இனவாத அரசியலால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் அழிவை தடுக்கத் தவறிய மைத்திரியும் ரணிலும்


-லத்தீப் பாரூக்-
தள்ளாடிக் கொண்டிருக்கும் மைத்திரி – ரணில் அரசு முஸ்லிம்களுக்கு எதிரான அமெரிக்க
இஸ்ரேல் மற்றும் இந்திய யுத்த வெறியர்களின் மையப் புள்ளியில் மாட்டிக் கொண்டு விட்டதா? 

இந்த நாட்டின் அப்பாவிகளான நிராயுதபாணிகளான முஸ்லிம்களுக்கு எதிராகவும் தமது கெட்ட நோக்கத்தை நிறைவேற்றும் திட்டத்தில் இலங்கை அரசும் சிக்கியுள்ளதா?

இனவாதிகளின் அர்த்தமற்ற தாக்குதலில் இருந்து முஸ்லிம்களைக் காப்பாற்ற உரிய நேரத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் சரியான நடவடிக்கையை எடுக்கத் தவறியதால் இந்தக் கேள்வியே இப்போது மேலோங்கி உள்ளது. இவ்வாறான தாக்குதல் ஒன்று நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கை அவர்களுக்கு ஏற்கனவே பல்வேறு தரப்பினராலும் விடுக்கப்பட்டிருந்தது.

முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இந்தக் காட்டுமிராண்டித் தனத்தை சற்று கூர்ந்து அவதானிக்கின்ற போது 1947ல் இந்திய உபகண்டம் பிளவு பட்ட பின் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக ராஷ்ட்ரிய சேவா சங் ஆர்.எஸ்.எஸ் நடத்திய அட்டூழியங்களின் தடங்களைக் காணக் கூடியதாக உள்ளது.

ஆர்.எஸ.எஸ் காடையர்கள் குறிப்பாக இந்தியாவின் வட பகுதியில் காலத்துக்கு காலம் இவ்வாறான இனவெறித் தாக்குதல்களை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தி உள்ளனர். பள்ளிவாசல்களை நாசம் செய்தல், புனித குர்ஆன் பிரதிகளை தீயிட்டு எரிப்பது, முஸ்லிம்களின் வர்த்தக மற்றும் கைத்தொழில் மையங்களை தீக்கிரையாக்குவது, ஒட்டு மொத்தமாக முஸ்லிம்களை பிச்சைக்காரர்கள் ஆக்குவது தான் அவர்களின் நோக்கம். அந்த சாயலை இங்கும் அண்மைய சம்பவங்களில் காணக் கூடியதாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ் தாக்குதல்களின் போது முஸ்லிம் பெண்கள் நடுவீதியில் நிர்வாணமாக்கப்பட்டு காட்சிமயப்படுத்தப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.
ஆனால் இவற்றோடு தொடர்புடைய குற்றவாளிகள் காங்கிரஸ் ஆட்சியின் போது கூட மிக அரிதாகவே சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர்.

இலங்கையிலும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறத் தொடங்கி விட்டனவா என்ற எண்ணமே தற்போது தோன்றியுள்ளது. கடந்த ஆட்சியில் இடம்பெற்ற இதுபோன்ற சம்பவங்களால் விரக்தி அடைந்த முஸ்லிம்களில் சுமார் 95 வீதத்துக்கும் அதிகமானவர்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமது வாக்குகளை அளித்தனர். சமூக அமைதியை குலைத்தவர்கள் உற்பட சகல குற்றவாளிகளையும் சட்டத்தின் முன் நிறுத்துவேன் என அவர் அளித்த வாக்குறுதியை நம்பியே மக்கள் அவருக்கு வாக்களித்தனர்.

ஆனால் மைத்திரி ரணில் அரசு ஸ்தாபிக்கப்பட்டது முதலே அது முஸ்லிம்களின் உணர்வுகளை துச்சமென மதித்து செயற்படத் தொடங்கியதால் அரசின் ஆரம்பத்திலேயே முஸ்லிம்களின் நம்பிக்கைகள் சிதைக்கப்பட்டு விட்டன. மைத்திரி ரணில் ஆட்சியிலும் முஸ்லிம்களுக்கு எதிராக ஆங்காங்கே வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. ஆனால் இதுவரை சம்பந்தப்பட்ட எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.

