இலங்கையை இறுக்கும் இனவாதம்.


எம்.எம்.ஏ.ஸமட்
இந்நாட்டின் அனைத்து சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நல்லெண்ணம் கொண்ட சகல
மக்களும் சகவாழ்வுடன் நிம்மதியாக வாழ வேண்டுமென்றே விரும்புகின்றனர்.

ஆனால், இனவாதமும,; மதவாதமும் இம்மக்களின் சமாதான, சகவாழ்வுக்குத் தொடர்;ச்சியாக சவால் விடுத்துக்கொண்டிருப்பதை வரலாற்று நெடுங்கிலும் அவதானிக்க முடிகிறது.


அண்மைக்காலமாக சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களை  நெருக்கடிக்குள் தள்ளுவதை இலக்காகக் கொண்டு செயற்படும் கடும்போக்காளர்கள்; முஸ்லிம்களின்; மத, கலை, காலசார, பண்பாட்டு நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விடயங்களில் போலியான குற்றச்சாட்டுக்களைத் தாக்குதல்களை மேற்கொணடு வருவதைக் காணலாம்.
இந்நாடு சுதந்திரமடைவதற்கு முன்னரும், பின்னருமான காலங்களில்  பெரும்பான்மை பௌத்த சிங்கள மக்கள் மத்தியிலுள்ள கடும்போக்காளர்கள் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொண்ட இனவாதச் செயற்பாடுகள் தீராத இனப்பிரச்சினையையும், முப்பது வருட கால கொடூர யுத்தத்தையும், பேரழிவுகளையும் விளைவுகளாக கொடுத்தது.


அதன் வடுக்களும், வேதனைகளும், மறையாத, மறவாத நிலையில், அவற்றின் அழிவுகளுக்கும், இழப்புக்களுக்கும் முற்றுமுழுதாக நிவாரணம் வழங்கப்படாத சூழலில், பாதிக்கப்பட்ட மக்கள் பாதிப்புக்களுக்கு நிவாரணமும் நிரந்தரத் தீர்வும் வேண்டி வடக்கிலும், கிழக்கிலும், தெற்கிலும் கூட பல்வேறு கோணங்களில் போராட்டங்களை நடத்தி வருவதுடன், அவற்றினூடாக பல வேண்டுகோள்களையும், கோரிக்கைகளையும் முன்வைத்து சர்வதேசத்தினதும், அரசினதும் கவனத்தை ஈர்க்கச் செய்து வருகின்றனர்.


சர்வதேசத்தின் இறுக்கமான பிடிக்குள் இலங்கை தள்ளப்படுவதற்கு இனவாத்தின் பரம்பல் ஏற்படுத்தி காயங்கள்தான் என்பதை மறுக்க முடியாது. சர்வதேசம் பல்வேறு பிரேரணைகளை முன்வைத்து அவற்றை நிறைவேற்றுங்கள் இல்லேயல் சர்வதேச நியாயாதிக்கத்தை நோக்கி நகர வேண்டி வரும் என இலங்கைக்கு எச்சரிக்கை விடும் அளவுக்கு மோசமான நிலைமையை ஏற்படுத்தியவர்கள் பௌத்த சிங்கள மக்கள் மத்தியிலுள்ள கடும்போக்கு மதவாதிகளும் இனவாதிகளும் என்பதை மறுதலிக்க இயலாது.


