"நாட்டை ஹம்பயர்களிடமிருந்து காப்பாற்றுவோம்"


கண்டியில் முஸ்லிம் எதிர்ப்பு இனவாத கலகமொன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் இந்த கட்டுரையை எழுதுகின்றேன்.
கண்டியில் நடைபெற்றுவரும் அசிங்கமான விடயங்களையன்றி, முஸ்லிம் மக்களுக்கு எதிரான அழிவு மற்றும் வெறுப்பு ஏற்படக் காரணமாக அமைந்த அரசியல் சூழ்நிலை உருவாக்கப்பட்ட விதம் குறித்தே இந்த கட்டுரையில் கதைக்க எதிர்பார்க்கின்றேன்.


இலங்கையில் ஏனைய அனைத்து விடயங்களைப் போன்றே இனக் குழுக்களும், இனக் குழுக்களுக்கிடையிலான தொடர்புகளும் மிகவும் அழுகிய நிலையிலேயே உள்ளது. சுதந்திரத்தின் பின்னர் சிங்கள தெற்கில் இரண்டு வன்முறைக் கலவரங்கள் நடைபெற்றுள்ளதோடு, தமிழ் வடக்கில், தெற்கில் இடம்பெற்ற இரண்டையும் இணைத்தாலும்- அதைவிட பெரிய வன்முறைக் கிளர்ச்சியொன்றே வடக்கில் நடைபெற்றுமுடிந்தது.


இலங்கை சுதந்திரம் பெற்றுக்கொண்டுள்ள காலத்தின் அரைவாசி காலம் வாழ்ந்திருப்பது பயங்கரமான வன்முறை மோதல்களுக்கு மத்தியிலேயே. ஏற்பட்ட மூன்று கிளர்ச்சிகளையும் தோற்கடிக்க முடியுமாக இருந்தாலும் கிளர்ச்சியாளர்களுக்கும் சமூகத்துக்கும், நாட்டுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ள அழிவு விசாலமானதாகும். இந்த மூன்று கிளர்ச்சிகளும் நாட்டின் அரசியல் முதிர்ச்சியற்ற நிலையால் ஏற்பட்டதே தவிர வரலாற்று நிகழ்வுகளில் தவிர்க்க முடியாத கலகங்கள் அல்ல. தேசத்தைக் கட்டியெழுப்ப முடியாதுபோனதின் விளைவென்றே இதனை கருதலாம்.


எமக்கு கிடைத்திருக்கும் தேசிய அரசாங்கத்தின் நல்வாழ்வுக்கு ஒரு நவீன தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான நிபந்தனைகளை புரிந்துகொள்ள அரசியல் தலைவர்களைப் போன்றே புத்திஜீவிகளும் தவறிவிட்டனர். எனவே சமூகம் நவீனமயப்படவில்லை. மோதல்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும் காரணிகள் கிள்ளியெறியப்படவில்லை.
நாட்டின் குழப்பம்


சிங்கள தெற்கிலும், தமிழ் வடக்கிலும் பயங்கரமான கிளர்ச்சி
களுக்கு வழிவகுத்த பல்வேறு காரணங்களில் இனம், சாதி, மதம் ஆகியன மூன்றும் ஒன்றிணைந்து அல்லது வேறு விதத்தில் தாக்கம் செலுத்தின. இதன் மூலம் தெரியவருவது இனங்களுக்கிடையே போன்று இனங்களுக்குள்ளும் கலகங்கள் ஏற்பட முரண்பாடுகள் இருந்தன என்பதாகும். ஜேவீபியின் இரண்டாவது கிளர்ச்சி தோற்கடிக்கப்பட்டதன் பின்பு நாட்டை மறுசீரமைக்க அரசாங்கத்துக்கு அவகாசம் இருக்கவில்லை. ஜேவீபி கிளர்ச்சி முடிவுபெற்றிருந்தாலும், எல்.ரீ.ரீ.ஈ கிளர்ச்சி முடிவுபெறாததே அதற்குக் காரணம். நாட்டை ஆழமான மறுசீரமைப்பொன்றுக்கு கொண்டுசென்றிருக்க வேண்டியது எல்.ரீ.ரீ.ஈ யினர் தோற்கடிக்கப்பட்டதுமே.



