இன்றைய அம்பாறை நீதிமன்ற நிகழ்வுகள் ஒரு பார்வை.



நீதிமன்றம் தொடங்கியதிலிருந்து 500 மேற்பட்ட சிங்கள மக்களும் பௌத்த மதகுருமார்களும் நீதிமன்றத்தினை
சூழ்ந்திருந்த ஒரு பதட்டமான சூழ்நிலையில் இன்று அம்பாரை நீதவான் நீதிமன்றில் அம்பாரை கலவரம் தொடர்பாக நான்கு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 


பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் சார்பாக குரல்கள் இயக்கத்தின் (Voices Movement) பங்களிப்புடன் சட்டத்தரணிகளான முஹைமின் காலித், ஹஸ்ஸான் றுஷ்தி மற்றும் றதீப் அகமட் ஆகிய நாங்கள் ஆஜராகியிருந்தோம்.


இவ்வழக்குகளில் காசிம் ஹோட்டலை தாக்கிய வழக்கில் மாத்திரமே 05 நபர்கள் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றிற்கு கொண்டு வரப்பட்டிருந்தனர். பள்ளித்தாக்குதல் உட்பட்ட ஏனைய வழக்குகளில் இதுவரை எவ்வித சந்தேக நபர்களும் அடையாளம் காணப்படவில்லையென்றும் விசாரணைக்கு தொடர்ந்து கால அவகாசம் தருமாறும் பொலிஸார் கேட்டிருந்தனர்.


முஸ்லீம்கள் சார்பில் நீதவானால் பிணை வழங்க முடியாத இனவெறித்தாக்குதல் குற்றமாக இச்சம்பவம் கருதப்பட வேண்டும் என்றும் அத்துடன் இதுவரை பொலிஸ் விசாரணை முடிவடையாத காரணத்தினாலும் முஸ்லிம்களின் பாதுகாப்பு அச்சுறுத்தல் தற்போதும் காணப்படுவதாலும் இவ்வழக்கின் சந்தேக நபர்களை எக்காரணம் கொண்டும் பிணையில் விடக்கூடாது என்று எமது வாதத்தினை சமர்ப்பித்திருந்தோம்.


உண்மையில் எமது பக்கமே நின்று மேற்சொன்னவைகளை வலியுறுத்தி பிணை வழங்குவதனை ஆட்சேபித்திருக்க வேண்டிய பொலிஸார், யாரும் எதிர்பார்த்திராத வகையில் சந்தேக நபர்களுக்கு சாதகமான முறையில் இத்தாக்குதல் சம்பவமானது ஒரு இனவாத செயற்பாடாக கருதப்பட முடியாது என்றும் குறித்த கடையில் ஏற்பட்ட பிரச்சினை தனிப்பட்டதொரு பிரச்சினை என்று கூறி நீதவானால் பிணை வழங்க முடியாத சட்டத்திற்குள் (ICCPR Act) இருந்த குற்றங்களை இன்று வாபஸ் வாங்கியிருந்தனர்.


மேலும் வெளி நிலைமைகள் அனைத்தும் சுமூகமாக இருப்பதாகவும் கூறி வழக்கமான நீதிமன்ற மரபுகளுக்கு மாறாக சந்தேக நபர்களை பிணையில் விடுமாறும் கோரியிருந்தனர். சந்தேக நபர்கள் சார்பில் குழுமியிருந்த சட்டத்தரணிகள் குழுவும் இதே வாதத்தினை முன்வைத்திருந்தனர்.


இதனை முற்றாக மறுத்த நாங்கள் இவ்விடயம் முஸ்லிம்களுக்கெதிராக திட்டமிட்டு புரியப்பட்ட இனவெறித் தாக்குதல் என்றும் இதன் தொடர்கதையாக கடந்த இரவு கூட முஸ்லிம்களுக்கு சொந்தமான பஸ்வண்டி கல்லெறிந்து சேதமாக்கப்பட்டதையும் கூறி பிணை வழங்குவதற்கு கடுமையான ஆட்சேபனைகளை முன்வைத்ததோடு பொலீசாரின் பக்கச்சார்பான இச்செயற்பாட்டினை வன்மையாக கண்டித்திருந்தோம். ஆனால் இதனைக்கூட தனிப்பட்ட பஸ் வண்டிகளுக்கிடையிலான பிரச்சினையென பொலிஸார் திசைதிருப்பி விட்டனர்.


இவ்வாறாக இன்று சுமார் 02 மணித்தியாலயங்களுக்கு மேலாக இடம்பெற்ற வாதப்பிரதிவாதங்களின் பின்னர் கடும் பிணை நிபந்தனைகளோடு கைது செய்யப்பட்ட 05 பேருக்கும் பிணை வழங்க நீதிமன்றம் தீர்மானித்ததோடு இவவழக்குகளை எதிர்வரும் 13ம் திகதிக்கு ஒத்திவைத்தததுடன் ஏனைய வழக்குகளில் சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிட்டது.

- சட்டத்தரணிகள்-
( முஹைமின் காலித்)
இன்றைய அம்பாறை நீதிமன்ற நிகழ்வுகள் ஒரு பார்வை. இன்றைய அம்பாறை நீதிமன்ற நிகழ்வுகள் ஒரு பார்வை. Reviewed by Euro Fashions on March 03, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.