இலங்கையில் இனவாதம்" களைவதெப்படி...?


-ரா.ப.அரூஸ்-
இலங்கையில் அண்மைய நாட்களாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் முஸ்லிம்கள் மீதான
தாக்குதல் சம்பவங்கள் வெளிப்படையான இனவாதத்தின் அடையாளங்களே என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்திருக்க முடியாது. இத்தகைய இனவாதச் செயற்பாடுகளானது இன்றோ நேற்றோ தோன்றியவையல்ல. எமது தேசத்திற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னரிருந்தே இத்தகைய செயற்பாடுகள் ஆரம்பித்திருந்தன.


எமது நாட்டில் வெள்ளைக்காரர்கள் ஆட்சி நடாத்திய காலத்திலிருந்தே இந்த இனவாதம் தலைதூக்கியிருந்தது. தேசத்தின் சுதந்திரத்திற்காக உருவான தேசிய இயக்கமே ஆரம்பத்தில் இன ரீதியாகப் பிளவுபட்டே உதயமாகியிருந்து. அப்போதிருந்தே பௌத்தம், இந்து, முஸ்லிம் என வௌ;வேறாகப் பிரிந்தே கிடந்தனர். இவர்களில் ஒரு சில முற்போக்குச் சிந்தனையாளர்கள் இருந்த போதிலும் அவர்கள் விதிவிலக்கானவர்களாகவே இருந்தனர். மாறாக இன ரீதியான பிளவே இலங்கையின் விதியாகிக் கிடந்தது. இந்தப் பிளவினை அன்று வெள்ளைக்காரர்கள் தமக்கு சாதகமாக்கிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அன்றைய காலத்து அனுபவத்திலிருந்து கூட எமது மக்கள் இன்னும் படிப்பினை பெறாமலிருப்பதுதான் வேதனைக்குரிய விடயமாகும்.


வெள்ளைக்காரர்களிடமிருந்து எமக்கு சுதந்திரம் கிடைப்பது இந்தியாவை விடவும் தாமதமானதற்குக் கூட எம்மவரிடையே காணப்பட்ட இனவாதப்பிளவும் ஒரு முக்கிய காரணமாயிருந்தது. எம்மிடையே காணப்பட்ட பிளவினை அவர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள். 1915 சிங்கள-முஸ்லிம் கலவரம் கூட இதன் வெளிப்பாடுதான். ஆனாலும் கூட எம்மவர்கள் அதிலிருந்தும் படிப்பினை பெற்றதாயில்லை. சுதந்திரத்திற்குப் பின்னர்தான் அந்த இனவாதம் இன்னுமின்னும் விஸ்வரூபமெடுத்தது.


சுதந்திரத்திற்குப் பின்னரான இனவாத ஏற்பாடுகள்

1956ம் ஆண்டு பண்டாரநாயக்கா அவர்களால் கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச் சட்டமானது எமது நாடு சுதந்திரமடைந்ததன் பின்னர் இனவாதத்திற்கு இடப்பட்ட மிகப்பெரிய அத்திவாரமாகும். இதுவே தமிழ் பேசும் சமூகத்திற்கு உத்தியோகபூர்மாக இழைக்கப்பட்ட துரோகத்தின் துவக்கமுமாகும்.


இதன் விளைவாகவே இலங்கையின் அரசியல் வரலாற்றில் பண்டா - செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இருப்பினும் கூட இந்த ஒப்பந்தத்தில் தனிச்சிங்களச் சட்டத்தை விட்டுக்கொடுக்க பண்டாரநாயக்கா சம்மதிக்கவில்லை. அவர் சிங்களப் பேரினவாதத்தைத் திருப்திப்படுத்தும் ஒரு கருவியாகவே இந்த விடயத்தைப் பயன்படுத்தினார். இத்தனைக்கும் தனிச்சிங்களச் சட்டத்தைக் கொணர்ந்த பண்டாரநாயக்காவுக்கு அப்போது சிங்களம் எழுதவோ வாசிக்கவோ தெரிந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


ஒரு நாட்டின் அரசியலமைப்பு வரையப்படுகின்ற போது அதில் குறித்த சமயத்திற்கோ அல்லது மொழிக்கோ மாத்திரம் முக்கியத்துவம் வழங்கப்படக் கூடாது என்பது அரசியலமைப்பு விற்பன்னர்களின் ஏகோபித்த கருத்தாக சர்வதேச அளவில் காணப்படுகின்றது. இந்நிலையில் 1972ம் ஆண்டு சிறிமா பண்டாரநாயக்க அரசாங்கத்தில் நடைமுறைக்கு வந்த இலங்கையின் முதலாவது குடியரசு அரசியலமைப்பில் சோல்பரி அரசியலமைப்பில் இல்லாத ஒரு விடயம் சேர்க்கப்பட்டது. அதாவது அரசியலமைப்பின் 3வது அத்தியாயத்திலுள்ள 7 தொடக்கம் 11 வரையிலான உறுப்புரைகளில் சிங்கள மொழிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்ட அதே சமயம் பௌத்த சமயமே இலங்கை அரசுக்கான சமயம் என்றும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டது. இந்த அரசியலமைப்பு ஏற்பாடே இலங்கைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சாபக்கேடாகும்.