 அதற்கான தூரநோக்கொன்று எல்.ரீ.ரீ.ஈயை தோற்கடித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இருக்கவில்லை. அப்போது அரசாங்கமும் சமூகமும் குழம்பிப்போன நிலையிலேயே இருந்தன. நாடு அப்போதே மீள்கட்டியெழுப்பப்பட்டிருக்க வேண்டும். எனினும், அதற்கான அரசியல் ஞானம் உள்நாட்டு போரை வெற்றிகொண்ட தலைவருக்கு இருக்கவில்லை. இதன் விளைவாகவே 2015ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டு, நல்லாட்சி அரசாங்கமொன்று ஆட்சிக்கு வந்தது.


நல்லாட்சி அரசாங்கத்துக்கு மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதைத் தவிர வேறு எந்த தூரநோக்கும் இருக்கவில்லை. நாட்டில் இருந்த உண்மையான குழப்பத்தை முக்கியமான தலைப்பாக எடுத்துக்கொள்வதற்கு தலைவர்கள் இருவருமே விருப்பம் காட்டவில்லை. அதேபோன்று, நல்லாட்சி அரசாங்கத்துக்கு சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் தயாரித்துக் கொடுத்த
கோட்பாட்டாளர்களும் இதனை ஒரு முக்கிய தலைப்பாக கருத விரும்பவில்லை. நாடு முகங்கொடுத்திருந்த பிரதான பிரச்சினைகளாக கருதக்கூடிய இன, சாதி, மத காரணங்களைக் கொண்ட தேசிய பிரச்சினைக்கு பதிலாக மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஊழல்களை பிரதான தலைப்பாக மாற்றிக்கொண்டனர்.

 மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் உருவாகி, வளர்ந்துவந்த ஒன்றாகவே ஊழலை விளக்கினர். ஊழல் என்பது 1970களில் இருந்த அரசாட்சியில் இருந்து வருவதென்பதை அனைவரும் மறந்துவிட்டனர். இது மஹிந்தவின் முன்னோடி ஆட்சியாளர்களை மோசமான அல்லது தூய்மையான ஆட்சியாளர்களாக அபிஷேகம் செய்ய வழிவகுத்தது.

சிங்கள- தமிழ் யுத்தம்

உண்மையில், உள்நாட்டுப் போர் நிறைவுக்கு வரும் போது சமூகத்தைப் போன்றே அரசாங்கமும் நன்றாகவே சிதைவடைந்து அழுகிய நிலையில் இருந்தது. பாதுகாப்பு படையினருக்கும், எல்.ரீ.ரீ.ஈ படையினருக்கும் மத்தியில் இடம்பெற்ற யுத்தத்தை
சிங்கள மக்களைப் போன்றே தமிழ் மக்களும் சிங்கள-தமிழ் யுத்தமொன்றாகவே பார்த்தனர். யுத்தத்தில் அரச படையினர் வெற்றிகொண்டதும் தமிழ் மக்களுக்கெதிரான போராட்டம் வெற்றிகொள்ளப்பட்டுவிட்டதாக சிங்கள மக்கள் கருதினர்.

சிங்கள இனத்தினர் தமிழ் இனத்தை
தோற்கடித்தாக தமிழ் மக்கள் கருதினர்.

யுத்தத்தால் தமிழ் மக்கள் உயிர்களைப் போன்றே சொத்துக்களையும் இழந்தனர். உறவினர்களை இழந்தனர். மொத்த தமிழ் சமூகத்தினதும் உள்ளம் காயமடைந்திருந்தது.


சிங்கள மக்கள் யுத்த வெற்றியைக் கொண்டாடினாலும், சிங்கள சமூகத்தையும் யுத்தம் பாதித்திருந்தது. பெரியதோர் விலையை செலுத்தியே வெற்றிகொண்டிருந்தனர். உயிரிழந்த இராணுவத்தினர் எண்ணிக்கையும் அதிகமானதே. வெளிப்படையாக வெற்றிபெற்றிருந்தாலும் உள்ளார்ந்த காயங்கள் இருந்தன. வெற்றிக்களிப்பால் அவர்களின் உண்மையான நிலையை அவர்கள் உணரவில்லை.