இச்சுதந்திரத்தேசத்தில் வாழும் அனைத்து இன மக்களும் சுதந்திரமாக வாழ முடியும் என்றும், அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுதலாகாது என்றும் உரிமைச் சாசனங்களும், நிபந்தனைகளும், நியதிகளும் சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் வகுக்கப்பட்டிருந்தும,; இந்நாட்டின் பெரும்பான்மை சமூகமான பௌத்த சிங்கள மக்கள் மத்தியிலுள்ள கடும்போக்கு மதவாதிகளும், இனவாதிகளும் மதவாதத்திற்கும், இனவாத்திற்கும் முன்னுரிமை வழங்கி  சர்வதேச யாப்புக்களையும், தேசிய அரசியல் சாசனங்களையும் அச்சாசனங்களினால் உருவாக்கபட்டுள்ள சட்டங்களையும் சவால்களுக்கு உட்படுத்தி, அச்சட்டங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, அவற்றை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாது பெரும்பான்மையினர் என்ற மமதையில் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக செயற்படுவதானது சமூகங்களின் சகவாழ்வுக்கு மாத்திரமல்ல இந்நாட்டின் சட்டத்திற்கும், நிர்வாகச் செயற்பாடுகளுக்கும் எதிர்கால அபிவிருத்திக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்து விடுவதோடு இந்நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளுக்குத் தடையாகவும் சவாலாகவுமுள்ளதுடன் இலங்கையை சர்வதேசத்திடம் இறுக்கியுள்ளது


குறிப்பாக கடந்த 2012ஆம் ஆண்டின் பின்னர் இலங்கை முஸ்லிம்களை முதன்மைப்படுத்தி மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல் சம்பவங்கள் முஸ்லிம்கள் வாழப் பாதுகாப்பு அற்ற நாடுகள் வரிசையில் இலங்கையையும் உட்படுத்துவதற்கு காரணமாயிற்று. இனவாதிகளின் நடவடிக்கைகள் சர்வதேச நிறுவனங்கள் இலங்கை குறித்து அறிக்கைவிடுவதற்கும், சர்வதேசத்தின் கேள்விகளுக்கு பதிலளிக்கச் செய்வதற்கும் உந்துசக்தியாக அமைந்துவிட்டன.


சர்வதேசத்தின் இறுக்கத்திற்குள்; இலங்கை.


இலங்கையானது, சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டதாகக் கூறப்படும் விடயத்தில் நம்பகரமான பொறுப்புக் கூறல்  பொறிமுறையை முன்னெடுக்காவிடின் இந்த விவகாரம் சர்வதேச நியாயாதிக்கத்தை நோக்கி பயணிக்ககும் என்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் எச்சரிக்கைக்கு முகம்கொடுத்துள்ள நிலையில், இந்நாட்டின் மீது சர்வதேசம் வைத்துள்ள கறுப்புப்புள்ளியை நீக்குவதற்காக இவ்வரசு முயற்சித்து வரும் வேளையில், பௌத்த சிங்கள் கடும்போக்காளர்கள் மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகள் எவ்விதத்திலும் இக்கறுப்புப்புள்ளியை அகற்ற வலிகோலாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.


நாட்டின் மீதுபற்றுள்ளவர்கள் இந்நாடு பல்துறையிலும் முன்னேற வேண்டும், சர்வதேசத்தில் நற்பெயரப் பெற வேண்டுமென்றே சிந்திப்பர். ஆனால், இங்குள்ள பௌத்த சிங்கள பேரினவாத சக்திகள் நாட்டின் மீது பற்றுள்ளவர்களாக சிங்கள மக்கள் மத்தியில் அடையாளாப்படுத்திக்கொண்டு, சர்வதேசத்தின் பிடிக்குள் தள்ளப்பட்டுள்ள இலங்கையின் நிலைமை குறித்து எவ்வித  அக்கறையும் கொள்ளாது, தங்களை இயக்குகின்ற சக்திகளின் இலக்குகளை வெற்றிகொள்ளச் செய்வதற்காகச் செயற்பட்டு கொண்டிருப்பதைக் காண முடிகிறது.


கடந்த வருடம் கொழும்பில் தங்கியிருந்த ரோஹிங்கியா  முஸ்லிம் அகதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்கு மற்றும்  சென்ற நவம்பர் மாதம் கிந்தோட்டையில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் என்பவற்றை காரணங்களாகக் குறிப்பிட்டு கடந்த 22ஆம் திகதி சர்வதேச மன்னிப்புச் சபையினால் வெளியிடப்பட்டுள்ள உலக நாடுகளின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுக்களுக்கான அறிக்கையில் முஸ்லிம்கள் வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நாடாக இலங்கையை பட்டியலியிட்டிருப்பதானது இலங்கை மீது சர்வதேசம் வைத்துள்ள கறுப்புப் புள்ளியாகவே கருதவேண்டியுள்ளது.