முஸ்லிம்களின் பிரச்சினைகளில் இந்த அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தத் தவறியதால் இந்த அரசாங்கத்தின் மீதான முஸ்லிம்களின் விரக்தியும் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத அமைப்பான பொது பல சேனா பித்துப் பிடித்த ஞானசா தேரர் தலைமையில் கடந்த ஆட்சியில் செழித்தோங்கியது. மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிரான கொலைகார கும்பலான அசின் விராத்து தேரர் தலைமையிலான மா பா தா இயக்கத்தின் இலங்கை கிளையாகவே பொது பல சேனாவும் செயற்படுவதாக பல இணையத் தளங்களிலும் பிரசாரங்களை அவர்கள் மேற்கொண்டனர். மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் விராத்து தேரர் பொது பல சேனாவின் அழைப்பில் இலங்கைக்கு வந்த போது ஒரு நாட்டு தலைவருக்கு வழங்கப்படுவதை விட அதிகமான பாதகாப்பும் ஏனைய வசதிகளும் அவருக்கு வழங்கப்பட்டன. மியன்மாரில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் றாக்கின் மாநிலத்தில் அண்மைக் காலத்தில் இடம்பெற்ற முஸ்லிம் இன ஒழிப்பு நடவடிக்கைகளின் பிரதான சூத்திரதாரி இவரே என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஞானசார தேரருக்கு எதிராக பொலிஸில் பல முறைப்பாடுகள் உள்ளன. இந்தக் குற்றப்பதிவுகளை எல்லாம் மீறி அவர் ஜனாதிபதியுடன் பல சந்திப்புக்களில் பங்கேற்றுள்ளார். இவ்வாறானவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவேன் என்பது தான் ஜனாதிபதி இந்த நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதி.

முஸ்லிம் சமூகத்தை இந்த விடயம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் இன்னமும் தொடரும் நிலையில் அரசாங்கம் அவற்றை கண்டும் காணாமலேயே நடந்து கொள்கின்றது.
முஸ்லிம்கள் இது சம்பந்தமாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ் மா அதிபருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினர். கடந்த வருடம் பேராசிரியர் சரத் ஜயசூரிய, காமினி வேனகொட, ஜனரஞ்சன மற்றும் தேசிய சூறா சபை பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு தூதுக்குழு ஜனாதிபதியை நேரடியாகச் சந்தித்து இவ்வாறான இனவாத தாக்குதல்களை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டது.

'அரசாங்கத்தை கவிழ்த்துவதற்கு மகிந்த ராஜபக்ஷ செய்யும் சதியே இது' என அவர் அப்போது பதில் அளித்தார். சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்பேன் என்று நம்பிக்கை ஏற்படும் வகையில் ஒரு வார்த்தையைக் கூட அவர் முன்வைக்கவில்லை.

ஜின்தோட்டை, அம்பாறை, திகண, தெல்தெனிய, பல்லேகல, அக்குரணை என பல இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் தொடர்ந்தும் கூட ஜனாதிபதி இன்னமும் அதே நிலைப்பாட்டில் இருப்பது போல் தான் தெரிகின்றது. முஸ்லிம்களுக்கு உயிர்ச் சேதம், கோடிக்கணக்கில் சொத்திழப்பு என்பன ஏற்படுத்தப்பட்டு பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ள நிலையிலும் இன்னும் பல குடும்பங்கள் அச்சத்தோடும் துயரத்தோடும் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையிலும் அரசாங்கம் இன்னமும் விழித்துக் கொள்ளாமை கவலைக்குரியதாகும்.

மறுபுறத்தில் மேலைத்தேச  சிந்தனையில் மோகம் கொண்டு மூழ்கியிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முஸ்லிம்கள் விடயத்தில் எப்போதும் போல் மந்த கதியிலேயே இருக்கின்றார். ஈராக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தலைமையிலான ஆக்கிரமிப்பு மற்றும் அட்டூழியங்களை வெளிப்படையாக ஆதரித்த உலகத் தலைவர்களுள் ஒருவர்தான் ரணில் விக்கிரமசிங்க என்பதை நாம் இவ்விடத்தில் மறந்து விடக் கூடாது. அப்போது அவர் இலங்கையின் பிரதமராக இருந்தார். அவரின் கீழ் இருந்த முஸ்லிம் பிரதிநிதிகள் இதைக் கண்டிக்க முயன்றபோது அரசில் இருந்து வெளியேறிவிட்டு அதைச் செய்யலாம் என்று உத்தரவிட்டவர்தான் ரணில் விக்கிரமசிங்க.

