சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்ட முஸ்லிம் விரோத இனவாதிகள் எல்லாம் அழிந்து போனபின் விழித்துக் கொண்ட அரசு.


-லத்தீப் பாரூக்-
2018 மார்ச் 4ம் திகதி கண்டி மாவட்டம் திகன நகரில் இடம்பெற்றது ஒரு கொலைச் சம்பவம்.
அப்பாவியான ஒரு சிங்கள லொறிச் சாரதியை மது போதையில் இருந்த மூன்று முஸ்லிம் முச்சக்கரவண்டி சாரதிகள் அடித்துக் காயப்படுத்தியுள்ளனர். மோசமான காயங்களோடு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அந்த அப்பாவி சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது இந்த நாட்டில் அமுலில் உள்ள சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் சட்ட ஒழுங்குத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு கொலைச் சம்பவம்.


ஆனால் இந்தச் சம்பவத்தை சாட்டாக வைத்துக் கொண்டு அந்தப் பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், வீடுகள, மற்றும் வர்த்தக நிலையங்கள் என்பன தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட இளைஞரின் இறுதிக்கிரியைகள் இடம்பெறும் தினத்தில் உணர்வுகள் பொங்கி எழும் என்பதும,; இந்த நாட்டின் இனவாத சக்திகள் இவ்வாறான சந்தர்ப்பங்களில் இரவு பகலாகச் செயற்பட்டு மக்களின் உணர்வுகளை முஸ்லிம்களுக்கு எதிராகத்; தூண்டி விடுவாhர்கள் என்பதும் அரசாங்கம் அறியாத ஒன்றல்ல. இவ்வாறான நிலைமையில் இந்த இனவாத சக்திகளிடம் இருந்து முஸ்லிம்களைக் காப்பாற்ற உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டியது பொருப்பு வாய்ந்த ஒரு அரசாங்கத்தின் தலையாய கடமையாகும்.


ஆனால் உரிய நேரத்தில் அரசாங்கம் சரியான பாதுகாப்பு முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதால் இன்று பாரிய அழிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் பாதுகாப்பு பலவீனம் இனவாதிகளுக்கு விடுக்கப்பட்ட திறந்த அழைப்பாக மாறியது. குறிப்பிட்ட இடங்களுக்கு பொது பல சேனா என்ற இனவாத அமைப்பின் மூலகர்த்தா ஞானசார தேரர் சென்று வந்தமை இனவாதிகளுக்கு கிடைத்த மேலதிக தைரியமாயிற்று. ஞானசாரருக்கு அங்கு என்ன வேலை? எதற்காக அவர் அங்கு சென்று வந்தார்? என்பது தான் முக்கியமான கேள்விகள்.


'முஸ்லிம்களால் எந்த வகையிலும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை. முதலில் அங்கு வந்த அதிரடிப் படையினர் முஸ்லிம்களைச் சுற்றி வளைத்து அவர்களிடம் இருந்த சிறிய கத்திகளைக் கூட விட்டு வைக்காமல் எடுத்துச் சென்றனர். பின்னர் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது அவர்கள் எதுவும் செய்ய முடியாமல் நிராயுதபாணிகளாக நின்றனர். பாதுகாப்பு வழங்குவதாக உறுதி அளித்த பொலிஸார் வழமைபோல் கைகட்டி வேடிக்கைப் பார்த்தனர். ஒரு கட்டத்தில் பள்ளிவாசலுக்குள் புகுந்து அங்கு தஞ்சம் புகுந்திருந்தவர்களையும் தாக்கினர்.


இவ்வாறு முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடர்ந்தது. பெண்கள் சிறுவர்கள் கூட விட்டு வைக்கப்படவில்லை. தாங்கள் அணிந்து வந்திருந்த ஹெல்மட்டுக்களால் (தலைக்கவசம்) கூட பெண்களைத் தாக்கினர்' என்று பள்ளேகலைப் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக இனவாதிகளுக்கு இடமளித்து இந்த அரசாங்கம் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டது.


