சீண்டும் இனவாதம் : கொத்துரொட்டி முதல் பள்ளிவாசல் வரை.


வன்மம் மிகவும் ஆபத்தான உணர்வாகும். ஒருவர் மீதான பகையுணர்வை மனதில்வைத்துக் கொண்டு சந்தர்ப்பத்தை
பயன்படுத்தி அதை வெளிப்படுத்துவது என்பது நினைத்துப் பார்க்க முடியாத நச்சுத்தன்மையை கொண்டது. அதுவும், அந்த வன்மம், இனவாதம் சார்ந்ததாக இருக்குமானால் அதன் விளைவுகள் மிகவும் பாரதூரமானவையாக இருக்கும்.
அழுத்கமை தொடக்கம் ஜின்தோட்டை தொட்டு அம்பாறை வரை முஸ்லிம்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்டு வருகின்ற இனவாத, மதவாத அடக்குமுறைகள் அவ்வாறானவையாகவே தோன்றுகின்றன. இது தற்செயலானது என்று யாரும் கூற முடியாதவாறு ஒவ்வொரு வன்முறைகளும் கனகச்சிதமாக அரங்கேற்றப்படுவதுடன், குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை கொடுக்கப்படாமல் விடப்படுகின்ற ஒரு போக்கையும் காண முடிகின்றது.


கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு வேளையில் அம்பாறை நகரில் உள்ள ஒரேயொரு பள்ளிவாசல் அடித்து நொருக்கப்பட்டும் கடைகள் மற்றும் வாகனங்கள் சேதமாக்கப்பட்டும் இருக்கின்றமை சர்வ சாதாரண விடயமல்ல. இனவாதிகள் முஸ்லிம்கள் மீது கை வைப்பது முதலாவது தடவையும் அல்ல இது கடைசித் தடவையாகவும் இருக்கப் போவதில்லை.

உலகளாவிய அரசியல்

இது இலங்கை முஸ்லிம்களுக்கு மட்டும் நடக்கின்ற அநியாயம் அல்ல. உலகின் பல 'நாட்டாமைகள்' சர்வதேச ஒழுங்குகளை மீறி முஸ்லிம் நாடுகளில் குண்டுகளை பொழிந்து கொண்டும், அப்பாவிச் சிறுவர்களை கொன்றொழித்துக் கொண்டும் வெட்கமில்லாமல் அதனை சமாதானத்தை நிலைநாட்டும் நடவடிக்கை என்றும் மனிதாபிமானம் பேணப்படுகின்றது என்றும் கூறிக் கொண்டிருக்கின்றன. அதேபோல் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இனவாத சக்திகள் வலுவாக தோற்றம் பெற்று வருவதையும் சம்பவங்களை உன்னிப்பாக நோக்குவோர் அறிந்து கொள்வர்.
அம்பாறை வன்முறைகளை, உலக, இலங்கை ஒழுங்குகளுடன் தொடர்புபடுத்தி நோக்க வேண்டியிருக்கின்றது. குறிப்பாக, நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தல் முடிவுகளுக்கும் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைகளுக்கம் இந்த 3ஆம் கட்ட இனவாத நிகழ்ச்சி நிரலுக்கும் தொடர்பிருப்பதாகவே உள்மனது சொல்கின்றது.


பஸ் தீப்பிடித்து எரிவது, குண்டுவெடிப்பது, துப்பாக்கிச் சூடு என கடந்த இரு வாரங்களாக நடக்கின்ற சம்பவங்களோடு இணைத்து நோக்கும் போதும், இப்போது அம்பாறையில் குற்றவாளிகளை விடுதலைச் செய்யச் சொல்லி அழுத்தம் கொடுக்கும் அரசியல்வாதிகளின் பின்னணியியை நோக்கும் போதும் ஒரு கேள்வி எழுகின்றது. அதாவது 1956 இல் பண்டாரநாயக்கவின் வெற்றியையடுத்து பல கலவரங்கள் இடம்பெற்றன. ஜே.ஆர்.ஜயவர்தனவின் வெற்றிக்குப் பிறகும் இரு கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அதுபோல கடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இனங்களை துண்டாடி, தமது வெற்றியைக் கொண்டாட நினைக்கின்றார்களா?
என்பதே அக்கேள்வி.