அம்பாறை தாக்குதல் இடம்பெற்று அடுத்த தினமே ரணில் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். திகன தாக்குதல் இடம்பெற்று ஓரிரு தினங்களில் அது ஏற்படுத்திய பதற்றமும் அச்சமும் தணிய முன்பே ஜனாதிபதி சிறிசேன வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

பொதுவாக முஸ்லிம்கள் விடயத்தில் இவர்கள் இருவரும் கொண்டுள்ள உணர்வுகள் மற்றும் மரியாதை என்பனவற்றின் வெளிப்பாடாகவே இதை நாம் பார்க்க வேண்டி உள்ளது.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுய மரியாதை என்ற வார்த்தைக்கு அர்த்தத்தையாவது தெரிந்து வைத்திருந்தால் இந்நேரம் அரசில் இருந்து வெளியேறி இருக்க வேண்டும். அவர்கள் எதிர் தரப்பில் இருந்து முஸ்லிம்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும்.

ஜனாதிபதியும பிரதமரும் இந்த நாட்டின் கதவுகளை அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் தாராளமாகத் திறந்து விட்டுள்ளனர். இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான வெறுப்பு உணர்வுகள், செயற்பாடுகள், சதித் திட்டங்கள் என எல்லா பிரிவுகளிலும் இந்த மூன்று நாடுகளும் ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டுள்ளன. இஸ்ரேலின் பூகோள நிகழ்ச்சி நிரல் இஸ்லாத்தை அழித்து இயலுமானவரைக்கும் முஸ்லிம்களைக் கொன்று குவிப்பதாகும். மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த மூன்று தசாப்த காலமாக இதைத்தான் அவர்கள் செய்து வருகின்றனர்.

இலங்கையில் உள்நாட்டு யுத்த காலத்திலும் அது முடிவடைந்த பினனரும் ராஜபக்ஷ அரசு இஸ்ரேலுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திய போது இஸ்ரேல் இங்குள்ள இனவாத சக்திகளை தூண்டிவிட்டு விரைவில் முஸ்லிம்களுக்கு எதிரான தனது சதித் திட்டத்தை அரங்கேற்றத் தொடங்கும் என்று பலரும் முன்னறிவிப்புச் செய்தனர். இது நாட்டையே சீர்குலைக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த அச்சங்கள் இப்போது உண்மையாகிக் கொண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. தமது எஜமானர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக நிறைவேற்றத் துடிக்கும் தீய கட்டளைகளை அரங்கேற்ற நாட்டின் இனவாத சக்திகள் எற்கனவே தயாராக இருந்த நிலையில் இஸ்ரேலின் காரியம் இலகுவாகி உள்ளது.

இந்தியாவில் இப்போதுள்ள நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி அரசு ஆர்.எஸ்.எஸ் இன் செல்வாக்கை கொண்டுள்ளமை சகலரும் அறிந்த ஒன்றே. 2002 பெப்பரவரியில் குஜராத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்களைக் கொன்று குவித்து அவர்களின் கோடிக்கணக்கான சொத்துக்களை அழித்த இன வன்முறையின் பிரதான சூத்திரதாரி தான் இன்றைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. இந்த அரசு பதவிக்கு வர முன்னரே இங்குள்ள் இனவாத சக்திகளோடு ஆர்.எஸ்எஸ். தொடர்புகளை ஏற்படுத்திவிட்டது. எனவே முஸ்லிம்களுக்கு எதிரான இன்றைய தாக்குதல்களின் பின்னணியில் அவர்களுக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இந்தப் பின்னணியில் முஸ்லிம்களுக்கு எதிரான உலகளாவிய பிரசாரம் இலங்கையிலும் தொடங்கப்பட்டு விட்டதா என்பதே பிரதான கேள்வியாகும்.