நாட்டில் அழிவை ஏற்படுத்தி வரும் மைத்திரி – ரணில் தலைமையிலான கையாலாகாத இனவாத நல்லாட்சி அரசு மகிந்த ராஜபக்ஷ அரசுக்கு எந்த வகையிலும் குறைவானது அல்ல என்பது மீண்டும் ஒரு தடவை நிரூபிக்கப்பட்டுள்ளது. அளுத்கமை பேருவளை தர்கா நகர் என்பன மகிந்த ராஜபக்ஷவின் இனவாத சிறப்பை எடுத்துக் கூறுகின்றன. பதிலுக்கு ஜின்தோட்டை, அம்பாறை தற்போது திகனை என மைத்திரி ரணில் கூட்டரசும் தமது பட்டியலை சமப்படுத்தி உள்ளது.


நாட்டின் கடந்த கால சம்பவங்களில் இருந்து எந்தவொரு பாடமும் இதுவரை கற்றுக் கொள்ளப்படாமை வேதனைக்கு உரியதாகும். மாறாக அது மீண்டும் ஒரு அழிவை நோக்கி பயணிப்பது அதை விட வேதனைக்குரியதாகும்.
திகன சம்பவத்துக்கு ஒரு சில தினங்களுக்கு முன்னர் தான் அம்பாறையில் பள்ளிவாசல் இமாம் ஒருவர் அர்த்தமற்ற முறையில் தாக்கப்பட்டார். அங்கும் முஸ்லிம்களுக்கு சொந்தமான ஹோட்டல்களுக்கும் ஏனைய சொத்தக்களுக்கும் தீ வைக்கப்பட்டு; அழிவுகள் ஏற்படுத்தப்பட்டன.


இது இப்போது வழமையான ஒரு விடயம் ஆகிவிட்டது போல் தெரிகின்றது.
சிங்கள மக்கள் மத்தியில் கடந்த பல வருடங்களாக முஸ்லிம்களுக்கு எதிராக தீய எண்ணங்கள் விதைக்கப்பட்டு வருகின்றன. முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு வரும் சிங்கள வாடிக்கையாளர்கள் மிகவும் சூட்சுமமான முறைகளைப் பின்பற்றி ஸ்தம்பித நிலைக்கு கொண்டு வரப்படுகின்றனர் என்பது அதில் ஒன்றாகும். சிங்கள பெண்களுக்கு விற்கப்படும் மார்புக் கச்சைகளில் சில மருந்துகள் சேர்க்கப்படுகின்றன என்பதும் அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளில் மலட்டுத் தன்மை ஏற்படுத்தும் மருந்துகள் கலக்கப்படுகின்றன என்பதும் பரப்பப்பட்டு வரும் கதைகளாகும்.


அப்பாவி சிங்கள மக்களின் சிந்தனைகளை குழப்பும் வகையிலேயே இந்தப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு அவர்கள் செல்லக் கூடாது என்பதும் அதன் மூலம் முஸ்லிம்களின் வர்த்தக வருமானங்கள் மற்றும் பொருளாதாரம் என்பனவ்றை முடக்க வேண்டும் என்பதும் தான் இதன் பிரதான இலக்குகளாகும்.


இந்த இனவாத கும்பலுக்கு பௌத்த சமயத்துடனோ அல்லது சிங்கள கலாசாரத்துடனோ எவ்வித தொடர்புகளும் இல்லை. அவர்கள் உள்ளுர் மற்றும் சர்வதேச முஸ்லிம் விரோத சக்திகளின் கூலிப்படையினர். இதுவரை அவர்கள் இந்த நாட்டில் செயற்படும் சூதாட்ட நிலையம் ஒன்றுக்கு எதிராகவோ அல்லது மதுபான விற்பனை நிலையம் ஒன்றுக்கு எதிராகவோ எதுவும் செய்ததில்லை. அல்லது இந்த நாட்டில் தலைவிரித்தாடும் விபசார நிலையங்களைக் கூட இதுவரை இவர்கள் கண்டு கொண்டதில்லை.