பள்ளிவாசலின் மீது கை வைத்தால்; முஸ்லிம்கள் பொங்கி எழுவார்கள். பல நாட்களுக்கு இதைப் பற்றியே பேசுவார்கள் என்பதை சிங்கள பெருந்தேசியம் நன்றாகவே அறிந்து வைத்திருக்கின்றது. எனவே, அழுத்கமை கலவரத்திற்குப் பின்னரான நிலைமைகளை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சியைக் கைப்பற்றிவிட்டு, இப்போது அதனை தக்க வைத்துக் கொள்ள படாதபாடுபடும் ஆட்சியாளர்கள் இவ்வாறான குழப்பத்தை ஏற்படுத்துவோருக்கு பின்னாலிருந்து அரசியல் இலாபம் தேடுகின்றார்களா? அல்லது முஸ்லிம்களுக்கு பராக்கு காட்டிவிட்டு மாகாண சபை எல்லை மீள்நிர்ணயம் போன்ற பாரிய அநீதியிழைப்புக்கள் எதையாவது மேற்கொள்ளும் நோக்கம் இதன் பின்னால் உள்ளதா என்ற எண்ணமும் எழாமலில்லை.

கொத்துரொட்டிக் கதை

அம்பாறை நகரில் உள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான ஒரு ஹோட்டலில் இடம்பெற்ற கொத்துரொட்டிச் சண்டையே இத்தனை பெரிய பிரளயமாக உருவெடுத்ததாக கூறி, அதை நம்பச் சொல்லியும் சொல்கின்றார்கள். கொத்துரொட்டிக்கும் பள்ளிவாசலுக்கும் என்ன சம்பந்தம்? கொத்து ரொட்டிக்கும் ஏனைய கடைகளுக்கும் வாகனங்களுக்கும் என்ன தொடர்பு? ஹோட்டலில் ஏற்பட்ட பிரச்சினைக்காக ஏன் பள்ளிவாசலைச் சென்று உடைத்தார்கள்? இந்தக் கேள்வியை பின்தொடர்ந்து போனால் பல விடயங்கள் வெளிச்சத்துக்கு வரும்.


பெரும்பான்மையினரால் நடத்தப்படும் 'மாத்தறை பத் கடே' உணவகத்தில் ஏதாவது முரண்பாடு ஏற்பட்டால் விகாரையைச் சென்று உடைக்க முடியுமா? சைவக் கடைக்காரரிடம் உள்ள கோபத்தைக் கொண்டுபோய் கோவிலை உடைப்பதில் காட்ட முடியுமா? அப்படிச் செய்வதை சித்த சுயாதீனமுள்ள யாரும் ஏற்றுக் கொள்வார்களா? அதை நியாயம் என சிங்கள மக்கள் கூறி முஸ்லிம்களை மன்னிப்பார்களா?


அப்படிச் செய்ய மாட்டார்கள் என்றிருக்கும் போது, சிறுபான்மையினர் மட்டும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று அரசியல்வாதிகளும் சட்டத்தை கையில் வைத்திருப்போரும் வெள்ளைக் கொடியுடன் சமரசம் பேச வருவோரும் சொல்வது வினோதமானது. இது இன ஒடுக்குமுறையின் இன்னுமொரு வடிவமும் ஆகும்.


அம்பாறையில் நடந்த வன்முறைகள் திட்டமிடப்பட்டவை அல்ல என்றும் அது தற்செயலாக ஏற்பட்ட உணர்வெழுச்சி என்றும் சிங்களவர்கள் சிலர் கூறுகின்றனர். உண்மைதான், இது முன்கூட்டியே பாரியளவில் திட்டமிடப்படாததாக இருக்கலாம். ஆனால் அரை மணித்தியால இடைவெளியிலேனும் அது திட்டமிடப்பட்டே மேற்கொள்ளப்பட்டிருப்பதை யாரும் மறுக்க முடியாதவாறு, அத்தாட்சிகள் இருக்கின்றன.