நாட்டின் அரசியல் பொருளாதார நிலைமை முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான நெருக்கடியை கடந்து செல்லும் நிலையில் உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யார் எல்லாம் குற்றம் புரிந்தவர்கள் என்று கூறினாரோ, யார் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தாரோ, யார் யாரெல்லாம் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படுவார்கள் என மக்களுக்கு வாக்குறுதி அளித்தாரோ அதே கூட்டத்துடன் மீண்டும் அரசியல் ரீதியாக கைகோர்ப்பதற்கான முயற்சிகளில் தற்போது இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இவ்வாறான நிலையில் இந்த நாட்டில் மீண்டும் இனவாதமும் தலைதூக்குவது கவலைக்கு உரியது மட்டும் அல்ல ஆபத்தானதும் கூட.

இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகளில் இருந்து அவர்களைக் காப்பாற்றுமாரும், அவர்களது சொத்துக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறும் கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான உருக்கமான உணர்வுபூர்வமான ஒரு வேண்டுகோளை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ் மா அதிபரிடம் முன்வைத்துள்ளார்.

ஆனால் இந்த வேண்டுகோள் கூட செவிடன் காதில் ஊதிய சங்காகவே உள்ளது.

சில மாதங்களுக்கு முன் தற்போது ஸ்கொட்லாந்தில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த விருது வென்ற ஊடகவியலாளரான தஸ்னிம் நஸீர் எழுதிய ஒரு கட்டுரையில் 'இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. பௌத்த தேசிய வாதம் போஷிக்கப் படுகின்றது. இந்த வன்முறைகள் கட்டுக்கடங்காமல் பரவுவதற்கு முன் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என எச்சரித்திருந்தார்.

ஆசியா நியுஸில் எழுதப்பட்டிருந்த மற்றொரு கட்டுரையில் 'இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. அதிகாரிகள் இந்த விடயத்தில் இன ரீதியான பக்கச்சார்பாக நடந்து கொள்கின்றனர். பௌத்த சமயத் தலைவர்களும் மௌனம் காக்கின்றனர்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. திகணயில் இனவாத தாக்குதல் ஒன்று இடம்பெறலாம் என்பதற்கான எல்லா ஆதாரங்களும் இருந்தும் கூட அரசாங்கம் தேவையான பாதுகாப்பு எற்பாடுகளைச் செய்து மக்களையும் சொத்துக்களையும் பாதுகாக்கத் தவறிவிட்டது என இது வரை வெளியாகியுள்ள பல அறிக்கைகளில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
கொழும்பு டெலிகிராப் என்ற பிரபல இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ள தகவலில் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் அல்லது இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சிலர் கண்டியில் கலகம் விளைவித்தவர்களோடு இரசகியமாக அலவாளாவிக் கொண்டிருக்கும் காணொளி தம்மிடம் இருப்பதாக தெரிவித்துள்ளது.