இவர்களைப் பொருத்தமட்டில் பௌத்தம் என்பது பள்ளிவாசல்களின் இமாம்களைத் தாக்குவது, முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களுக்கு தீ வைத்து அவற்றை சூறையாடுவது, முஸ்லிம்களின் வாகனங்களுக்கு தீ வைப்பது, அப்பாவிகளை நிராயு பாணிகளாக்கிவி;ட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, பெண்களையும் சிறுவர்களையும் தாக்குவது, வழிபாட்டுத் தலங்களுக்குள் தஞ்சம் புகுந்தவர்களைத் தாக்குவது எனத் தொடருகின்றது. அதன் மூலம் தான் முக்தி நிலையை அடைய முடியும் என்று இவர்கள் எண்ணுகின்றார்கள். ஆனால் தங்களின் இந்தச் செயல்கள் மூலம் தங்களுக்கு மட்டுமே உரியது என அவர்கள் உரிமை கோரும் இந்த நாட்டுக்கு அவர்கள் எந்தளவு தீமையை விளைவிக்கின்றார்கள் என்பதை புரிந்து கொள்ளாத மடையர்களாகவே உள்ளனர்.


கடந்த இரு வாரங்களில் அம்பாறை திகன தெல்தெனிய ஆகிய இடங்களில் பாரதூரமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதிகாரிகளின் ஒத்துழைப்போடு தான் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதனால் தான் சட்ட ஒழுங்கு பிரிவு சம்பந்தப்பட்ட கயவர்களை சட்டத்தின் முன் நிறுத்த தவறியுள்ளது. மக்களால் தோற்கடிக்கப்பட்ட ராஜபக்ஷ அரசில் அளுத்கமை பேருவளை மற்றும் தர்கா நகர் சம்பவங்களில் பங்கேற்ற கயவர்கள் இன்னமும் சுதந்திரமாக நடமாடிக் கொண்டுதான் உள்ளனர். அவர்களில் பலரை இன்றைய சம்பவங்களின் போதும் காணக் கூடியதாக உள்ளது.


ஜின்தோட்டை சம்பவத்தின் போதும் கூட பொலிஸார் கண்டும் காணாமல் பாரபட்சமாக நடந்து கொண்டதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்த தாக்குதல் எல்லாவற்றிலும் பொதுவான ஒரு அம்சமாகக் காணப்பட்டது வெளிப் பகுதிகளில் இருந்து காடையர்கள் பஸ்களிலும் ஏனைய வாகனங்களிலும் அழைத்து வரப்பட்டு உள்ளுர் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையாகும்.


வெளியில் இருந்து அழைத்து வரப்படும் இந்த நபர்கள் யார்? அவர்களுக்கு நிதி உதவி வழங்குவது யார்? நாட்டில் அழிவை ஏற்படுத்த இவர்களை இடத்துக்கு இடம் அனுப்பி வைப்பது யார்?


அம்பாறை சம்பவம் குறித்து பொலிஸாருக்கு இரவு 10.05 அளவில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் இரவு 11.30 அளவிலேயே ஸ்தலத்துக்கு வந்தனர். உண்மையில் தகவல் கிடைத்து 15 நிமிடங்களுக்குள் அவர்கள் அங்கு வந்திருக்கலாம். ஆனால் தாமதாகி வந்த நிலையிலும் கூட அவர்கள் அந்த இடத்தில் சம்பவத்தோடு தொடர்புடைய எவரையும் கைது செய்யாமல் அவர்களுக்கு மேலும் கால அவகாசம் வழங்கினர்.


அது மட்டும் அன்றி சம்பவத்தோடு தொர்புடைய எவரையும் கைது செய்யாமல் காடையர் கும்பலின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஹோட்டலின் காசாளரையே பொலிஸார் முதலில் கைது செய்தனர். பின்னர் சம்வத்தோடு தொடாபுடையவர்கள் என கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.


