அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும், சகவாழ்வுடனும் வாழவேண்டும். அதுவே நான் காணும் கனவாகும்.இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும், சகவாழ்வுடனும் வாழவேண்டும்.
அதுவே நான் காணும் கனவாகும். அந்த கனவை நனவாக்க முடியாவிட்டால் இந்த நாடே அழிந்துவிடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்

வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்க்கும் வகையில் இரண்டு ஜனாதிபதி ஆணைக்குழுக்களை அமைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வும், பாடசாலைகளுக்கு விஞ்ஞான உபரகணங்கள் வழங்கும் நிகழ்வும் இன்று (03) காலை நடைபெற்றது

கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித போகொல்லாகம தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொண்டார்

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்..எம்.ஹிஸ்புல்லா, பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், அலிசாகிர் மௌலானா உட்பட பலர் கலந்துகொண்டனர்

இந்த நிகழ்வின்போது கிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையற்ற 342 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டன. அத்துடன் சுமார் 300 பாடசாலைகளுக்கு விஞ்ஞான ஆய்வுகூட உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன

இதன்போது நாடெங்கிலும் உள்ள வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு ஆறு மாத காலத்திற்குள் தீர்வுகாணப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்

கிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கையினை உடனடியாக மேற்கொள்ளுமாறும் அதற்கு தேவையான நிதிகளை வழங்குவதாகவும் இங்கு ஆளுனருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்

இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, ஒரு மாதத்திற்கு முன்பாக நான் மட்டக்களப்பு வந்தபோது கிழக்கு மாகாண பட்டதாரிகள் தமது பிரச்சினைகளை எனக்கு தெரிவித்தனர். அன்று நான் மட்டக்களப்பில் இருந்த பொலனறுவைக்கு வாகனத்தில் செல்லும்போது தொலைபேசியில் ஆளுனரை தொடர்புகொண்டு உள்ளூராட்சி தேர்தல் முடிந்த பின்னர் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்படவேண்டும் என்று கூறியிருந்தேன்

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல முழு இலங்கைக்குமான பிரச்சினையாக இருக்கின்றது. ஏழு மாதங்களுக்கு முன்பாக பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அந்த காலத்தில் தேர்தல் வந்ததன் காரணமாக நேர்முகத்தேர்வினை அனைவருக்கும் நடாத்த முடியாத சூழ்நிலையேற்பட்டது

அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு இலங்கை முழுவதிலும் உள்ள பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்குவதற்கு வெகுவிரைவில் நடவடிக்கையெடுக்கப்படும். அரசாங்கம் வழங்கும் இவ்வாறான நியமனங்களுக்கு மேலாகவே மாகாணசபைகள் நியமனங்களை வழங்குகின்றது

இலங்கையில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு எதிர்வரும் 06 மாதங்களுக்குள் அனைவருக்கும் நியமனங்களை வழங்குவேன்

நான் இங்கு வந்தபோது மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் எனக்கு ஒரு கடிதம் தந்தனர். கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவுடன் அவர்கள் நடாத்திய பேச்சுவார்த்தைகள் தொடர்பில் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

பொதுச்சேவை ஆணைக்குழுவினை சேர்ந்தவர்கள் பட்டதாரிகளுக்கு கூறிய பல கருத்துத்துகளை அதில் அவர்கள் கூறியிருந்தனர். பொதுச்சேவை ஆணைக்குழு கூறிய கருத்துகள் அவர்களுக்குரிய கருத்துகள் அல்ல. பொதுச்சேவை ஆணைக்குழு பாரிய தவிறினை புரிந்துள்ளார்கள்

மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு இவ்வாறான கருத்துகளை தெரிவிப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை. இவ்வாறான பேச்சுவார்தையினை நடாத்தியது கூட தவறான விடயமாகும். குறித்த பட்டதாரிகளின் பிரச்சினையை மாகாண ஆளுனர் அல்லாது விட்டால் குறித்த அமைச்சின் கவனத்திற்கு பொதுச்சேவை ஆணைக்குழு கொண்டு சென்றிருக்கவேண்டும். குறித்த கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினை கலைத்துவிடுமாறு ஆளுனருக்கு நான் பணிப்புரை விடுத்துள்ளேன்

கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவில் தொடர்ந்து 14 வருடங்கள் கடமையாற்றியவர்களும் உள்ளதாக நான் அறிகின்றேன். ஆணைக்குழு நியமனங்கள் மூன்று அல்லது ஐந்து வருடங்களில் மாற்றப்படவேண்டும். இது தொடர்பில் விசேட கவனத்தினை ஆளுனரிடம் தெரிவித்திருக்கின்றேன்