முஸ்லிம் ஹோட்டலில் விற்கப்படும் உணவகளில் மலட்டுத்தன்மையை அல்லது கர்ப்பத்தடையை ஏற்படுத்தும் மாத்திரைகள் கலக்கப்பட்டுள்ளன என்ற கட்டுக்கதையொன்று நீண்டகாலமாக அம்பாறை சிங்கள மக்கள் மத்தியில் பரப்பப்பட்டுள்ளது. அதை கணிசமானோர் நம்பியும் இருக்கின்றார். இவ்வாறு களநிலைகள் எல்லாம் கட்டமைக்கப்பட்ட பின்னரே இந்த வன்முறை இடம்பெற்றுள்ளது. அப்படியாயின் இது ஒரு திட்டமே.
சம்பவதினம் குறித்த முஸ்லிம் ஹோட்டலுக்கு பெரும்பான்மையின இளைஞர்கள் கொத்துரொட்டி வாங்கியுள்ளனர்.

அந்த கொத்துரொட்டிக்குள் 'கர்ப்பத்தடை மாத்திரை போட்டாய்தானே' என்று கேட்டு கடையிலிருந்தவர்களை தாக்கியுள்ளனர். அந்தக் கடைக்காரரின் வாயில் இருந்து 'ஆம்' என்ற பதிலை எடுத்துள்ளனர். அதை ஒளிப்பதிவு செய்து பரப்பியுள்ளனர். இதுவும் திட்டமிடாமல் நடந்ததில்லை.


இந்த ஒளிப்பதிவில் கடைக்காரரின் அதட்டும் தொனியில் சிங்கள மொழியில் கேள்வி கேட்கப்படுவதையும் அவர் 'சிறிதளவு போட்டேன்' என்று சொல்வதையும் காணொளியில் பார்க்க முடிகின்றது. அடிவிழுந்த பயத்திலும் மொழி தெரியாமலும் தான் 'ஆம்' என்று சொன்னதாக கடைக்காரர் பிறகு விளக்கமளித்துள்ளார். ஆனால், சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் இடத்தில் கடை வைத்துள்ள ஒருவர் முஸ்லிம்களின் அடையாளமாக நோக்கப்படுகின்றார், இதை நம்பாத சிங்கள மக்களும் அவரது பதிலால் நம்பும் நிலை ஏற்பட்டிருக்கின்றது என்ற அடிப்படையில் நோக்கினால் அவர் அளித்த பதில் மிகவும் பொறுப்பற்றதும் சிறுபிள்ளைத்தனமானதும் ஆகும்.
அது வேறுவிடயம். ஆனால் ஒரு கடையில் இவ்வாறு நடக்கின்றது என்றால் அங்கு கொத்து வாங்காமல் விடலாம், சுகாதார வைத்திய அதிகாரியிடம் முறையிட்டிருக்கலாம் அல்லது பொலிஸில் புகார் செய்திருக்க வேண்டும். அதைவிட்டு வன்முறையைப் பிரயோகித்திருக்க கூடாது. சரி, அவரது கடையை உடைத்தீர்கள். அது போகட்டும். ஒரு ஹோட்டலில் 150 ரூபாய் கொத்துக்காக ஏற்பட்ட பிரச்சினை ஒரு கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள பள்ளிவாசல் வரை ஏன் வந்தது என்பதுதான் இங்குள்ள பிரதானமான கேள்வி?

வந்திறங்கிய சண்டியர்கள்

ஹோட்டலில் முறுகல் ஏற்பட்டு அரை மணித்தியாலத்திற்குள் அம்பாறை பள்ளிவாசலுக்கு அருகாமையில் இருக்கின்ற மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் சுமார் இருநூறுக்கும் அதிமான சிங்கள சண்டியர்கள் கூடியதாக அப்பிரதேசத்தில் முஸ்லிம்களுடன் நெருங்கி வாழும் சிங்கள சகோதரர்களே கூறுகின்றனர். அந்தக் குழுவினர் திரண்டு சென்று குறிப்பிட்ட ஹோட்டல் உட்பட நான்கு கடைகளை உடைத்து நொருக்கியது மட்டுமன்றி, பள்ளிவாசலின் சுவரை உடைத்து நொருக்கி விட்டு பள்ளிவாசலுக்குள் சென்று ஒவ்வொரு பொருளாக சேதமாக்கியுள்ளனர்.


குர்ஆன் பிரதிகள் உட்பட பல பொருட்கள் எரிக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த ஓரிரு முஸ்லிம்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். பள்ளியின் முன்வாசலில் நின்று மாமரக் கன்றுகள் கூட முறிக்கப்பட்டு, பிய்த்தெறியப்பட்டுள்ளதை பார்க்கும் போது, எந்தளவுக்கு அவர்களது இனவாத வெறி இருந்திருக்கின்றது என்பதை புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.