அத்தோடு, கடந்த ஜனவரி மாதம் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் வாழும் மத சிறுபான்மையினர் பாதுகாப்பின்மையை உணர்கின்றனர். குறிப்பாக இலங்கை முஸ்லிம்கள் அச்சத்தில் உள்ளனர் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.  இதேபோல் கடந்த வருடம் யாழ்;ப்பாண முஸ்லிம் அமைப்பினர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிறுபான்மை விவகாரங்களுக்கான பிரதிநிதி றீட்டா ஐசக்கை சந்தித்தவேளை, ' இலங்கை முஸ்லிம்களின் நிலைகண்டு நான் அதிர்ச்சியடைந்தேன்' எனக் குறிப்பிட்டிருந்ததர்.


இவ்வாறு சர்வதேசம் கவலை கொள்ளும் அளவுக்கு பௌத்த சிங்கள் பேரினவாத்தால் இலங்கை வாழ் முஸ்லிம்கள் துவசம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது புலப்படுத்தப்படுகிறது. அத்துடன், இலங்கை மீது வைக்கப்பட்டுள்ள கறுப்புப்புள்ளியை அகற்றுவதற்குத் தடையாகவுள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும். சிறுபான்மை சமூகங்களை உணர்வு ரீதியாகவும,; செயற்பாட்டு வடிவிலும் அச்சுறுத்துவதற்காக வௌ;வேறு பெயர்களில் பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டிருக்கும் அமைப்புக்களும் அவர்களோடு இணைந்து செயற்படும் கடும்போக்காளர்களும், இனவாதிளும் வௌ;வேறு போலிக் காரணங்களைக் கூறி முஸ்லிம்கள் மீது மேற்கொண்டு வருகின்ற தாக்குதல் சம்பவங்களின் வரிசையில் அம்பாறை நகரிலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைககள், வானகங்கள் உட்பட பள்ளிவாசலும் தாக்கப்பட்டிருப்பதானது சர்வதேசத்தின் இலங்கை மீதான பார்வையை மேலும் வலுப்படுத்துமென அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில், அம்பாறை நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு உடனடியாக அவதானம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இனவாதத்தின் கழுகுப் பார்வைக்குள் அம்பாறை.

அம்பாறை மாவட்டத்தில்; முஸ்லிம்கள் செறிவாக வாழ்வதும் பேரினவாதத்திற்கு பெரும் தலையிடிதான். இனவாதத்தின் கழுகுப்பார்வையினால் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் செறிவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவதன் ஓர் அடையாளமாகவும் செறிவுக்குறைப்புக்கான நடவடிக்கைகளில் ஒன்றாகவும் பௌத்த அடையாளங்கள் இம்மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் காணப்படுவாகக் கூறப்படுவதைச் சுட்டிக்காட்டலாம்; பேரினவாதத்தின் கண்களுக்குள் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் வளர்ச்சி தொடர்ச்சியாகக் குத்திக் கொண்டிருப்தைக் இதன் மூலம் கண்டுகொள்ளலாம்.


அம்பாறை மாவட்டத்தில் 340 தொல்பொருள் அமைவிடங்கள் காணப்படுவதாகவும், அவற்றை பாதுகாப்பு படைகளைக் கொண்டு பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கடந்த வருடத்தில் அறிவிக்கப்பட்டமையும்;; அம்பாறை மாவட்ட முஸ்லிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தன. அத்தோடு, அம்பாறையின் இறக்காமம் பிரதேச சபைக்குற்பட்ட மாணிக்கமடு மாயக்கல்லி மலையடிவாரத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணியை நீதிக்குப்புறம்பாக அபகரிக்கவும் அதில் விஹாரையைக் கட்டவும் முயற்சித்துக்கொண்டிருப்பதும் இந்நடவடிக்கைகளுக்கு அரசியல் பின்னணி வகிப்பதும் இம்மாவட்ட முஸ்லிம்களை நெருக்கடிக்குள் தள்ளியிருக்கிறது.