கிழக்கு மாகாணத்தில் நியமனங்களை வழங்கும்போது நிதிப்பற்றாக்குறை இருக்குமானால் அதனை நிவர்த்திசெய்வதற்கு நான் நடவடிக்கையெடுப்பேன். ஆசிரிய நியமனங்களுக்கு அப்பால் பல்வேறு பகுதிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்படும். பட்டதாரிகள் இந்த நாட்டின் மிகப்பெரும் சொத்தாகும். நாட்டின் அபிவிருத்திக்கு அவர்களை சரியான முறையில் நாங்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். நாட்டின் எதிர்காலத்திற்கு அவர்களின் பங்களிப்பு மிக அவசியமானது. பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்

எமது கல்வி முறையில் இருக்ககூடிய சில தவறுகள் காரணமாக பட்டதாரிகள் போராட்டங்களை நடாத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அது பட்டதாரிகளின் தவறு அல்ல. இந்த கல்வி முறையின் தவறு. தற்போது இந்த கல்விமுறையினை மாற்றுவதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது. அந்த பொறுப்பினை அரசாங்கம் இன்று நிறைவேற்றி வருகின்றது. மூன்று வருடங்களில் கல்வியில் நாங்கள் சரியான பெறுபேற்றை பெற்றுக்கொள்ளமுடியும்

வெளிநாடுகளில் தமது நாட்டுக்கு தேவையானவற்றையே பல்கலைக்கழகத்தில் கற்பிக்கின்றனர். நாட்டுக்கு தேவையானவர்களையே பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குகின்றனர். ஆனால் எமது நாட்டு அந்த நிலைக்கு இன்னும் வரவில்லை. அதற்காக அரசாங்கம் என்ற வகையில் நடவடிக்கையினை எடுத்துவருகின்றோம்

ஆசிரிய தொழில் ஏனைய தொழில்களை விட மிக முக்கயமான தொழில். ஏனைய அரச தொழிலை விட ஆசிரிய தொழில் மிக முக்கியமாக கருதப்படுகின்றது. இந்த உலகத்தில் பல்வேறு தரப்பினரையும் உருவாக்குவது இந்த ஆசிரியர்களாகும்

ஆசிரியர் தொழில் என்பது மிகவும் கௌரவமான தொழில், ஆசிரிய தொழிலில் உள்ளவர்கள் தமது வாழ்க்கை முறையினை சரியாக நடாத்திச் செல்லவேண்டும். அனைத்து பிள்ளைகளும் ஆசிரியர்களின் குணநலன்களையும், ஒழுக்கத்தினையும் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர்

கிழக்கு மாகாணத்தில் சில வேளைத்திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நான் கொழும்பு சென்றதும் இது தொடர்பில் கவனம் செலுத்துவேன். அந்த வேலைத்திட்டங்களை துரிதப்படுத்துவதற்கு நான் நடவடிக்கையெடுப்பேன்

மக்களின் பிரச்சினைகள் அனைத்தும் பொதுவானதாகவே இருக்கின்றது. மாகாண ரீதியாக அதுவேறுபடவில்லை. ஆனால் சில இடங்களில் கூடுதலாக இருக்கின்றது, சில இடங்களில் குறைவாக இருக்கின்றது. மேல்மாகாணத்தில் மற்றும் சப்ரகமுவ மாகாணத்தில் இவ்வாறான பிரச்சினைகள் குறைவான நிலையில் உள்ளபோது வடகிழக்கு பகுதியிலேயே அதிகளவான பிரச்சினைகள் இருக்கின்றன

நீண்டகால யுத்தம் காரணமாக இப்பகுதியில் அபிவிருத்திப்பணிகள் குறைவடைந்ததே இதற்கான மூலகாரணமாகும். ஏழ்மை அதிகரித்தது, இதன்காரணாக வடகிழக்கு மாகாணங்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் என்ற ரீதியில் முன்னுரிமையளிக்கின்றோம்

வடகிழக்கில் உள்ள மக்களின் இவ்வாறான பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் இரண்டு ஜனாதிபதி ஆணைக்குழுக்களை அமைக்கவுள்ளேன். அதற்கு அனைத்து அரசியல்வாதிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன்

இனங்களுக்கு மத்தியில் ஒற்றுமையினை ஏற்படுத்தவேண்டும் என்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம். தேசிய சகவாழ்வு, ஒற்றுமையினை சிலர் தவறான முறையில் தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு அவர்கள் செய்வது தேசிய அநீதியாகவே நான் பார்க்கின்றேன்