இரவு 10 மணிக்கும் 12 மணிக்கும் இடைப்பட்ட குறுகிய நேரத்திற்குள் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. குறிப்பாக பள்ளிவாசல், கட்டம் கட்டமாக வந்த குழுக்களினால் தாக்கப்பட்டுள்ளதுடன் ஒரு டிபெண்டர் வாகனமும் பள்ளி நுழைவாயிலை உடைத்துக் கொண்டு உட்சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. பள்ளியில் இருந்து ஒன்றரை கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் அம்பாறை பொலிஸாருக்கு 10.05 இற்கு தகவல் சொல்லப்பட்ட போதும் 11.30 மணியளவிலேயே ஸ்தலத்திற்கு வந்ததாக அங்குள்ள முஸ்லிம்கள் கூறுகின்றனர். இதற்கு பாதுகாப்பு தரப்பில் பல விளக்கங்கள் அளிக்கப்படுகின்றது.


அம்பாறையில் சம்பவதினம் 4 மரண வீடுகள் இருந்ததாகவும், ஹோட்டலில் இடம்பெற்ற சம்பவத்தையடுத்து அங்கு மது போதையில் இருந்தவர்கள் சாரைசாரையாக திரண்டு வந்து பள்ளியை தாக்கியிருக்கலாம் என்றும் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட சுகாதார வைத்திய அதிகாரி கூறினார். ஆனால் இவ்வாறான அற்ப காரணங்கள் எல்லாம் ஒருபோதும் முஸ்லிம்களின் இழப்புக்கள் சரியென நியாயப்படுத்தாது.

தற்செயல் நிகழ்வா?


அம்பாறை சம்பவங்களை கோர்வையாக நோக்குங்கள். முஸ்லிம் கடை உரிமையாளர்கள் எல்லோரும் நாணயமானவர்கள் என்று சொல்ல வரவில்லை. தமிழ், சிங்கள மக்கள் முகம்சுழிக்கும் பல செயற்பாடுகளை முஸ்லிம் வர்த்தகர்கள் மேற்கொள்கின்றார்கள் என்பது வேறுவிடயம். ஆனால், அம்பாறைக் கடையில் அவ்வாறு மாத்திரை போடப்படுவதாக கட்டுக்கதைகளையும், வீடியோவையும் வெளியிட்டவர்கள் சட்டத்தின் மூலம் கடைக்காரருக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கவில்லை. மாறாக, வன்முறை புரிந்திருக்கின்றார்கள்.


கடைக்காரரை தாக்கிய பிறகு மரண வீடுகளிலோ அல்லது ஏற்கனவே தயார் நிலையில் இருந்தவர்களோ அழைக்கப்பட்டிருக்கின்றார்கள். ஒரு கடையில் நடந்த பிரச்சினைக்கு பல கடைகளையும் பள்ளிவாசலையும் தாக்கி நாசப்படுத்தியிருக்கின்றார்கள். அதுமட்டுமன்றி, மாவட்ட செயலகத்தில் முஸ்லிம் காங்கிரஸ் எம்;.பி.க்களி;ன் பங்குபற்றுதலுடனும் பின்னர் அமைச்சர் றிசாட்டின் தலைமையிலும் நடந்த உயர்மட்ட கலந்துரையாடலில் பங்குகொண்ட பௌத்த துறவிகள் மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட சிங்கள காடையர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் பிரச்சினை வரும்' என்று கூறியுள்ளனர்.


இவ்வளவு சம்பவங்களையும் நோக்குகின்ற போது இதுவெல்லாம் தற்செயல் நிகழ்வாக தெரியவில்லை. ஹோட்டலில் நடந்ததை ஒரு தற்செயல் சம்பவமாக எடுத்துக் கொண்டாலும் அதன் பிறகு ஆட்கள் அழைக்கப்பட்டுள்ளமை தொடக்கம் நூற்றுக்கணக்கானோர் சென்று பள்ளியை தாக்கியுள்ளமை எல்லாம் அந்த நொடியில் திட்டமிட்டே மேற்கொள்ளப்பட்டுள்ளதை சிறுபிள்ளையே விளங்கிக் கொள்ளும்.