அம்பாறை சம்பவத்தின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவோடு நெருங்கிய தொடர்புடைய ஒரு நபரே இருந்துள்ளார் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சம்பவம் நடைபெற இரண்டு தினங்களுக்கு முன்பே அந்த நபர் இந்தப் பகுதிக்கு விஜயம் செய்து பொலிஸாருடன் நற்புறவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளயாகியுள்ளன. அம்பாறை சம்பவங்களை மூடி மறைக்க பொலிஸார் முழு முயற்சி செய்துள்ளனர். இது சம்பந்தமாகவும் விசாரணைகள் நடத்தப்படும் என்று அமைச்சர் ராஜித் சேனாரத்ன தெரிவித்துள்ளார்.


இந்தச் சம்பவம் பற்றி ஒரு அறிக்கை கூட வெளியிடத் தேவையில்லை என்பதுதான் ஜனாதிபதியினதும் பிரதமரினதும் நிலைப்பாடு போல் தெரிகின்றது. இந்தப் பிரச்சினைகளை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு பிரதம மந்திரயும் சட்ட ஒழுங்கு அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூரில் ஒரு கருத்தரங்கில் உரையாற்றச் சென்றுள்ளார்.


முஸ்லிம் அமைச்சர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகத் தான் ரணில் விக்கிரமசிங்க அம்பாறை சம்பவம் பற்றி விசாணை நடத்த ஒப்புக் கொண்டார். அதில் தொடர்புடையவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டமை பற்றியும் விசாரணைகள் நடத்தப்படும் என அறிவித்தார். இந்த தாக்குதலின் பங்காளியாக பொலிஸாரும் இருந்துள்ளனர். முஸ்லிம் சமூகம் பெலிஸார் மீது உள்ள நம்பிக்கையை இழக்கத் தொடங்கிவிட்டது.


சிங்கள வாக்கு வங்கியை குழப்பிக் கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பவில்லை. அதனால் அவர் முஸ்லிம் சமூகத்தை கைவிட்டு விட்டார் என்பது தான் இப்போதுள்ள பரவலான கருத்து. அதனால் அவர் தற்போதைய தாக்குதல்களுக்கு காரணமான இனவாத சக்திகளுடன் கைகோர்த்துள்ளார். அதனால் தான் அவர்களின் கரங்கள் தற்போது ஓங்கியுள்ளன.


இந்த நாடு அது சந்தித்த மிக மோசமான அரசியல், சமூக மற்றும் பொருளாhர ரீதியான நெருக்கடிகள் இனவாத பதற்றம் என்பனவற்றில் இருந்து வெளியேறி சற்று நிம்மதி பெருமூச்சு விடத் தொடங்கியுள்ள நிலையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றமை தான் மிகவும் கவலைக்குரியது. இந்த நிலைமைகள் தொடர்பாக அண்மையில் பேஸ்புக்கில் வெளியான இரண்டு கருத்துக்களை சுட்டிக்காட்டுவது இங்கு மிகவும் பொருத்தமானதாகும்


சலீம் மர்சூப் : இலங்கையில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வுகளையும் முஸ்லிம்கள் மீதான சந்தேகங்களையும் தூண்டி விட சில விஷமத்தனமான பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடிப்படை விவேகம் உள்ள எவரும் இவற்றை நம்பமாட்டார்கள். ஆனால் வெளிப்படையாக இவை பொய்யான கருத்துக்கள் எனத் தெரிந்தும் கூட அவற்றின் அடிப்படையில் பணியாற்ற சிலர் தயாராக உள்ளனர் என்பதையே அம்பாறை சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது. அந்த அடிப்படையிலேயே முஸ்லிம் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் சொத்துக்கள் மிது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.


இந்த நாசகார பிரசாரங்களின் பின்னணியில்; யார் உள்ளனர். சிங்கள் மக்களுள் ஒரு சிறிய தொகையினர் இதை எதிர்த்து அம்பாறை சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய உதவியும் கூட, எழுந்துள்ள கேள்வி இதுதான். சமூக நல்லிணக்கத்தையும் தேசிய ஐக்கியத்தையும் குழப்பும் இந்த சக்திகளுக்கு எதிராக அவர்களால் ஆற்றல் மிக்க வகையில் பணியாற்ற முடியுமா? இனவாத வெறுப்புணர்வைத் தூண்டும் செயல்களை இல்லாதொழிக்க இவர்களால் முடியுமா?