இதைத் தொடர்ந்து ஜே.ஆர்.ஜயவர்ததவனவின் அரசாங்கத்தினால் 1978ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட 2வது குடியரசு அரசியலமைப்பிலும் 9வது சரத்து பௌத்த மதமே முதன்மை மதமாகும் எனக் குறிப்பிடுகின்றது.


இனவாதம் ஏற்படுத்திய மிலேசத்தனங்கள்


இந்த ஏற்பாடுகளின் தொடரில்தான் 1983ம் ஆண்டு கறுப்பு ஜூலைக் கலவரம் ஏற்பட்டது. நாட்டுக்குள்ளேயே ஆயுதப் போராட்டம் துவங்கி அது ஏறக்குறைய 30 ஆண்டு காலமாக நீடித்தது. மறு புறம் 1983-2009 வரையிலான காலப்பகுதியில் முஸ்லிம்கள் மீதான பெரும்பான்மையினரின் வன்முறைகள் ஐந்தாறு வருடங்களுக்கொரு முறை பேருவளை, காலி போன்ற பிரதேசங்களில் நடந்துகொண்டிருந்தன.


ஆனால் மகிந்த ராஜபக்சவின்  அரசாங்கத்தில் விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவுக்கு வந்ததையடுத்து முஸ்லிம்கள் மீதான குறிவைத்தல்கள் விஸ்வரூபமெடுக்கத் தொடங்கின. பள்ளிவாயல்கள் தாக்கப்படுதல், முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள் தாக்கப்படுதல்,  ஹலால் சான்றிதழ் பிரச்சினை, மாட்டிறைச்சி பிரச்சினை, முஸ்லிம் பெண்களின் ஆடைப்பிரச்சினை, கிறீஸ் மனிதன் போன்ற பல்வேறு பட்ட இனவாதத் தீ மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் கொழுந்துவிட்டெரிந்தது. அதன் தொடர்ச்சியாக மைத்திரி - ரணில் ஆகியோரது தேசிய அரசாங்கத்திலும் அத்தகைய பிரச்சினைகள் நீட்சியடைகின்றன. அதன் வெளிப்பாடுகளே அண்மைய நாட்களில் அரங்கேறிக்கொண்டிருக்கின்ற வன்முறை நிகழ்வுகளுமாகும்.


இனவாதத்தை இல்லாமல் செய்ய முடியுமா?


இனவாதம் என்பது மனித குலத்துடன் ஒட்டிப்பிறந்த ஒரு முக்கிய பண்பாகவே இருந்து வந்திருக்கின்றது. ஆனாலும் கூட காலவோட்டத்தில் ஏற்பட்ட புரிதல்கள் மற்றும் இதய சுத்தியுடன் மக்களை வழி நடாத்தும் தலைவர்களின் திட்டமிடல்கள் என்பவற்றின் காரணமாக சில நாடுகள் இந்த இனவாதத்தை முற்றிலும் துறந்த தேசமாக செழித்திருக்கின்றன.

வெள்ளையரின் பூட்ஸ்களினால் மிதிக்கப்படுவதற்கென்றே பிறந்தவர்கள்தான் கருப்பினத்தவர்கள் என்று நீதிமன்றத் தீர்ப்பளிக்கப்பட்ட அமெரிக்காவில் இன்று இன நல்லுறவு  மற்றும் மனித உரிமைகள் தலைத்தோங்கி நிற்கிறது. கருப்பினத்தவரும் வெள்ளையினத்தவரும் பாம்பும் கீறியுமாக இருந்த தென்னாபிரிக்கா இன்று இன நல்லுறவின் தாயகமாகியிருக்கிறது. இதற்குக் காரணம் அவர்களுக்கு வாய்த்த தலைவர்களின் திட்டமிடல்களேயாகும்.