எதிரியை மாற்றல்

யுத்த வெற்றி சிங்கள இனக் குழுக்களிடையே இனவாத மனோநிலையை ஏற்படுத்தி வளர்க்க காரணமாக அமைந்ததென்று கருதலாம். எல்.ரீ.ரீ.ஈ யுத்தமொன்று இருக்கும்வரை சிங்கள- முஸ்லிம் நட்பும் உறவும் நல்ல நிலையில் தொடர்ந்தது. எல்.ரீ.ரீ.ஈயினரின் ஆரம்பத்தில் சில முஸ்லிம்களும் அவர்களுடன் இணைந்திருந்தாலும் பின்னர் அந்த உறவு தொடரவில்லை. பின்னர் எல்.ரீ.ரீ.ஈயினர் முஸ்லிம்களை தாக்கவும், முஸ்லிம்களை இருப்பிடங்களில் இருந்து விரட்டியடிக்கவும் செய்தனர். இதனால் முஸ்லிம்கள்


சிங்கள படையை ஆதரித்தனர். இதனால் சிங்களவர்களும் முஸ்லிம்களை நெருங்கிய சகோதரனாக கருதினர். யுத்த வீரர்கள் பட்டியலில் முஸ்லிம்களும் உள்ளடங்கினர்.

தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சிங்கள இனவாத  வேலைத்திட்டங்களை முன்னெடுக்க புதிய எதிரியொன்று தேவைப்பட்டது. அதனைத் தொடர்ந்து முஸ்லிம்களை சிங்களவர்களின் பிரதான எதிரியாக கருதினர். எந்தவொரு இனவாத நடவடிக்கையையும் முன்னெடுத்துச் செல்வதற்கு எதிரியொன்று அவசியம். உண்மையான எதிரியில்லையென்றால் போலி எதிரியொன்று உருவாக்கப்பட வேண்டும். எதிரியைக் கொண்டு பயம்காட்டிக்கொண்டே இனவாதத்தை முன்னெடுக்கலாம். தமிழ் எதிரிகளைத் தோற்கடித்தவர்கள் புதிய எதிரியாக முஸ்லிம்களைத் தெரிவுசெய்துகொண்டனர்.


விம்பம் உருவாக்குதல்

இவ்வாறான இனவாத செயற்பாடுகளுக்கு எதிரியை தெரிவுசெய்வது மாத்திரம் போதுமானதாக அமையாது. எதிரி குறித்த பயம், வெறுப்பு போன்றவற்றை ஏற்படுத்தி எதிரிக்கு விம்பம் கொடுக்கப்பட வேண்டும். நவீன
சிங்கள பௌத்த சிந்தனையின் ஆரம்ப கர்த்தாவான அநாகரிக தர்மபால முஸ்லிம்களுக்கெதிரான குரோதங்கள் ஏற்பட ஏதுவான விடயங்கைளை குறிப்பிட்டிருந்தார். எதிரிக்கு விம்பம் கொடுக்கும் திட்டத்திற்கு அது பிரயோசனமடைந்தது.

தர்மபால முஸ்லிம்களை ஹம்பயா என்றே அழைத்தார்.

அதன் பொருள் மாட்டிறைச்சி சாப்பிடும் மக்கள் என்பதாகும். முஸ்லிம்கள் பௌத்தர்களை ஏமாற்றுபவர்கள் என்ற பீதியையும் ஏற்படுத்தியிருந்தார். இதனால் இனவாத தலைவர்களுக்கு முஸ்லிம்கள் குறித்த விம்பத்தை ஏற்படுத்துவது கடினமாக அமையவில்லை.