கடந்த காலங்களில் திட்டமிடப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றங்களின் ஊடாக இம்மாவட்டத்தில் பௌத்த சிங்கள் மக்களின் சனத்தொகை அதிகரிக்கப்பட்டது என்பது வரலாறு கூறும் நிதர்சனமாகும். இந்த வரலாற்றை மீண்டும் புதிப்பிப்தற்கு புதிய கோணத்தில் கடும்போக்கு பௌத்த துறவிகளை முன்னிருத்தி இறக்காமம் மாணிக்கமடு மாயக்கல்லி மலையடிவாரத்தையும் அதையண்டிய பிரதேசங்களையும் காவுகொள்ள முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும்; குறிப்பிடப்படுகிறது.
இம்முயற்சியானது இம்மாவட்டத்தில் வாழும் தமிழ், முஸ்லிம்கள் மத்தியில் சந்தேகத்iயும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருப்பதை வெறுமேன தட்டிக்கழிக்க முடியாது. ஏனெனில் தீகவாபி புனித பூமி என்ற பெயரில் முஸ்லிம்களின் பல ஏக்கர் காணி சுவிகரிக்கப்பட்டுள்ளமை இச்சந்தேகத்திற்கும் அச்சத்திற்கும் காரணமாக அமைகிறது.


இக்காரணத்தின்; அடிப்படையில்தான் மாணிக்கமடு மாயக்கல்லி மலையில் இனவாதம் மோகம்கொண்டு அதனூடாக தங்களது நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுப்பதற்கு அம்பாறை வாழ் முஸ்லிம்கள் தங்ளது எதிர்ப்பைக் காட்டிக்கொண்டு வருகிறார்களே தவிர, பௌத்த மக்களின் வணக்க வழிபாட்டுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தவல்ல  என்ற யதார்த்தத்தை உணரும் பௌத்த சிங்கள மக்கள் அறிவார்கள். இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தின் வரலாற்றுப் பின்னணி குறித்தும் அறிவ வேண்டிய தேவையுள்ளது.



1960ஆம் ஆண்டுக்கு முன்னர் அம்பாறையானது மட்டக்களப்பு மாவட்டத்துடன் இணைந்திருந்தது. மட்டக்களப்பு மாவட்டம் மிக நீண்ட காலமாக புணானை முதல் குமணை வரை தமிழ் மற்றும் முஸ்லிம்களை கொண்ட பிரதேசமாகக் காணப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டம்  அதிக பரப்பைப் கொண்டு காணப்பட்டதாலும், போக்குவரத்து செய்வதில் மக்கள் சிரமத்தை நோக்கியதாலும், அத்தோடு நிர்வாகச் சிக்கல்; காணப்பட்டதாலும் அவற்றை நிவர்த்தி செய்யுமுகமாக கல்முனையில் உதவி அரசாங்க அதிபர் அலுவலகம் ஏற்படுத்தப்பட்டு 1940ஆம் ஆண்டு முதல் இவ்வலுவலகம் செயற்படுத்தப்பட்டு வந்ததை வரலாற்றில் அவதானிக்க முடிகிறது.


இந்நிலையில், மட்டக்களப்புக்குத் தென்கிழக்கே காட்டுப்புறச் சூழலைக் கொண்ட பிரதேசமாகக் காணப்பட்ட தற்போது அம்பாறை என அழைக்கப்படும் இப்பிரதேசத்தையும் சேர்த்து மட்டக்களப்பு மாவட்டத்துடன் இணைந்திருந்த கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, பொத்துவில், பாணமை, உகன, தமன ஆகிய பிரதேசங்கள் பிரித்தெடுக்கப்பட்டு 1961ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் தலைநகராக அம்பாறை தேர்ந்தெடுக்கப்பட்டது.