மொஹமட் சன்ஹர் : பொலிஸார் தாமதம் ஆகி வருவதைக் கூட மன்னித்து விடலாம். ஆனால் இதை ஏதோ இரு தரப்புக்கு இடையிலான மோதலாகக் காட்டி வழக்கை பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்கள் பிணையில் செல்ல அனுதித்ததை தான் மன்னிக்கவே முடியாது. மறுபுறத்தில் பிரச்சினை உண்மையில் ஏற்பட்டது ஒரு வர்த்தக நிலையத்துக்குள் ஒரு வர்த்தகருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையில். அப்போது ஏன் பள்ளிவாசல் தாக்கப்பட வேண்டும். பள்ளியை தாக்கியவர்களை ஏன் பிணையில் விடுதலை செய்ய வேண்டும். இதை இரு தரப்பு மோதல் என்று சொல்ல பள்ளிவாசல் யாருடனும் மோதவில்லையே.


சமூக வலைதலங்களில் இத்தகைய போலிப் பிரசாரங்கள் கடந்த பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிங்களவர்கள் மத்தியில் உளவியல் ரீதியான ஒரு தாக்கத்தையும் அச்சத்தையும் இது ஏற்படுத்தி உள்ளது. இத தெளிவாக மிகவும் ஆபத்தான ஒரு மனோபாவமாகும். சமூகங்களுக்கு இடையில் சமாதானமான நல்லிணக்கத்தை இது மிக மோசமாகப் பாதிக்கக் கூடியது.


இனவாதத்தை வைத்துக் கொண்டு விளையாடுவது, இனவாத பதற்றத்தை தூண்டிவிடுவது, மக்களின் துயரங்களில் குளிர்காய நினைப்பது என்பன அரசியல்வாதிகளைப் பொருத்தமட்டில் வழமையானவை தான்.


ஐக்கிய தேசியக் கட்சியினதும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் இனவாத அரசியல் தான் தமிழ் ஆயுத பேராட்டத்துக்கு மூல காரணமாக அமைந்தது. அந்தப் போராட்டம் மரணங்களையும் அழிவுகளையும் மட்டும் அன்றி எல்லா மக்களுக்கும் சொல்லொணா துன்பங்களையும் விளைவித்தது.
ஆயுதப் படைகள் நாட்டுக்காகப் போராடி தமது உயிர்களையும் அவயவங்களையும் இழந்து கொண்டிருந்த நிலையில் இரண்டு பிரதான கட்சிகளையும் சேர்ந்த அரசியல் வாதிகள் யுத்தத்தால் கிடைத்த ஆயுத தரகு வருமானத்தால் மிகவும் செல்வச் செழிப்போடு வாழ்ந்தனர்.


இன்றைய நிலையில் இந்த நாடு மீண்டும் ஒரு இனவாதத்துக்கு முகம் கொடுக்க முடியாது. அதன் விளைவுகள் எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு மோசமானதாக அமையலாம். குறிப்பாக தற்போது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ, ரஷ்யா, இஸ்ரேல் மற்றும் இந்த ஆதிக்க சக்திகளால் அரபு நாடுகளில் பதவியில் அமர்த்தப்பட்டுள்ள அவர்களின் கைக்கூலிகள் இணைந்து இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக தொடுத்துள்ள யுத்தத்தின் பின்னணியில் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதம் கட்டவிழத்து விடப்படுவது எவ்வாறான விளைவுகளை வேண்டுமானாலும் ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது. காரணம முஸ்லிம் நாடுகளை துவம்சம் செய்த இந்த தீய சக்திகளின் செயற்பாடுகள் இப்போது இலங்கையிலும் பரவலாகக் காணப்படுகின்றன. இலங்கையில் முஸ்லம்களுக்கு எதிரான தங்களது திட்டங்களை நிறைவேற்ற இவர்கள் தங்களது கைக்கூலிகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.