அந்த வகையில் நாம் ஒட்டு மொத்த தேச நலனில் இதயபூர்வமான அக்கறை கொண்ட தலைவர்களை இன்னும் பெற்றிடாமையே எமது நாட்டில் இனவாதம் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கக் காரணமாக இருந்துகொண்டிருக்கின்றது. நேரடியாகச் சொல்லப்போனால் இலங்கையில் இனவாதம் இத்துணையளவு தலைவிரித்தாடுகின்றமைக்கான ஒட்டுமொத்தக் காரணமே எமது தலைவர்கள்தாம். நான் ஆரம்பித்திலே குறிப்பிட்டதைப் போன்று பண்டாரநாயக்கா, சிறிமா, ஜே.ஆர் ஜயவர்த்தன போன்ற தலைவர்கள்தான் இந்த இனவாதத்திற்குக் கால்கோலிட்டவர்கள்.


அவர்களைத் தொடர்து வந்த தலைவர்களும் அவ்வப்போது தங்களது அரசியல் காய்நகர்த்தல்களுக்காக சில தீர்வுப் பொதிகளை முன்வைத்து வந்துள்ளார்களே தவிர இதனை முற்றாக தேசத்திலிருந்து இல்லாது செய்து தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று எவரும் உளப்பூர்வமாக தொழிற்பட்டதாகவும் தொழிற்படுவதாகவும் தெரியவில்லை.

மகிந்தவின் காலத்தில்   இனவாதம் இல்லாதொழிய வேண்டும் என்கின்ற நம்பிக்கையில் மக்கள் வழங்கிய ஆணையில் உருவாகியுள்ள இந்த நல்லாட்சி அரசாங்கமும் இன்று செல்லாக்காசாகி நிற்கின்றது.

எனவே இந்த இனவாதத்தை தேசத்தை விட்டு முற்றுமுழுதாக விரட்டியடிக்க வேண்டுமென்றால் உளப்பூர்வமாக ஒட்டுமொத்த மனித குலத்தையும் நேசிக்கக் கூடிய தலைவர்கள் தோற்றம் பெற வேண்டும். அதே நேரம் அவர்கள் வெறும் சொல் வீரர்களாக மாத்திரமன்றி செயல் வீரர்களாகவும் நீதியானவற்றைத் துணிவுடன் நிறைவேற்றும் தைரியமிக்கவர்களாகவும் பரிணமிக்க வேண்டும். தேசத்தின் ஒவ்வொரு பிரஜையையும் தனது குழந்தையாக எண்ணி செயற்படக் கூடிய ஒரு நல்லுள்ளம் கொண்ட தலைவனுக்கு நாடு வாக்கப்படுமாக இருந்தால் நிச்சயம் இனவாதத்தை இல்லாதொழிக்க முடியும்.


இனவாதத்தை எவ்வாறு இல்லாதொழிக்கலாம்?
இனவாதத்தை நிரந்தரமாக இல்லாதொழிக்க வேண்டுமானால் இரண்டு வகையான வேலைத்திட்டங்களை ஆரம்பித்தாக வேண்டும்.

- அவசரத் திட்டமிடல்
- நீண்ட காலத்திட்டமிடல்

அவசரத்திட்டமிடல் என்பது அரசியலமைப்பு சார்ந்த மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களாகும். அதாவது எல்லா இனத்தவர்களும் தேசத்தின் சமமான பிரஜைகள் என்பதை நிச்சயப்படுத்துமாறான அரசியலமைப்பு உருவாக்கப்படுதல் வேண்டும்.



ஆனால் இது நடைமுறையில் நிலைக்க வேண்டுமென்றால் நீண்ட காலத்திட்டமிடல் இங்கு அத்தியவசியமாகிறது. அதாவது பாடசாலை தொடங்கி பல்கலைக் கழகம் வரையிலான பாடத்திட்டங்களில் இன நல்லுறவினை வலுப்படுத்துமாறான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு அவை கட்டாய பாடமாக்கப்படுதல் வேண்டும். அத்தோடு அவை சிறந்த முறையில் போதிக்கப்படுவதோடு நடைமுறைச் செயற் திட்டங்களும் முன்னெடுக்கப்படுதல் வேண்டும். சிறு வயதிலிருந்தே ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடனும் விசுவாசத்துடனும் தேசிய உணர்வுடனும் ஒவ்வொரு பிள்ளையும் வளர்க்கப்படுவதற்கான, வழிகாட்டப்படுவதற்கான வேலைத்திட்டங்களுக்கு முதன்மை ஸ்தானம் வழங்கப்படவேண்டும்.