ஆனால், உண்மையில் இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட இப்பிரதேசங்களை உள்ளடக்கிய மாவட்டத்திற்கு அம்பாறை தவிர்ந்த கல்முனை போன்ற ஏனைய பிரதேசங்களின் பெயர்களில் ஒன்றை வைத்திருக்க வேண்டும். அப்பெயரிலேயே இம்மாவட்டத் தலைநகரின் பெயரும் அமைந்திருக்க வேண்டுமென வரலாற்று ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஏனெனில், இவ்வாறு உருவாக்கப்பட்ட இம்மாவட்டத்தின் தலைநகராகக் தேர்ந்தெடுக்கப்பட்ட அம்பாறையில் வாழ்ந்த பௌத்த சிங்கள மக்களின் சனத்தொகையை விடவும் ஏனைய பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ் முஸ்லிம்களின் சனத்தொகை அதிகமாகும்.


புள்ளிவிபரங்களின் பிரகாரம் 1963ஆம் ஆண்டு 61,996 ஆகக் காணப்பட்ட சிங்கள மக்களின் சனத்தொகையானது 1981ஆம் ஆண்டு 146,943 ஆகவும் 2001ஆம் ஆண்டில் 236,583ஆகவும் அதிகரித்தது அல்லது அதிகரிக்கப்பட்டது.


திட்டமிட்ட குடியேற்றமே இந்த எண்ணிக்கை அதிகரிப்புக்குக் காரணமாகும்.. இதற்கு உதாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்துடன் இணைந்திருந்த மகாஓயா, பதியத்தலாவை, தெஹியத்தகண்டிய, கிராந்திருக்கோட்டை. போன்ற சிங்கள மக்கள் அதிகளவில் வாழ்ந்த குடியேற்றக் கிராமப் பிரதேசங்கள் அம்பாறை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டதன் ஊடாக முஸ்லிம்கள் அதிகப்படியாக வாழும் மாவட்டம் என்ற நிலை மாற்றப்பட்டது. இதன் பின்னணியில் திட்டமிட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல் செயற்பட்டது என்பது நிதர்சனமாகும்.


அம்பாறை மாட்டத்தின் அம்பாறை தவிர்ந்த பொத்துவில், கல்முனை மற்றும் சம்மாந்துறைப் பிரதேசங்களில் முஸ்லிம்களின் சனத்தொகை அதிகமாகக் காணப்பட்டது. சனத்தொகைக் கணிப்பீடுகளின் பிரகாரம், 1963ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கையானது 97,621ஆகவும் தமிழர்களின் எண்ணிக்;கை 50,497ஆகவும் காணப்பட்டது. 1981ல் முஸ்லிம்கள் 161,568ஆகவும் 2001ல் 264,620ஆகவும் காணப்பட்டனர். தமிழர்களின் எண்ணிக்கை 1981ல் 79,257ஆகவும், 2001ல் 109,903ஆகவும் காணப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.


இவ்வாறான நிலையில் 2012ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்பின் பிரகாரம், 4,415 சதுர கீலோமீற்றர் பரப்பளவையும், 20 பிரதேச செயலகப் பிரிவுகளையும், 503 கிராம சேவகர் பிரிவுகளையும் கொண்ட அம்பாறை மாவட்டத்தில் 648,057 பேர் வாழ்கின்றனர். இத்தொகையில் சிங்களவர் 251,018 பேரும், 282,484 முஸ்லிம்களும், 112,750 தமிழர்களும் அடங்குவர் என்பதோடு மக்கள் தொகையில் முஸ்லிம்கள் அதிகப்படியாக இம்மாவட்டத்தில் வாழ்வதானது அல்லது அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களின் அதிகரிப்பானது இனவாதிகளினதும் அவர்களை திரைமறைவில் இயக்கும் அரசியல் சக்திகளினதும் காழ்ப்புணர்ச்சியை அதிகரிக்கச் செய்திருக்கிறது.
இம்மாவட்டத்திலுள்ள சிங்கள மக்களின் இனவிருத்தியை தடுப்பதற்காக முஸ்லிம்கள் செயற்பட்டிருந்தால் சிங்கள மக்களின் சனத்தொகை எவ்வாறு அதிகரித்தது என்ற கேள்வியும் எழுகிறது. அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் மீதான போலியான குற்றச்சாட்டுக்கான பின்னணி இம்மாவட்ட முஸ்லிம்களின் வளர்ச்சி தொடர்பில் இனவாதம் கொண்டுள் காழ்ப்புணர்ச்சி என்பதே உண்மையாகும்.  இக்காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாட்டின்  அங்மாகவே அம்பாறை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களிலுள்ள அரச நிறுவனங்களின் தலைமைக் காரியாலயங்களை அம்பாறை நகருக்கு நகர்த்துவதற்கான முயற்சிகள் அரசியல் சக்திகளினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதை அவதானிக்க முடியும்.


