தோல்விகண்ட, ஹரீஸ் மீதான ஒழுக்காற்று பாய்ச்சல்




எதற்கு எடுத்தாலும் அமைச்சர் ஹக்கீமை குற்றம் சுமத்துவது வழமையாகிவிட்டது.
அவர் விமர்சனங்களினால் வாட்டி வதைக்கப்படுகிறார். அவ்வாறு முன் வைக்கப்படும் விமர்சனங்கள் பலவற்றில் நியாயங்கள்  நிறைந்திருந்தாலும், அனைத்திலும் நியாயங்கள் இருப்பதாக கூறிவிட முடியாது. அண்மையில் பிரதி அமைச்சர் ஹரீஸ் மீது, மு.காவின் உயர்பீட கூட்டத்தில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது. இருந்த போதிலும் பெரும்பான்மையான உயர்பீட உறுப்பினர்களின் ஆதரவினால், அது தோல்வியையும் சந்தித்திருந்தது. இதனை மு.காவின் செயலாளர் உட்பட சில முக்கிய உயர்பீட உறுப்பினர்கள் இணைந்தே கொண்டுவர முயற்சித்திருந்தனர்.

*ஹரீசினது பேச்சின் சரி, பிழை*

கடந்த புதன் கிழமை ( 07ம் திகதி ) பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர் ஹரீஸ் பிரதமரை மிக கடுமையாக தாக்கி பேசியிருந்தார். அன்று பிரதி அமைச்சர் ஹரீஸ் பேசியிருந்தவைகள் அனைத்தும், அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் சேர்த்ததாக, பன்மையிலேயே அமைந்திருந்தது. அவர் தனது பேச்சை ஒருமையில், தனது கருத்தாக கூறியிருந்தால், அதில் சிறிதேனும் பிழை பிடிக்க எதுவுமில்லை. அனைவரையும் சேர்த்து கூறுவதாக இருந்தால், அது அனைவரும் ஒன்று கூடி எடுத்த முடிவாக இருக்க வேண்டும். அப்படி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. 

பிரதி அமைச்சர் இக் கலவரத்தின் பின்னால் இவ்வரசே உள்ளது என்ற சந்தேக பாணியில் உரையாற்றிவிட்டு, பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையின் போது அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், பிரதமருக்கு எதிராக செயற்பட வேண்டி வருமென எச்சரித்திருந்தார். இக் கலவரத்தின் பின்னால் உள்ள சக்தி என்ன என்பது ஒரு விவாதப்பொருள். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு கருத்து நிலவும். அப்படியான ஒரு விடயத்தை, அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்தாக முன் வைத்தமை தவறானது.

இன்று பிரதமருக்கு உச்ச விசுவாசத்தை காட்டியவண்ணம் சில முஸ்லிம் உறுப்பினர்கள் உள்ளனர். பிரதமர் பிழை செய்தாலும், தனது அரசியல் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, வேடிக்கை பார்ப்பார்கள். இன்னும் சொல்லப் போனால் நியாயப்படுத்துவார்கள். இவர்கள் தனக்கு கீழால் வெட்டுகின்றார்களா ( பிரதமருக்கு அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று கூடி, இவ்வாறான முடிவு எடுத்துவிட்டார்களா என்ற அச்சம் எழ வாய்ப்புள்ளது. ) என்ற சந்தேகத்தை, பிரதி அமைச்சர் ஹரீசின் உரை பிரதமருக்கு உண்டு பண்ணியிருக்கும். இது சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்கால அரசியலுக்கு ஆபத்தானது. ஏன் மு.காவுக்கு கூட ஆபத்தானது என்றாலும் தவறில்லை.