இனவாதத்தை ஒழிக்க சிறுபான்மையினர் என்ன செய்ய வேண்டும்?
எமது தேசத்திற்கு நல்ல தலைவர்கள் வாய்க்கும் வரைக்கும் இனவாதப் பிரச்சினையை ஒழிப்பதற்கு நாம் காத்துக்கொண்டிருக்க முடியாது. அது வரையிலும் நம்மாலான முன்னெடுப்புக்களை நாம் திட்டமிடவேண்டிய கடமை எம்மீது இருக்கின்றது. ஏனெனில் எந்த தேசத்திலும் இனவாதம் தலைதூக்கும் போது அங்கு பெரும்பான்மையினரின் கைகள்தான் ஓங்கியிருக்கும். அதில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் நிச்சயமாக சிறுபான்மையினர்தான். எனவே இந்த இனவாதத்தை இல்லாதொழிக்க வேண்டிய தேவை பெரும்பான்மையினரை விடவும் சிறுபான்மையினருக்கே அத்தியவசியமாகும். எனவே இனவாதத்தை இல்லாதொழிப்பதில் சிறுபான்மையினரின் பங்களிப்பை இரண்டு வகையாக நோக்க முடியும்.
- சிறுபான்மை தலைவர்களின் பங்களிப்பு


- சிறுபான்மை மக்களின் பங்களிப்பு

எமது நாட்டைப் பொருத்த வரையில் சிறுபான்மைத் தலைவர்களின் பங்களிப்புக்கள் மிகவும் சிக்கல் மிகுந்ததாகக் காணப்படுகின்றன. அதாவது தமிழ் பேசுவோர் என்று பார்க்கின்ற போது எமது சனத்தொகை 20% ஆகிறது. ஆனால் இங்கு அவ்வாறு இல்லை. அதில் நாம் சமயங்களை அடிப்படையாக வைத்து சிறுபான்மையினராகிய நாம்  பிரதானமாக இரண்டாகப் பிரிந்து கிடக்கிறோம். அத்தோடாவது நிறுத்திக்கொண்டோமா? இல்லை. தத்தமக்குள்ளே இன்னும் பல்வேறு பிரிவுகளாகிக் கிடக்கிறோம்.

எனவே இங்கு முதலில் எல்லா கோப தாபங்களையும் மறந்து எமது சந்ததிகளுக்காகவும் ஒட்டுமொத்த தேசத்தின் நிம்மதிக்காகவும் சிறுபான்மையினராகிய நாம் இந்த இனவாதத்தை இல்லாதொழித்தல் என்ற பொதுக் கோசத்தின் கீழ் ஒன்று படவேண்டும். இதுவே இனவாதத்தை ஒழிப்பதற்கான மிகச் சிறந்த துவக்கமாக அமையும். அதன் பிறகு இனவாதத்தை அடிப்படையிலே வெறுக்கின்ற பெரும்பான்மை அரசியல் தலைவர்களையும் இனைத்துக்கொண்டு இதற்கான பணிகளைத் துவங்க வேண்டும். பாராளுமன்றத்தில் சிறந்ததோர் அரசியலமைப்பு மாற்றத்திற்காகக் குரல்கொடுக்க வேண்டும். அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். நல்ல தலைவர்களை இனங்கண்டு அத்தகையோர் தேசத்தின் தலைவராக ஆதரவு கொடுக்க வேண்டும்.


சிறுபான்மை மக்களின் பங்களிப்பு என்று பார்க்கின்ற போது எமது ஜனநாயக உரிமையினை நல்ல தலைவர்களைத் தெரிவு செய்வதற்குப் பயன்படுத்த வேண்டும். அதே சமயம் எமது சிறுபான்மை அரசியல் தலைவர்கள் ஒன்றுபடுவதற்கான அழுத்தங்களை வழங்குபவர்களாக இருக்க வேண்டும். முடியுமான வரை பெரும்பான்மை சமூகத்தினரிடம் எமது பெருந்தன்மைகளை வெளிப்படுத்துபவர்களாகவும் சமயோசிதமாக அணுகக் கூடியவர்களாகவும் நாம் மாற வேண்டும். எல்லாவற்றையும் விட மேலாக உணர்ச்சி வசப்பாடுகளுக்கு ஆளாகாமல் பொறுமையுடனும் புத்திசாதுரியத்துடனும் முன்மாதிரிகளாகவும் நாம் திகழ வேண்டும். நாம் எதை விதைக்கிறோமே என்றைக்காவது ஒரு நாள் அதை அறுவடை செய்வோம்...!

-ரா.ப.அரூஸ்
12.03.2018

இலங்கையில் இனவாதம்" களைவதெப்படி...? இலங்கையில் இனவாதம்" களைவதெப்படி...? Reviewed by Madawala News on March 12, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.