முஸ்லிம் சனத்தொகை அதிகரித்து வருவதாக கூறினர். சிங்களவர்களின் எண்ணிக்கையை குறைக்க ஆடைகளிலும் ஆகாரங்களிலும் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் மாத்திரைகளை இடுவதாக கூறினர். முஸ்லிம்களின் வியாபாரத்தையும் வீழ்த்தினர். நாட்டின் சனத்தொகை கணக்கெடுப்பின் படி சிங்களவர்களின் சனத்தொகை வளர்ச்சிகண்டுள்ளதே தவிர குறைவடைந்தில்லை.

வத பெஹெத் நாடகம்

உணவு வகைகளுக்கோ, ஆடைகளுக்கோ மாத்திரைகளை இடுவதன் மூலம் மலட்டுத் தன்மையை ஏற்படுத்த முடியாது. அது விஞ்ஞானம் ஏற்றுக்கொண்ட உண்மையாகும். மலட்டு மாத்திரை கதை இன்று நேற்று வந்த விடயமல்ல. ஆறு, ஏழு வருடங்களுக்கு முன்னர் சமூகமயப்படுத்தப்பட்ட ஒன்றாகும். முஸ்லிம் கடைகளில் விற்கப்படும் ஆடை, ஆகாரங்களில் சிங்கள பெண்களை மலடாக்கும் விடயங்கள் உள்ளடங்கியுள்ளன என்ற போலி செய்தியை பரப்பினர். இவற்றில் எவ்வித சத்தியத் தன்மையும் இல்லை. நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக 83 போன்ற கலவரமொன்று ஏற்படும் நிலவரமாகும். கண்டி திகன சம்பவத்தையும் அதற்கான ஓர் ஆரம்பமாகவே கருதலாம். இந்த எச்சரிக்கையை உணரும் ஞானம் இலங்கைக்கு உண்டா?


நாட்டின் வங்குரோத்து நிலைமை

வத பெஹெத் கதையை முஸ்லிம் மக்கள் தெரிந்து வைத்திருந்தும் அதற்கு பதிலளிக்க பயப்பட்டனர். முஸ்லிம் தலைவர்களும் ஒதுங்கி பார்த்துக்கொண்டிருக்கும் கொள்கையை நடைமுறைப்படுத்தினர். நாட்டின் பிரதான மதத் தலைவர்களும் முஸ்லிம் எதிர்ப்பு வேலைத்திட்டங்களை எதிர்க்கவில்லை. நாட்டில் புத்திஜீவிகள் இருந்தும் வத பெஹெத் கதைக்கு விளக்கமளிக்கவில்லை. ஊடகங்களும் குறித்த முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து அறிந்திருந்தார்கள். பொதுமக்களுக்கு உண்மையை அறிவிக்கும் இடத்திற்கு செல்லாது அமைதிகாத்தனர். நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்களும் இவ்விடயத்தை தெரிந்துவைத்திருந்தார்கள். எனினும் இதனைத் தடுக்க நடவடிக்கையெடுக்கவில்லை.


இவை மூலம் நாட்டின் முறையற்ற இயக்கத்தையே தெளிவுபடுத்துகின்றன. கண்டிக்கு வந்தது பெரஹராவல்ல. பெரஹரையில் கசையடிப்பவர்கள் மாத்திரமே. உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவந்த பின்னர்
தேசத்தைக் கட்டியெழுப்ப தவறியதன் விளைவே இது. நாடு ஓர் அராஜகத்தின் பால் பயணிக்கின்றது. நாட்டுக்கு தேவையான வியூகத்தை வகுத்துக்கொள்ள சர்வ கட்சியினரை உள்ளடக்கிய அரசாங்கமொன்று நிறுவப்பட வேண்டும். இதன் மூலமே நிலைமைகளை கட்டுக்குள் கொண்டுவரலாம். இதனை உணர்ந்துகொள்வதற்கு  தேவையான ஞானம் எம் தலைவர்களுக்கு உண்டா?

-விக்டர் ஐவன்- 
(தமிழில்: ஆதில் அலி சப்ரி)
"நாட்டை ஹம்பயர்களிடமிருந்து காப்பாற்றுவோம்" "நாட்டை  ஹம்பயர்களிடமிருந்து  காப்பாற்றுவோம்" Reviewed by Madawala News on March 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.