ஊர்மட்ட ஷுரா (ஆலோசனை) சபைகள் காலத்தின் தேவை.


-மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் -
ஊர்மட்ட ஷுரா (ஆலோசனை) சபைகளை அவசரமாக உருவாக்கி கூட்டுப் பொறுப்புடன் சவால்களை எதிர் கொள்வோம்.இந்த நெருக்கடியான கால கட்டத்தில் நாம் மிகவும் விழிப்பாக, கூட்டுப் பொறுப்புணர்வுடன் அவதானமாக நடந்து கொள்ளல் வேண்டும். குறிப்பாக தேசத்தில் உள்ள சகல முற்போக்கு சக்திகள், ஏனைய சமூகங்களை சேர்ந்த சமய, அரசியல், சிவில் தலைமைகளுடன் நல்லுறவைப் பேணிக் கொள்ளல் வேண்டும்.


தேசிய அளவில் செயற்படும் எமது சிவில் சன்மார்கத் தலைமைகளுடன் தொடர்பில் இருப்பதோடு, ஒவ்வொரு மஹல்லாவிலும் சமூகத்தின் எல்லா தரப்புக்களையும் உள்வாங்கிய ஆலோசனை சபைகளை நிறுவி அழகிய தலைமைத்துவக் கட்டுக் கோப்பை ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.
சமூகத்தின் அரசியல் சிவில் சன்மார்கத் தலைமைகள் விடுக்கின்ற அறிவுறுத்தல்களை மதிப்பதோடு, எல்லா மட்டங்களிலும் மஹல்லாக்களிலும் சமூகத்தின் சகல அங்கங்களையும் உள்வாங்கிய ஆலோசனை சபைகளை “ஷூரா” தோற்றுவித்து கூட்டுப் பொறுப்புடன் தலைமத்துவக் கட்டுக் கோப்பை ஏற்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.


என்றாலும், கடந்த காலங்களில் போல் எடுத்ததற் கெல்லாம் கொழும்புத் தலைமைகள், இயக்கத் தலைமைகள், அரசியல் வாதிகள் என்றில்லாது சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் அடிமட்ட ஊர் மட்ட தலைமைகளை கூட்டுப் பொறுப்புடன் பலப் படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.


சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்துகின்ற தரப்புக்களுடன் எல்லா நிலையிலும் ஒத்துழைப்புடன் செயற்படல் வேண்டும், தேவைப் படும் பட்சத்தில் சட்டத் தரணிகளின் சேவைகளை பெற்றுக் கொள்வதிகற்கான நிதியம் ஒன்றையும் ஏற்பாடுகளையும் ஊர் மட்டங்களில் நாம் செய்து கொள்ள வேண்டும்.
இந்த நாட்டில் யாருக்கும் அஞ்சி வாழவோ கெஞ்சி வாழவோ வேண்டிய அவசியம் எந்தவொரு சிறுபான்மை சமூகத்திற்கும் இல்லை, என்றாலும் அரசியலும் இராஜ தந்திரமும் முஸ்லிம் சமூகம் பறிகொடுத்து பரிதவிக்கும் பிரதான ஆயுதங்களாகும்.


எல்லா சமூகங்களிலும் தீய சக்திகள் மிக மிக சிறிய கூட்டத்தினரே. தீய சக்திகளை அரசியல் நோக்கங்களிற்காக பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு மற்றும் பிராந்திய சக்திகள் கருவிகளாக கூலிக்கு அமர்த்தியுள்ளனர், அவர்களுக்கெதிரான எமது ஆத்திர அவசர எதிர்வினையாற்றல்கள் அல்லது எமது ஆக்ரோஷமான வார்த்தைப் பிரயோகங்கள், நிதானமற்ற செயற்பாடுகள் எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல் அமைந்து விடக் கூடாது, அதனையே அவர்கள் எதிர்பார்கின்றார்கள்.


எதிரிகளை இலகுவாக உருவாக்கி விடலாம், எங்களை சரியாக புரிந்து கொள்கின்ற நண்பர்களை உருவாக்குவதே கடினமான பணி, இடை நடுவில் இருப்பவர்களை ஒரேயடியாக மறுபக்கம் தள்ளிவிடும் எழுத்துக்கள் பேச்சுக்கள் எதிர் வினையாற்றல்கள் ஆபத்தானவை.
குறிப்பாக சமூக ஊடகங்களை மிகவும் பொறுப்புணர்வுடன் நாம் பயன்படுத்துதல் வேண்டும், பதிவுகள் மாத்திரமல்ல பகிர்வுகளும் கூட, காட்டுத் தீ போல் வதந்திகளை பரப்புகின்ற சக்திகள் விடயத்தில் விழிப்பாக இருந்து கொள்ள வேண்டும், ஊர்ஜிதம் செய்யாது தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்வது சன்மார்கத்தில் தடுக்கப்பட்டுள்ள விடயமாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இருகரமேந்தி இந்த நாட்டில் வாழும் நல்லோர்கள் எல்லோர்கள் மீதும் கருணை காட்டுமாறும்,நேரிய வழியை நஸீபாக்குமாறும் துஆ செய்து கொள்வோம், தீய சக்திகளின் சதித் திட்டங்களை அவர்களுக்கெதிராகவே திருப்பிவிடும் வல்லமை அவனுக்கே உண்டு.
ஊர்மட்ட ஷுரா (ஆலோசனை) சபைகள் காலத்தின் தேவை. ஊர்மட்ட ஷுரா (ஆலோசனை) சபைகள் காலத்தின் தேவை. Reviewed by Madawala News on March 04, 2018 Rating: 5