பொலிஸார் மீது உரிய நடவடிக்கை’ முஸ்லிம் அமைச்சர்களிடம் பிரதமர் உறுதி! இன்று மாலை மீண்டும் பேச்சு!-சுஐப் எம்.காசிம்-
அம்பாறையில் பள்ளிவாசல் மீதும், முஸ்லிம்களின் சொத்துக்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட
தாக்குதல் சம்பவங்களோடு தொடர்புபட்ட சந்தேகநபர்களுக்கு, பொலிஸார் பிணை வழங்க உடந்தையாக இருந்தமை மற்றும் அவர்களின் பாரபட்ச நடவடிக்கைகள் குறித்தும், சற்று முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், கபீர் ஹாஷிம் ஆகியோர் கடுந்தொனியில் சுட்டிக்காட்டிய போது, இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு, அம்பாறை பொலிஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் உறுதியளித்தார். சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தலைமையில், பொலிஸார் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரிலிருந்து இன்று மாலை (02) கொழும்பு திரும்பிய பிரதமருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, தமது சமூகத்துக்கு அம்பாறையில் இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து பேசுவதற்கு அவசரமாக நேரம் ஒதுக்கித் தருமாறு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விடுத்த வேண்டுகோளின் பின்னரே, இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது பொலிஸ்மா அதிபரும் உடனிருந்தார்.
சட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொலிஸார், சட்டத்திலே வேண்டுமென்றே ஓட்டைகளை ஏற்படுத்தி குற்றவாளிகளைத் தப்பிக்கச் செய்துள்ளதாக சுட்டிக்காட்டிய முஸ்லிம் அமைச்சர்கள், இந்த நிலை நீடித்தால் சட்டம் மற்றும் ஒழுங்கு கேலிக்கூத்தாகி விடும் என்று பிரதமரிடம் தெரிவித்தனர்.
“திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த சதிகார செயல்களுக்கு அம்பாறை பொலிஸார் பக்கபலமாக இருந்தது மாத்திரமின்றி, முஸ்லிம்களை பாரபட்சமாகவும் நடாத்தியுள்ளனர். பொலிஸார் மீது இப்போது சிறுபான்மைச் சமூகம் நம்பிக்கை இழந்து வருகின்றது. இது நல்லாட்சிக்கு நல்லதல்ல” இவ்வாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அங்கு சுட்டிக்காட்டினார்
நேற்று முன்தினம் தாம் அம்பாறைக்கு விஜயம் செய்து, சேதமடைந்த பள்ளிவாசல் மற்றும் கடைத்தொகுதிகளை பார்வையிட்ட போது, பொலிஸாரின் பாரபட்சத்தை அறிந்துகொண்டதாகவும் அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் பூரணமான விசாரணை நடாத்தி, பொலிஸார் மற்றும் நாசகாரச் செயலில் ஈடுபட்டோர், இதன் பின்னணியில் இயங்கியோர் அனைவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டத்தின் மீதும், நீதியின் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து விடுவர் என அமைச்சர்கள் மூவரும் வலியுறுத்தினர்.
இந்த விடயங்களைக் கேட்டறிந்துகொண்ட பிரதமர், இது தொடர்பில் நாளை மாலை 03 ஆம் திகதி 4.00 மணிக்கு மீண்டுமொரு சந்திப்பொன்றுக்கு அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பொலிஸார் மீது உரிய நடவடிக்கை’ முஸ்லிம் அமைச்சர்களிடம் பிரதமர் உறுதி! இன்று மாலை மீண்டும் பேச்சு! பொலிஸார் மீது உரிய நடவடிக்கை’ முஸ்லிம் அமைச்சர்களிடம் பிரதமர் உறுதி! இன்று மாலை மீண்டும் பேச்சு! Reviewed by Euro Fashions on March 03, 2018 Rating: 5