இது இவ்வாறான கோணத்தில் நோக்குகையில் குற்றம் போன்று தோன்றினாலும், பிரதி அமைச்சர் ஹரீஸ் அனைத்து உறுப்பினர்களையும் சேர்த்து கூறியமை, நிச்சயம் பிரதமரை சிந்திக்க வைத்திருக்கும். நமக்கு தெரியாமல் இவ்வாறான முடிவை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துவிட்டார்களோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி இருக்கும். இவ் அச்சம் அவரை உடனடியாக கலவரத்தை கட்டுப்படுத்த தூண்டியிருக்கும். இவ்வாறு அவர் கூறியதில், பிரதி அமைச்சர் ஹரீசுக்கு எந்த தனிப்பட்ட இலாபமும் இருப்பதாக தெரியவில்லை. இந் நிலையில், அனைத்து முஸ்லிமும் இவ்வாறே சிந்திப்பான் என சிந்தித்து, தனது உள்ளத்து உணர்வுகளை, அனைவரதும் உள்ளத்து உணர்வுகளாக வெளிக்காட்டியுள்ளார்.

பிரதி அமைச்சர் ஹரீஸ் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான போக்கு கொண்டவர்.  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த காலத்தில் இடம்பெற்ற கலவரங்களின் பின்னால் கூட, ஐக்கிய தேசிய கட்சி இருப்பது போன்ற பிரச்சாரத்தை அந் நேரத்தில் முன்னெடுத்திருந்தார். அந் நேரத்தில் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸவுடன்  நெருங்கிய தொடர்பிலும் இருந்தவர்களில் ஒருவர். இப்போது அனைவரும் ஓடிச் சென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் உறவுகளை புதுப்பித்து வருகின்றனர். இவர் மீண்டும் பழைய உறவுகளை புதுப்பித்து, இவரை மொட்டு மனம் நெருங்கிவிட்டதோ தெரியவில்லை. இருந்தாலும், இவ்வாறான நேரங்களிலும்  இவர் அரசியல் இலாபம் கொண்டு செயற்படுபவராக, ஏன் மனம் நோக்கவில்லை.

*நிஸாம் காரியப்பர்..?*

மு.காவின் செயலாளர் நிஸாம் காரியப்பர், மு.காவின் தலைமையகமான தாருஸ்ஸலாம் விவகார வழக்கில் அகப்படும் நிலை இருப்பதாக, சில தகவல்கள் குறிப்பிடுகின்றன. இந் நிலையில், அதிலிருந்து தன்னை ஓரளவு காத்துக்கொள்ள, ஆட்சியாளர்களின் வாலைப் பிடித்து தொங்கியேயாக வேண்டும். வாலை சிறிது விசிறினாலும், ஆழமான புதை குழிக்குள் அகப்பட்டுக்கொள்வார். பிரதி அமைச்சர் ஹரீஸ் போன்றோரின், இவ்வாறான ஆட்சியாளர்களை விமர்சிக்கும் செயற்பாடுகளானது, இவ்வாறானோர் மாட்டிக்கொள்ள காரணமாக அமைந்துவிடும். பிரதி அமைச்சர் ஹரீஸ் சமூக நலன் மாத்திரம் கொண்டு பேசாமல், தன் கட்சியில், தன்னை சூழவுள்ளவர்கள் நலனையும் சற்று கருத்தில் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையும் அவர்களிடத்தில் இருக்கலாம். இந் நிலை தொடர்ந்தால், அவர்களின் கதை கந்தல் அல்லவா?

இருவரும் கல்முனையை சேர்ந்தவர்கள். இருவருக்குமிடையில் சிறந்த உறவுகள் இருப்பதாகவும் இல்லை. இப்போது கல்முனையின் சிங்கமாக பிரதி அமைச்சர் ஹரீசே திகழ்கிறார். பிரதி அமைச்சர் ஹரீஸை வீழ்த்தி, அவ்விடத்தை பிடிக்க, இவ்வாறானவற்றை செய்து நிஸாம் காரியப்பர் முயல்கின்றாரோ தெரியவில்லை.

