேச சபையில் மொத்தமாகவுள்ள 8 தொகுதிகளில்  மு.கா நான்கு தொகுதிகளை வெற்றி கொண்டது. அ.இ .ம.காவினர் அங்கும் ஒரு தொகுதியை மாத்திரமே வெற்றிபெற்றனர் இவ்வாறே கல்முனையில் மொத்தமாக உள்ள 24 தொகுதிகளில்  8 தொகுதிகளையும், நிந்தவூர் பிரதேச சபையில் மொத்தமாக 8 தொகுக்களில் 6 இணையும் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றிகொண்டது. இவ்விரு சபைகளிலும் அ.இ.ம .கா வினர் தலா ஒரு தொகுதியை மட்டுமே வெற்றி கொண்டனர். பொத்துவிலில் மொத்தமாக உள்ள 12 தொகுதிகளில் 4 தொகுதிகளை மு.கா வெற்றி கொண்டது. மக்கள் காங்கிரஸ் 2 தொகுதிகளில் வெற்றியீட்டியது. சம்மாந்துறை பிரதேச சபையில் 12 தொகுதிகளில் மு.கா 3 தொகுதிகளையும் ம.கா 7 தொகுதிகளையும் கைப்பற்றியது. ஆக மொத்தமாக இந்த 6 ஆறு சபைகளில் 5 சபைகளில் முஸ்லிம் காங்கிரஸ் அதிகமான தொகுதிகளை வெற்றி பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சம்மாந்துறையில் மாத்திரம் அதிக தொகுதிகளை வென்றது.இதுகூட முன்னாள் சம்மாந்துறை தவிசாளர் நௌசாதின் உபயத்தால் என்பது குறிப்பிடத்தக்கது.

நிந்தவூரில் மொத்தமாகவுள்ள 8 தொகுதிகளில் (6) ஆறினை வென்று கூட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் அந்த சபையில் ஆட்சியமைக்க முடியவில்லை என்பது இந்த தேர்தல் முறையில் உள்ள சிக்கலான அம்சமே தவிர அதனை மு.காவின் வீழ்ச்சியாக புனைய முனைவது சிறந்த அரசியல் கணிப்பீடாக குறிக்க முடியாது. இந்த சிக்கல் தேசிய காட்சிகளுக்கே பெரும் பிரச்சினையாக இருக்கும் போது சிறுபான்மை கட்சிகள் பற்றி நாம் பேசவும் வேண்டுமா? எனவே அம்பாறையில் முஸ்லிம் காங்கிரசுக்கு வீழ்ச்சி என்றும் முஸ்லிம் காங்கிரஸ் தனது வாக்கு வங்கியை இழந்து வருகின்றது என்றும் சுயதிருப்திக்காக யாரும் சொல்ல முடியும். அல்லது தமது ஆதரவாளர்களை திருப்திப்படுத்தும் வகையில் அவ்வாறான அறிக்கைகளை விடமுடியும் ஆனால் உண்மைக்குண்மையாக புள்ளிவிபரங்கள் மிகத்தெளிவாக சொல்லுகின்றன மக்கள் யாரை ஆதரித்துள்ளார்கள் என்று.

இந்த இடத்தில் இன்னொரு விடயத்தை பதியவேண்டும். அது சாய்ந்தமருத்துக்கு தனியான உள்ளூராட்சி விடயமாகும். இந்தவிடயத்தில் மு.காவுக்கு ஒரு சறுக்கல் இருக்கத்தான் செய்கிறது.ஆனால் இதனை நிரந்தர சறுக்கலாக ஆக்கிக்கொள்ளாமல் விரைவில் அவர்களுக்கான தனியான உள்ளூராட்சி சபையை மு.கா பெற்றுக்கொடுக்க வேண்டும். அந்த மக்களின் நியாமான அபிலாஷையான தனியான உள்ளூராட்சிமன்றம் என்கின்ற அந்த கோரிக்கையை நிறைவேற்றும் சக்தியும்,ஆற்றலும்,அதிகாரமும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கே உள்ளது. அதனை நிறைவேற்றிக்கொடுப்பதன் மூலம் சாய்ந்தமருது மக்களை மீண்டும் முஸ்லிம் காங்கிரஸ் எனும் இந்த இயக்கத்தின் பங்காளிகளாக மாற்றமுடியும்.  

அம்பாறையில் மு.கா விற்கு வீழ்ச்சியா?  அம்பாறையில் மு.கா விற்கு வீழ்ச்சியா? Reviewed by Madawala News on April 26, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.