தலைவர்கள் அழுத்தம்


செவ்வாய்க்கிழமை விடியற் காலையில் இருந்து பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன் மாவட்டத்தின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் நிலைமைகளை பார்வையிட வந்திருந்தனர். அப்போது இதற்கும் தமக்கும் சம்பந்தமில்லை என்றும் வெளியில் இருந்து ஆட்கள் அழைத்து வரப்பட்டிருக்கின்றனர் என்றும் அங்கிருந்த சிங்கள இளைஞர்கள் சிலர் அவ்விடத்தில் பேசிக் கொண்டு நின்றனர். இவ்வேளையில் அங்குவந்த பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் பள்ளிவாசலுக்கு வந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவரை பேசவிடாது மோசமான வார்த்தைகளை கூறி கூச்சலிட்டதுடன் அவரை தாக்கவும் முயற்சி செய்ததை காண முடிந்தது. இது மிகவும் மோசமான இனவாதமாகும்.

உடனடியாக இவ்விடயமாக முதலாவது அமைச்சரவை கூட்டத்திலேயே முஸ்லிம் கட்சித் தலைவர்களான றிசாட் பதியுதீன், றவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் மனோ கணேசன் ஆகியோர் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளனர். முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் எருமை மாட்டில் மழைபெய்வதாக இருந்து கொண்டிருக்க வட மாகாண சபையில் முஸ்லிம்களுக்கு ஆதரவான குரல் எழுந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கடுமையான கண்டனத்தை தெரிவித்திருக்கின்றார். மஹிந்த காலத்தில் இனவாதத்தை வேறு விதமாக நோக்கிய தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா ஜனாதிபதியை நேரடியாக சந்தித்து அழுத்தம் கொடுத்திருக்கின்றார்.


இதற்கிடையில், இளம் சட்டத்தரணிகள் மூவர் முஸ்லிம் சமூகத்திற்காக முன்வந்து 7 பிரிவுகளின் கீழ் வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர். அதன்படி, பௌத்த துறவி ஒருவரின் நெறியாள்கையுடன் ஐந்து இளைஞர்கள் வந்து சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டனர். அவர்களை பிணையில் விடுதலை செய்யுமாறு சிங்கள மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அம்பாறை பள்ளிவாசல் தொழுகைக்காக திறக்கப்பட்டுள்ளதுடன் பள்ளிவாசல் தலைவர் அகமட் ஹாறூனின் வேண்டுகோளுக்கு இணங்க அங்கு ஒரு நிரந்தர பொலிஸ் சாவடி அமைப்பதற்கும் பாதுகாப்பு தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம்களின் நிலம்


இதற்கிடையில், சிங்கள அரசியல்வாதிகள் சிலர் அம்பாறையில் உள்ள முஸ்லிம்களை சமாளித்து, சமாதானமாக போவதற்கு சம்மதிக்க வைத்துள்ளனர். எனவே, தமது இருப்பு, பாதுகாப்பை கருத்திற்கொண்டு, சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவதை ஆட்சேபிக்க வேண்;டாம் என பொதுமக்கள் சட்டத்தரணிகளை கேட்டுள்ளனர். இதனால் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதா, மக்களின் நலனை பார்ப்பதா என தாம் கடும் தர்மசங்கடத்திற்குள்ளாகி இருப்பதாக சட்டத்தரணிகள் கூறுகின்றனர்.
இவ்வளவு நடந்த பிறகும் பள்ளியை உடைத்தவர்களை கூட மன்னிக்கும் மனநிலைக்கு முஸ்லிம்கள்  வந்திருந்தாலும் சிலரின் இனவெறி அடங்கவில்லை என்பதையே, அம்பாறையில் பஸ் மீதான கல்வீச்சு, சியம்பலாண்டுவ வர்த்தகர்களை அச்சுறுத்தியமை, வெலிமட சம்பவம் போன்ற தொடர் நிகழ்வுகள் எடுத்தியம்புகின்றன.