இருப்பினும், கடந்த காலங்களில் இனவாதிகளுக்கும், மதவாதிகளுக்கும் இவர்களை இயக்கும் அரசியல் சக்திகளுக்கும் ஊட்டச் சக்தியாகத் செயற்படும் ஒரு சில சிங்கள ஊடகங்கள் இந்த இனவாதச் செயற்பாட்டுக்கு எதிராகச் செயற்படுவோரை அடிப்படைவாதிகள் என்றும் பௌத்த விஹாரை அமைப்பதற்கு இவர்கள் தடையாகச் செயற்படுகிறார்கள் என்றும் சிங்கள மக்கள் மத்தியில் பரப்புரை வழங்கி வந்த அதே கோணத்தில்தான் கடந்த செவ்வாய்க்கிழமை முஸ்லிம் நபருக்குச் சொந்தமான ஹோட்டலில் நடந்த போலிக்குற்றச்சாட்டுச் சம்பவத்தை திசைதிருப்யிருக்கிறது.


அம்பாறை நகரிலுள்ள முஸ்லிம் நபருக்குச் சொந்தமான ஹோட்டலில் தயாரிக்கப்பட்;ட உணவில் இனவிருத்தியையத்தடுக்கும் மாத்திரை கலக்கப்பட்டதாகக் கூறி அந்நகரிலுள்ள பள்ளிவாசலையும், முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகளையும், வாகனங்களையும் அடித்து நொருக்கி தீயிட்டுக் கொழுத்திய அநியாயத்திற்கு முஸ்லிம்கள் நீதிகோரியிருக்கும் நிலையில் சிங்கள ஊடகங்கள் முழுப் பூசணிக்காயையும் சோற்றுக்குள் மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. சம்பவங்களாகும். முஸ்லிம்களால் அம்பாறை சிங்கள மக்களின் இனவிருத்தி அழிக்கப்படுவததககச் சித்தரித்து சிங்கள் மக்கள் மத்தியில் பரப்ப முயற்சி செய்துள்ளமை இவ்வூடங்கள் ஊடக தர்மத்துக்கப்பால் போலிக்குற்றச்சாட்டை பரப்புவதற்கு துணைபோயிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுவதையும் குறிப்பிட்டாக வேண்டும்.


கடும்போக்காளர்களின் செயற்பாடுகளும் எதிரொலியும்


கடந்த ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் மாணவர்கள் அணியும் பர்தாவுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்தியமை,  பள்ளிவாசல்கள் இயங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டமை, ஹலால் உணவு உண்ணும் உரிமையை கேள்விக்குட்படுத்தியமை, வர்த்தக நடவடிக்கைகளுக்கு தடை விதித்தமை, முஸ்லிம்களை அடிப்படைவாதிகள், மதவாதிகள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்ற பட்டத்திற்குள்ளாக்கி உள ரீதியாக உணர்வுகளைப் பாதித்தமை போன்ற 400க்கும் மேற்பட்ட தாக்குதல் நடவடிக்கைகள் கடுப்போக்கு இனவாத அமைப்புக்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நடவடிக்கைகளை கண்டும் காணதுபோன்று செயற்பட்ட கடந்த ஆட்சியின் மீது சிறுபான்மை மக்கள் அதிலும் முஸ்லிம்களில் 90 வீதமானோர் அவ்வாட்சியின் மீது நம்பிக்கை இழந்தனர்.


அந்த நம்பிக்கை இழப்பை 2015 ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும்; தமது வாக்குகளினால் வெளிப்படுத்தினர். ஆட்சி மாற்றத்தையும் கண்டனர்.