மனித உரிமை மத்திய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரன்ஜித் கீர்த்தி தென்னக்கோன் கலகத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டது என நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். 'கடந்த திங்கள் கிழமை ஏதோ ஒரு வகையில் அங்கு மோசமான சம்பவங்கள் இடம்பெறலாம் என்பதை அறிந்து கொண்ட சமூக மட்டத் தலைவர்கள் பொலிஸாருக்கு அதுபற்றி அறிவித்தும் பொலிஸார் எந்த முன்னேற்பாட்டு நடவடிக்கையும் எடுக்காமல் பொடுபோக்காக இருந்துள்ளனர். இவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டமைக்கு ஜனாதிபதி, பிரதம மந்திரி, மற்றும் அமைச்சர்கள் என எல்லோரும் பொறுப்புக் கூற வேண்டும். வன்முறையாளர்களை அங்கு சுதந்திரமாகச் செயற்பட விட்டமை மாபெரும் தவறாகும்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதே கருத்தோடு ஜே.வி.பி தலைவர் அனுர குமார திஸாநாயக்கவும் உடன்பட்டுள்ளார். 'அரசாங்கம் இந்த விடயத்தை முளையிலேயே கி;ள்ளி விட தவறிவிட்டது. நாடு தீ பற்றி எரிய அரசு அனுமதித்தது. காடையர்கள் பட்டப் பகலில் நடு வீதியில் இறங்கி வீடுகளுக்கும் கடைகளுக்கும் தீ வைக்க முடியும் என்றால் அரசாங்கம் என்று ஒன்று எதற்காக பதவியில் இருக்க வேண்டும்? நாட்டு மக்களின் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டியது ஒரு அரசாங்கத்தின் அடிப்படை பொறுப்பாகும். அரசாங்கம் அந்தப் பொறுப்பில் இருந்து விலகிச் சென்றுள்ளது' என அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த இனவாத செயற்பாடு காரணமாக மக்களின் உண்மையான பிரச்சினைகள் யாவும் பின் தள்ளப்பட்டுள்ளன. அவை இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் தேவை அதுவாகத் தான் இருந்தது. நிலைமைகளைக் கட்டுப்படுத்துவதற்கு பதிலாக அரசாங்கம் பிரச்சினைகளை வளரவிட்டது.
இந்த இனவாதத்துக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழ வேண்டும். யாரும் தங்களது சுயநல குறுகிய அரசியல் நோக்கத்துக்காக உங்களை தவறாக வழிநடத்த இனிமேலும் நீங்கள் அனுமதிக்க வேண்டாம். நாம் 30 வருடங்களாக யுததத்தில் இருந்துள்ளோம். இந்த யுத்தம் காரணமாக இந்த நாட்டின் ஏழைகள் யாவரும் எந்த விதமான சமய, இன, மொழி மற்றும் பேதங்கள் இன்றி துயரங்களை அனுபவித்துள்ளோம். அந்த கடந்த காலத்தை நோக்கி மீண்டும் நாங்கள் செல்லத் தேவை இல்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியாவுக்கான பிரதிப் பணிப்பாளர் தினூஷிகா திஸாநாயக்க 'சமய ரீதியான சிறுபான்மை இனத்துக்கு எதிரான வெறுப்புணர்வுகளையும் வன்முறையையும் தூண்டிவிட்டு சிலர் சட்டத்தில் இருந்து தப்பிக் கொள்ளும் நிலைமைக்கு இலங்கை அரசாங்கம் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். ஆபத்தை எதிர்நோக்கியுள்ள மக்கள் பிரிவுக்கு பாதுகாப்பை வழங்கி வன்முறைகளில் சம்பந்தப்பட்டோருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களுக்கு எதிராக இதுவரை நடவடிக்கை எடுக்கத் தவறியமை அவர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. மறுபுறத்தில் அது சிறுபான்மையினர் மத்தியில் அச்சத்தை அதிகரித்துள்ளது. இந்த நாட்டின் முஸ்லிம் மக்கள் மீது இவ்வாறான பயங்கர வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டமை இது முதற் தடவை அல்ல. நான்கு வருடங்களுக்கு முன் அளுத்கமையிலும் அதனைத் தொடர்ந்து இன்னும் பல இடங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளையே அண்மைய சம்பவங்களும் நினைவு கூறுகின்றன.' என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நடவடிக்கைகள் எடுக்கத் தாமதாகி விட்டன என்பதை பிரதம மந்திரி இப்போது ஒப்புக் கொண்டுள்ளார். இது காலம் கடந்த ஞானம். முஸ்லிம் சமூகத்துக்கு இழைக்கப்பட வேண்டிய அநியாயங்கள் யாவும் இழைக்கப்பட்டு விட்டன.

இது இலங்கை முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான ஒரு மோதலோ அல்லது இலங்கையில் இஸ்லாத்துக்கும் பௌத்தத்துக்கும் இடையிலான ஒரு மோதலோh அல்ல. வங்குரோத்து நிலைக்கு வந்துள்ள இனவாத அரசியலின் வெளிப்பாடு தான் இது. ஆனாலும் ஒரு சிறிய நம்பிக்கை உள்ளது. முன்னரைப் போல் அன்றி பௌத்த மதகுருமாரில் ஒரு பிரிவும், சிங்கள கல்விமான்களும் இந்தச் சம்பவங்களை துணிச்சலாக கண்டித்துள்ளனர். இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவ்வாறான சம்பவங்கில் இருந்து அவர்கள் வெகு தூரம் விலகி நிற்கின்றனர்.

(முற்றும்)

இனவாத அரசியலால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் அழிவை தடுக்கத் தவறிய மைத்திரியும் ரணிலும்  இனவாத அரசியலால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் அழிவை தடுக்கத் தவறிய மைத்திரியும் ரணிலும் Reviewed by Madawala News on March 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.