எவ்வாறேனும் இந்த இனவாத சக்திகளுக்கு எதிரான நியாயமான சிந்தனை கொண்ட சிங்கள சிவில் சமூகப் பிரிவுகளும் உள்ளன. அம்பாறை சம்பவத்தில் இருந்து அவர்கள் தங்களை தூர விலக்கிக் கொண்டனர். சிலர் வன்மையாகக் கண்டித்தனர். இன்னும் பலர் கட்டுக் கதைகளை மடத்தனமானவை எனக்கூறி நிராகரித்தனர்.


இந்த சமூகத்தை இன்றைய நிலையில் காப்பாற்ற மிகவும் அவசியமான ஒரு பிரிவாக சிவில் சமூக பிரிவு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. மக்களால் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு மூன்றாம் தரப்பு ஒன்று இந்த நாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற உணர்வு தற்போது மூவினங்களையும் சேர்ந்த சமூகங்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஊழலை ஒழித்து, குற்றவாளிகளை மடக்கி இனவாத அரசியல் சூழலுக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்ற உணர்வு இந்த சிவில் சமூக அமைப்புக்களில் அதிகரித்துள்ளது.


இந்த செயற்பாடுகளில் இருந்து சுய அஞ்ஞாதவாசம் இருந்து வரும் முஸ்லிம் சமூகமும் இப்போது தனது அஞ்ஞாதவாசத்தில் இருந்து வெளியேற வேண்டிய நேரம் இப்போது வந்துள்ளது. ஏனைய சமூகங்களின் ஆக்கபூர்வமான சக்திகளுடன் அவர்கள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். சமூக நலனை உறுதி செய்வதற்காக தேசிய விடயங்களில் அவர்கள் தமக்குரிய பங்களிப்பைச் செலுத்த முன் வரவேண்டும்.


முஸ்லிம் அரசியல் வங்குரோத்து நிலைக்கு வந்துள்ளது. பெருமளவு முஸ்லிம் அரசியல் வாதிகள் அரசியல் சந்தையில் தமக்குரிய விலையைப் பெற்றுவிட்டனர். அவர்கள் தமது பதவிகளையும் பந்தாக்களையும், செல்வம் குவிப்பதை பற்றி மட்டுமே கவலை படுகின்றனர். அதில் மட்டுமே அக்கறை கொண்டவர்களாகவே உள்ளனர். இதற்காக அவர்கள் யாருடைய கால்களை வேண்டுமானாலும் முத்தமிட்டு ஒட்டு மொத்த சமூகத்தையும் விற்றுவிடவும் தயார் நிலையில் உள்ளனர்.


அறிவே இல்லாத அல்லது அரைவேற்காடு முல்லாக்களும் முப்திகளும் அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர். வரலாற்றின் மத்திய காலத்துக்கு சொந்தமான சிந்தனை கொண்ட இவர்கள் இந்த நாட்டின் அரசியல், பொருளாதாரஈ சமூக மற்றும் சலாசார நிலைமைகள் பற்றி மக்களுக்கு விளக்கம் அளிப்பதற்கு ஜும்ஆ மேடைகளைக் கூட பயன்படுத்தத் தெரியாத நிலையில் தமது சிந்தனைப் பிடிக்குள் இருந்து சமூகத்தை வெளியே வர விடால் நசுக்கி வருகின்றனர். நாம் எப்படிப்பட்ட சூழலில் வாழுகின்றோம்.

நமது உரிமைகளையும் சமூகத்தின் கௌரவத்தையும் பேண எவ்வாறான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்ற சிந்தனையைக் கூட மக்கள் மத்தியில் ஏற்பட விடாமல் இவர்களின் காலம் கடந்த சிந்தனகள் தடுத்து வருகின்றன.

சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்ட முஸ்லிம் விரோத இனவாதிகள் எல்லாம் அழிந்து போனபின் விழித்துக் கொண்ட அரசு. சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்ட முஸ்லிம் விரோத இனவாதிகள் எல்லாம் அழிந்து போனபின் விழித்துக் கொண்ட அரசு. Reviewed by Madawala News on March 11, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.