இலங்கையில் சிவசேனா கள்ள மவுனம் கலைவாரா மனோ ?



சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் கடந்த சில தினங்களாக  முஸ்லிம்கள் விடயமாக  
தனது முகப்புத்தக பக்கத்தில்  பதிவிட்ட கருத்துக்களுக்கான நியாயங்களை மீண்டும் பதிவிட்டிருக்கிறார். (நேற்று அவரின் பதிவுகளுக்கு பதிலாக  நான் இட்ட பின்னூட்டங்களை நீக்கியுள்ளார்.)

முஸ்லிம்களின் ஆடை கலாசாரம் தொடர்பான அவரது இனவாத  நிலைப்பாட்டை பல ஆண்டுகளுக்கு முன்னரே நான் நன்கு  உணர்ந்தவன். 

90களில் மலையகத்தில்  பதுளை தமிழ் மகளிர் கல்லூரியில் முஸ்லிம் பிள்ளைகள் ஹிஜாப்  மற்றும் நீண்ட காற்சட்டை அணிவது தொடர்பான பிரச்சினை எழுந்தபோது முஸ்லிம் மாணவிகளின் ஹிஜாப் ஆடைக்கு எதிரான நிலைப்பாட்டையே அவர் கொண்டிருந்தார்.  அந்த பாடசாலையில் கற்கும் முஸ்லிம்   பெண் பிள்ளைகள் வாயிற் கதவருகே ஹிஜாபையும், நீண்ட காற்சட்டையையும் கழற்றி விட்டு  பாடசாலைக்குள்  போகுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டனர். முஸ்லிம் ஆசிரியைகள் ஹிஜாபை கலைந்து வருமாறு உத்தரவிடப்பட்டனர்.

அன்று, இந்த பிரச்சினை தொடர்பாக கொழும்பு கொம்பனித் தெருவிலுள்ள  கலாநிதி விக்ரமபாகு அவர்களின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஒரு கலந்துரையாடலில் எனக்கும் மனோ கணேசனுக்கும் வாக்குவாதம் கூட ஏற்பட்டது. 

தலையை மூடுவதை இந்துக்கள் அபசகுணமாக கருதுவதாக மனோ கருத்து தெரிவித்தார்.

அப்போது, ''அதே பாடசாலையில் கடமையாற்றும் கிறிஸ்த்தவ கன்னியாஸ்திரி தலையை மூடி ஆடையணிந்திருக்கின்றாரே. முஸ்லிம்கள் தலையை மூடினால் மட்டுமா உங்களுக்கு அபசகுணம்'' என நான் கேள்வி எழுப்பினேன். 

இந்தியாவில் வடநாட்டிலுள்ள இந்துக்கள் தலையை மூடி ஆடையணிவதை தமது கலாசாரமாக கொண்டிருப்பதை எடுத்துக்காட்டி இவரின் பொய்க் குற்றச்சாட்டை எதிர்த்து வாதிட்டேன்.

வாக்கு வாதம் சூடாக,  கடுமையாக மாறியது. 

நிலைமையின் விபரீதத்தைப் புரிந்துகொண்ட  கலாநிதி விக்ரமபாகு அவர்கள் இரண்டு பக்கத்தையும் சமாதானப்படுத்தியது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.  

ஆனால் அண்மையில் மனோ கணேசன் முஸ்லிம்கள் தொடர்பாக வெளியிட்டு வரும் கருத்துக்களைப் பார்க்கும் போது அதே பழைய மனோ கணேசன் சகவாழ்வு என்ற அமைச்சர் பதவிக்குள் ஒளிந்துக் கொண்டு முஸ்லிம்களுக்கெதிராக  இனவாதக் கருத்துக்களை  பதிவிட்டு வருவதை புரியக் கூடியதாக இருக்கிறது.   

இனங்களுக்கிடையில்   சகவாழ்வுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில்  இனவாதத்தைக் கிளறும்   கருத்துக்களை வெளியிடுவதற்கோ,  உபதேசம் என்ற போர்வையில் ஓர் இனத்தினரின் உள்ளங்களை நோகடிக்கும் கருத்துக்கைளை பதிவிடுவதற்கோ   எவ்வித உரிமையுமில்லை என்பதை இங்கு  கூறிவைக்க விரும்புகிறேன்.

அண்மையில் பாராளுமன்றத்தில் முஸ்லிம் அடிப்படைவாதம் தொடர்பாகவும் முஸலிமகளின் ஆடை கலாசாரம் தொடர்பாகவும் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் விதமாக உரையாற்றிய ஹர்ஷ டீ சில்வாவினதும், பிமல் ரத்னாயக்கவினதும் கருத்துக்களை நிதானமாக செவிமடுக்குமாறு மனோ முஸ்லிம்களை வேண்டியிருக்கிறார். 

இவர்கள் இருவரினதும் கருத்து கண் மூடித்தனமான, ஆதாரமற்ற,  ஒருபக்கச் சார்பான கருத்து என்பதற்கான தகுந்த பதிலை அதே பாராளுமன்ற அமர்வில்  முஜீபுர் றஹ்மான் வழங்கியும் இருக்கிறார்.

அப்படியான ஒரு முஸ்லிம் அடிப்படைவாதம் இலங்கையில் இருப்பதாக மனோ கணேசன் கருதுவதாக இருந்தால், அதற்குரிய  தகுந்த ஆதாரங்களை அவர் சமர்ப்பிக்க வேண்டும் என்பதே எனது கருத்தாகும். 

இந்தியாவில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும், கொடுமைகள் நிகழ்த்தும் , முஸ்லிம்கள் மீது அட்டகாசங்களை கட்டவிழ்த்து விடும்   சிவசேனா அமைப்பு தற்போது  இலங்கையில்  வடக்கில வவுனியா நகரில் செயற்பட ஆரம்பித்திருக்கிறது.

வடக்கு கிழக்கு தமிழ், முஸ்லிம்  இன ஒற்றுமையை சீர்குலைக்கும், வன்முறைக்கு வரலாறு படைத்த இந்த சிவசேனா அமைப்பு பற்றி  இதுவரை வாய் திறக்காத மனோ கணேசன்,  இல்லாத   முஸ்லிம் அடிப்படைவாதம் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியிருப்பதன் நுண் அரசியல் 
பின்னணி  எங்களுக்குப் புரியாமல் இல்லை.

வடக்கு கிழக்கு மக்களின் இனஉறவுக்கு அச்சுறுத்தலாக மாற இருக்கும்  சிவசேனா அடிப்படைவாதம் செயற்பட்டு வரும் நிலையில், இல்லாத ஒன்றை தேடும் ஆராய்சியில் மனோ கணேசன் இறங்கியிருக்கிறார்.

எது எப்படியோ,

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கும்  சிவசேனா  அமைப்பு தொடர்பாக மனோ கணேசன் அனுஷ்டிக்கும் கள்ள மௌனத்தைக் கலைந்து தனது முகப்புத்தக பக்கத்தில் கருத்துரைக்கும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
இலங்கையில் சிவசேனா கள்ள மவுனம் கலைவாரா மனோ ?  இலங்கையில் சிவசேனா கள்ள மவுனம் கலைவாரா மனோ ? Reviewed by Madawala News on March 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.