சில தினங்களுக்கு முன்னர் அம்பாறையில் நடைபெற்ற சம்பவம் மிகவும் கவலைக்குரியதாகும். மதஸ்தலங்கள் மீது தாக்குதல் நடாத்துவது மிகவும் தவறான விடயமாகும். இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களுக்கு இன மத பேதம் பாராமல் நடவடிக்கையெடுக்கவேண்டும். இல்லாது போனால் இந்த நாட்டு மக்கள் மத்தியில் ஒற்றுமையீனம் ஏற்படலாம். நாம் எல்லோரும் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும். எமது பொறுப்பினை தெரிந்து சரியாக பணியாற்றவேண்டும். நான் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றேன்

இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும் சகவாழ்வுடனும் வாழவேண்டும். அதுவே நான் காணும் கனவாகும். அந்த கனவை நனவாக்க முடியாவிட்டால் இந்த நாடே அழிந்துவிடும். எல்லா பகுதிகளிலும் கடும் போக்காளர்கள் இருக்கின்றார்கள் என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்

மார்ச் மாதம் மற்றும் செப்டெம்பர் மாதங்கள் நெருங்கும் போது இந்த நாட்டு மக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படும் நடவடிக்கைகள் ஏற்படுத்தப்படுகின்றன. அவை திட்டமிட்டே செய்யப்படுகின்றன. இவை இந்த கடும் போக்காளர்கள், தீவிரவாதிகளின் செயற்பாடுகளாகும்

மார்ச் மாதம் மற்றும் செப்டெம்பர் மாதங்களிலேயே ஜெனீவாவில் இலங்கை தொடர்பில் பேசப்படுகின்றன. இவ்வாறான மாதங்களிலேயே தீவிரவாதிகள் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். அரசாங்கத்தினை மிகவும் கஷ்டமான நிலைக்கு கொண்டுசெல்வதே அவர்களின் நோக்கமாகும்

அதனால் நாடுதான் அழிந்துபோகின்றது. இதனால் உலகத்தில் எங்களை ஏற்றுக்கொள்ளும் தன்மை குறைந்துவிடுகின்றது அல்லது இல்லாமல் போய்விடுகின்றது. எங்களுக்கு இல்லாமல்போன சர்வதேச ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்வதற்கே கடந்த மூன்று வருடமாக செயற்பட்டுவருகின்றேன். இந்த நாட்டுக்கு நல்ல பெயரை ஏற்படுத்தும் வகையிலேயே செயற்பட்டு வந்தேன்

ஆனால் சில அரசியல்வாதிகளும் இயங்களும் தேவையற்ற வகையில் எங்களை பார்த்து விமர்சிக்கின்றனர். நாட்டுக்கு தேவையானவற்றையே செய்தோம் செய்துவருகின்றோம் என்பதை எதிர்கால சரித்திரம் கூறும்

நாட்டில் உள்ள இவ்வாறான கடும் போக்காளர்கள், தீவிரவாதிகளை நாட்டு மக்கள் இனங்காண வேண்டும், தெரிந்து கொள்ளவேண்டும். நாங்கள் மிகவும் புத்திசாதுரியமாகவும் பொறுமையாகவும் செயற்படவேண்டும்

இந்த நாட்டில் உள்ள அனைத்து இன மக்களும் இந்த நாட்டை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பாடுவார்கள் என நான் நம்புகின்றேன். இந்த நாட்டில் அரசியல் செய்யும் அனைத்து தரப்பினரும் இந்த பொறுப்பினை சரியாக புரிந்துகொள்ளவேண்டும். தமது அதிகாரங்கரங்களை நாட்டுக்காக அவர்கள் தியாகம் செய்யவேண்டும். நாடு மீதும் நாட்டு மக்கள் மீதும் உண்மையான அன்பு கொண்டு செயற்படுபவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும். அந்த சமூக சமத்துவத்தினை நாங்கள் ஏற்படுத்தவேண்டும்

(மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்)
அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும், சகவாழ்வுடனும் வாழவேண்டும். அதுவே நான் காணும் கனவாகும்.  அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும், சகவாழ்வுடனும் வாழவேண்டும். அதுவே நான் காணும் கனவாகும். Reviewed by Madawala News on March 03, 2018 Rating: 5

1 comment:

  1. Mr.president just blabling. If he really wanted to build united nations then why he appoints racist and terrors in his party?? What ever he said it has no value at all. Even he wont take any step towards unity. Nice joke

    ReplyDelete

adsns