*இதில் ஹக்கீமுக்கு கனெக்சன் உள்ளதா..?*

இதில் அமைச்சர் ஹக்கீமை யாராலும் நேரடியாக குற்றம் சுமத்த முடியாது. பிரதி அமைச்சர் ஹரீசுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்போகும் கதை, நிச்சயம் முன் கூட்டியே அமைச்சர் ஹக்கீமின் காதுகளை எட்டி, அங்கீகாரம் பெற்றிருக்கும். தனக்கு தேவையான ஒரு விடயத்தை, இன்னுமொருவரை வைத்து சாதித்துக்கொள்வதும்,அமைச்சர் ஹக்கீமின் பண்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.  இந்த பார்வையில் சிந்திக்கும் போது, இதன் பின்னணியில் அமைச்சர் ஹக்கீம் இருக்கலாம் என்ற குற்றத்தை சுமத்த முடியும். 

பிரதி அமைச்சர் ஹரீசின் குறித்த பேச்சு அனைவரினதும் ஆதரவை பெற்ற விடயத்தை, அமைச்சர் ஹக்கீம் அறியாமல் இருக்க மாட்டார். மு.கா அழிவின் விளிம்பை நோக்கி சென்று கொண்டிருக்கையில், அனைவரது ஆதரவு பெற்ற விடயத்தை கையில் ஏந்தி, இன்னும் தனது செல்வாக்கை குறைத்து கொள்ளுமளவு அமைச்சர் ஹக்கீம் அரசியல் தெரியாதவருமல்ல. பிரதி அமைச்சர் ஹரீஸை அடக்க வேண்டுமாக இருந்தால், தகுந்த நேரம் பாய்ந்தே கழுத்தை கடித்திருப்பார். அதற்கு இது பொருத்தமான நேரமல்ல. இந்த பேச்சை முன் கூட்டியே அமைச்சர் ஹக்கீம் அறிந்திருந்தால், அநேகமாக தடுத்திருக்கவே வாய்ப்பு அதிகம்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம் போன்றோர், இக் கலவரத்தின் பின்னால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவே உள்ளார் என்ற வகையில் மக்களிடையே பிரச்சாரம் செய்பவர் ( இதற்கு சில அரசியல் இலாபம் கொண்ட காரணங்கள் உள்ளன ). பிரதமரின் ஒலுவில் வருகையை நியாயப்படுத்தும் வகையில் செயற்பட்டிருந்தார். இது முற்றிலும் பிரதி அமைச்சர் ஹரீஸின் கொள்கைக்கு எதிரான செயற்பாடு. இவர்கள் இருவரும் ஒரே கட்சியில் இருந்து கொண்டு, வெவ்வேறு கொள்கையில் இருப்பது, மு.கா கட்சிக்கு நல்லதல்ல. இதற்கு, இவ்வாறானதொரு கூட்டத்தில் பகிரங்கமாக கலந்துரையாடுவதன் மூலம், ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க முடியும். இந்த சிந்தனையில் நோக்கும் போது, பிரதி அமைச்சர் ஹரீஸ் மீதான ஒழுக்காற்று முயற்சி பிழையானதல்ல எனலாம்.

பிரதி அமைச்சர் ஹரீஸ் மீது ஒழுக்காற்று நடவடிக்கைக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டதே தவிர நிறைவேறவில்லை. அமைச்சர் ஹக்கீம், பிரதி அமைச்சர் ஹரீசுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க சிந்தித்திருந்தால், இன்றுள்ள அவருக்கு சார்பான உயர்பீட பலத்தை பயன்படுத்தி சாதித்திருக்க முடியும். அது அமைச்சர் ஹக்கீமுக்கு பெரிய விடயமல்ல. இதன் பின்னால் அமைச்சர் ஹக்கீம் இருப்பதற்கான வாய்ப்பு குறைவு என்பதோடு, அது பிழையான செயற்பாடுமல்ல.

*துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்*
*சம்மாந்துறை.*
தோல்விகண்ட, ஹரீஸ் மீதான ஒழுக்காற்று பாய்ச்சல்  தோல்விகண்ட,  ஹரீஸ் மீதான ஒழுக்காற்று பாய்ச்சல் Reviewed by Madawala News on March 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.