அம்பாறை நகரில் இன்று 104 முஸ்லிம் குடும்பங்களே வாழ்ந்தாலும் அம்பாறை என்பது முஸ்லிம்களினதும் தமிழர்களினதும் பூர்வீக நிலமாகும். 1960களில் அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்ட போது ஆயிரத்திற்கும் குறைவான பதிவு செய்யப்பட்ட சிங்கள வாக்காளர்களே அங்கிருந்தனர். சிங்கள மக்களுக்கு காணிகளை வழங்கியதும், மீரிகம, நீர்கொழும்பு போன்ற இடங்களில் இருந்து சிங்கள விவசாயிகளை கொண்டு வந்து குடியேற்றியதும் வரலாற்றில் மறைக்கப்பட்டிருந்தாலும் அதை முஸ்லிம்கள் அறியாதவர்களல்ல.


அம்பாறையில் இருக்கின்ற பள்ளி மட்டுமல்ல, அதற்கப்பால் பல தசாப்தங்கள் பழைமைவாய்ந்த முஸ்லிம் பள்ளிவாசல் கொண்டுவட்டுவானில் இருக்கின்றது. முஸ்லிம்கள் இப்பகுதியில் இருந்திருக்கின்றார்கள் என்பதற்கு இவை சில எடுத்துக்காட்டுக்களாகும். தமிழ் மாணவர்கள் இல்லாமல் இரு ஆசிரியர்களோடு மட்டும் இயங்கும் தமிழ் பாடசாலை அங்கு தமிழர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாகும்.


அம்பாறையில் உள்ள பெரும்பாலான சிங்களவர்களின் மூன்றாவது தலைமுறையினர் அம்பாறையில் பிறந்தவர்கள் கிடையாது. ஆனால் அம்பாறையில் வாழ்கின்ற முஸ்லிம்கள் பல தலைமுறைகளாக இப்பிரதேசத்திலேயே வாழ்கின்றவர்கள் என்பது கடும்போக்கு சக்திகள் விளங்கிக் கொள்ள வேண்டும். முஸ்லிம்களின் நிலங்கள் எவ்வாறு பறிபோனது, அம்பாறை நகர் எவ்வாறு சிங்களமயமானது என்பதும் அதற்குப் பின்னால் இருக்கின்ற அரசியலையும் பற்றி தனியே குறிப்பிட தேவையில்லை என விட்டுவிடுகின்றேன். இப்படித்தான் நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லிம்களின் பூர்வீகம் இருட்டடிப்புச் செய்யப்பட்டது.


ஆனால், அதுபற்றியெல்லாம் முஸ்லிம்கள் ஒருபோதும் பேசியவர்கள் இல்லை. சிங்கள தமிழ் சமூகங்களோடு இன நல்லிணக்கத்தோடு வாழவே அம்பாறை முஸ்லிம்கள் விரும்புகின்றனர். இதுபோல விருப்பம் கொண்ட, சகோதர வாஞ்சையுள்ள சிங்கள மக்களும் உள்ளனர். குறிப்பாக அம்பாறையில் பல முஸ்லிம் குடும்பங்களை சிங்கள அயலவர்களே காப்பாற்றியுள்ளனர். பள்ளிவாசல் தாக்கப்படுவதாக பலருக்கு தகவல் சொல்லியுள்ளனர் என்பதை முஸ்லிம்கள் நன்றியுடன் நோக்க வேண்டும்.
அங்குதொட்டு இங்கு தொட்டு, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நிலப்பகுதிக்குள் இன்று இனவாத வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றமை மிகவும் பாரதூரமானது. எனவே, எல்லாவற்றையும் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கி;ன்ற அரசாங்கமும் சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்துவோரும், மூஸ்லிம்களை சீண்டியும் தீண்டியும் விளையாடும் இனவாதத்திற்கு விலங்கிட வேண்டும். மறுபுறத்தில் அம்பாறை நகரில்  உள்ள முஸ்லிம்களினதும் பள்ளிவாசலினதும் இருப்பும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஐ.தே.க.வுக்கும் சு.க.வுக்கும் முட்டுக் கொடுக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் 'பம்மாத்து' காட்டாமல், காத்திரமாக செயலாற்ற வேண்டும்.


வேறெந்த வேண்டுதல்களுமில்லை !

ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 04.03.2018)
   
சீண்டும் இனவாதம் : கொத்துரொட்டி முதல் பள்ளிவாசல் வரை. சீண்டும் இனவாதம் :  கொத்துரொட்டி முதல் பள்ளிவாசல் வரை. Reviewed by Madawala News on March 04, 2018 Rating: 5