ஆனால, ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதே தவிர கடும்போக்காளர்களின் செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படவில்லை. கடும்போக்காளர்களினதும் இனவாதிகளினதும் செயற்பாடுகள் மாற்றம் பெறாது தொடந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த வருடம் காலிக்கோட்டை தர்ஹாவின் சுற்றுமதில் உடைக்கப்பட்டமை, மாத்தறையில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகள் குண்டுதாக்குதலுக்கு உட்பட்டமை, சித்திரைப்புத்தாண்டு காலத்தில் முஸ்லிம் வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என சிங்கள மக்கள் மத்தியில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தமை போன்ற நிகழ்வுகளை அவதானிக்கின்றபோது, கடந்த ஆட்சியில் கடும்போக்கு மதவாதிகளினாலும், இனவாதிகளினாலும் பதியப்பட்ட அழிக்கப்படாத கறுப்புப் பக்கங்கள் இந்த நல்லாட்ச்சியிலும் தொடர்ச்சியாக அதிகரிக்கப்படுகின்றன.


கடந்த ஆட்சியி அளுத்கமையிலும், இந்நல்லாட்சியின் கடந்த வருடத்திர் கிந்தோட்டையிலும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சொத்தழிவுகளுக்கான நிவாரணங்கள் முழுமையாக வழங்கப்படாத நிலையில், மேலும் அம்பாறை நகரிலும் முஸ்லிம்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய நிலைக்கு இந்நல்லாட்சி அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.
மாற்றமடையாத கடும்போக்காளர்களின் செயற்பாடுகள்  இந்நாட்டில் வாழும் சகல இன மக்களுடனும் எப்போதும் நல்லிணக்கத்துடனும்,; சகவாழ்வுடனும் ஏனைய இனத்தினரது உரிமைகளுக்கும் அவர்களின் மத கலை, கலாசார விடயங்களுக்கும் மதிப்பளித்தும,; கௌரவப்படுத்தியும் வாழ வேண்டும் என எண்ணும் முஸ்லிம்களின் உள்ளங்களை வெகுவாகக் காயப்படுத்தியிருக்கிறது. நிம்மதிக்கு குந்தகம் விளைவித்திருக்கிறது.


 பல்வேறு விமர்சனங்களையும் எதிரொலியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இருந்த போதிலும், கடும்போக்காளர்களின் நடவடிக்கைகளினால் முஸ்லிம் சமூகம் வெகுவாகப் பாதிக்கப்பட்;டும் இப்பாதிப்புக்கள் தொடர்பில் சிந்திக்காத,  தானும் தனது அன்றாட நடவடிக்கைகளும் என்றெண்ணி வாழும் சமூக உணர்வற்ற ஜென்மங்கள் முஸ்லிம் சமூகத்துக்குள் இருப்பதை எண்ணி வேதனைப்பட வேண்டியுள்ளது.


அத்தோடு, கடும்போக்காளர்களின் முஸ்லிம் எதிர்ப்பு தாக்குதல் நடவடிக்கைகளுக்கு  எதிராக முஸ்லிம் அரசியல் தலைமைகளும,; பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆளுக்கொரு கோணத்தில் ஊடகங்களுக்கு அறிக்கை விடுகிறார்களே தவிர, ஒன்றுபட்டு நிரந்தரத் தீர்வைப் பெறுவதற்கான இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளை முன்னெடுக்க முன்வராதுள்ளமை முஸ்லிம் அரசியல் பலவீனத்தையும், கட்சி அரசியலில் கொண்டுள்ள அரசியல் போதையையும் புலப்படுத்துவதாகவே அமைகிறது.
ஜனாதிபதியின் நல்லிணக்க முயற்சியும் நம்பிக்கையும்
கடும்போக்காளர்கள் தங்களின் இருப்புக்கும் மத, கலை, கலாசார பண்பாட்டு வியாபார விடயங்களுக்கும் ஆட்சியாளர்களின் அனுசரணையுடன் அச்சுறுத்தலாக இருப்பார்கள், இந்நாட்டில் நிம்மதியுடன் வாழ முடியாது, தங்களது பிரச்சினைகள் தீர்க்கப்படாது என்ற காரணங்களினாலேயே 2015 ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை சமூகங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தனர்.


ஆட்சி மாற்றத்துக்கு வழிகோலினர். ஆனால், கடந்த ஆட்சியில் இருந்த அச்சுறுத்தல் இந்நல்லாட்சியிலும் தொடர்கதையாகத் தொடரப்படுவது சிறுபான்மை சமூகங்களின்; மத்தியில் குறிப்பாக முஸ்லிம்கள் மத்தியில் பல்வேறு கேள்விக் கணைக்களை ஏற்படுத்தியிருக்கிறது.
சமாதான சகவாழ்வு பற்றியும் நல்லிணக்கம் பற்றியும் அதிகாமாகப் பேசப்படும் இந்நல்லாட்சியில் அதற்கான அமைச்சும் உருவாக்கப்பட்டு சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும், சகவாழ்வையும் கட்டியெழுப்புவதற்கான செயற்றிட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

சமாதானத்திற்கும், நல்லிணக்கத்திற்கும் எதிரான சவால்களை வெற்றிகொள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள ஜனாதபதி நல்லிணக்கம் என்பது ஆன்மீகத் தத்துவம், ஆன்மீகப் பக்குவத்தை அடையாத சமூகத்தில் அதனை வெற்றிகொள்ளச் செய்வது சவால் நிறைந்தது என்றும் குறிப்பிட்டுள்ளதைக் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்படுகின்ற கடும்போக்காளர்கள் ஆன்மீக ரீதியான பக்குவத்தை அடையவில்லை என்பதைப் புலப்படுத்துவதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
இந்நிலையில்,; முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களும், சொத்துக்களும், பள்ளிவாசல்களும் தொடர்ச்சியாக தாக்குதல்களுக்கு உள்ளாகப்படுவதனால் பதியப்படும் கறுப்புப்பக்கங்கள் அதிகரிக்கப்படுகிறதே தவிர நிரந்தரத் தீர்வு கிடைத்ததாகத் தெரியவில்லை.


அம்பாறை மாவட்ட மக்களினது நிம்மதியைக் கேள்விக்குட்படுத்தியுள்ள இந்நடவடிக்கைக்கு உரிய பரிகாரம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் பஸ் போன பின் கைகாட்டும் பாரம்பரிய அரசியல் நடவடிக்கைகளுக்கு அப்பால், இவ்விடயத்தில் அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்து முஸ்லிம் தரப்புக்களும் முறையான அழுத்தங்களைப் பிரயோகித்து உரிய தீர்வைப் பாதிக்கப்பட்;;ட மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கும், முஸ்லிம்களுக்கான நிரந்தரப் பாதுகாப்பு கிடைப்பதற்கான வழியை ஏற்படுத்துவதற்கும், இப்பிரதேசத்தில் வாழும் மக்களிடையே முரண்பாடுகள் ஏற்படாது சகவாழ்வு கட்டியெழுப்பப்படுவதற்கும்,  ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுப்பது காலத்தின் கட்டாயமாகும்.


இந்நடவடிக்கைகள் எதிர்காலத்தில் இப்பிரதேசம் சிறுபான்மை சமூகத்திடமிருந்து பறிபோகாமல்; பாதுகாக்கப்படுவதற்கும், அச்சமின்றி  வாழ்வதற்கும் வழிவகுக்கும் என்பதுடன் ஒரு இனத்தை மட்டும் கருத்திற்கொண்டு செயற்பட நினைத்தால் நாட்டைக் முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது எனக் கூறும் ஜனாதிபதியின் நல்லிணக்க நடவடிக்கையில் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்கும் இலங்கை சர்வதேசத்திடம் இறுகிக்கொள்ளாது தவிர்ந்து கொள்ளவதற்கும் ஏதுவாக அமையும்.

வீரகேசரி – 03.03.2018



இலங்கையை இறுக்கும் இனவாதம். இலங்கையை இறுக்கும் இனவாதம். Reviewed by Madawala News on March 04, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.