முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்களுக்கு அரசாங்கமே விளக்கமளிக்க வேண்டும்.


இனவாத தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டயீட்டை மாத்திரம்கொடுத்து திருப்திப்படுத்த முடியாது.
குற்றவாளிகளுக்கு கடுமையாக தண்டனை வாங்கிக் கொடுக்கவேண்டும். இதுதவிர, முஸ்லிம்களுக்கு எதிரான மேற்கொள்ளப்படும் விசமப் பிரசாரங்களுக்கு அரசாங்கமே விளக்கமளிக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கட்டார் அறக்கட்டளையின் சர்வதேச இஸ்லாமிய தொண்டு நிறுவனத்தின் நிதியுதவியினால் ஏறாவூர் பைத்துல் ஸகாத் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் நிர்மாணிக்கப்பட்ட 22 வீடுகள் உள்ளடங்கிய ஏறாவூர் 'மர்கஸுல் ஹிதாயா' வீட்டுத்திட்டத்தை இன்று (17) பயனாளிகளிடம் கைளித்த பின்னர், நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;

சிறுபான்மை மக்கள் தங்களது எதிர்காலம் குறித்த கேள்விகளுடன் இந்த நாட்டில் வாழ்ந்துவருகின்றனர். அச்சத்துடனும், பீதியுடனும் இருந்த முஸ்லிம்கள் அண்மையில் நடைபெற்ற சம்பவங்களினால் ஆத்திரத்தோடும், ஆவேசத்தோடும் இருக்கின்றனர். நடந்துமுடிந்த அழிவுகளுக்கு இனவாதிகள் பொறுப்புக்கூறுவதைவிட அரசாங்கம் முக்கியமாக பொறுப்புக்கூறவேண்டும்.

கண்டி, அம்பாறை போன்றவற்றில் நடைபெற்ற இனவாத தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்திக்கின்றபோது, தங்களது நஷ்டயீடு பெற்றுத்தருமாறுதான் கூறுகின்றனர். இழந்த முழுவதையும் மீளப்பெறுகின்ற வகையில் வழங்கப்படும் நஷ்டயீடு இருக்கவேண்டும் என்பதில் அரசியல் தலைமைகளாகிய நாங்கள் தீவிர கவனம் செலுத்திவருகிறோம்.

இன்று காலை பிரதமரை தொடர்புகொண்ட நான், திங்கட்கிழமை நண்பகல் வேளையில் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரையும் ஒன்று கூட்டுமாறு அவரிடம் வினயமாக கேட்டுள்ளேன். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்துவதில் மெத்தனப்போக்கை கடைப்பிடித்த இந்த அரசாங்கத்தில் நாங்கள் வெட்கித் தலைகுனிந்தவர்களாக நாங்கள் இருந்துகொண்டிருக்கிறோம்.

திங்கட்கிழமை அடையாளமாக நஷ்டயீடு கொடுக்கப்படவுள்ளது. இதனால் யாரும் திருப்தியடைப்போவதில்லை. முழுமையாக நஷ்டயீடு கொடுத்தாலும் பாதிக்கப்பட்ட மக்கள் திருப்தியடைப் போவதில்லை. இதற்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு வன்முறைகளில் ஈடுபட்டோர் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். தண்டனை வழங்கப்படாமல் எதிர்காலத்தில் இப்பிரச்சினைகள் ஏற்படாமலிருப்பதை உறுதிப்படுத்தமுடியாது.

அரசாங்கம் நஷ்டயீடு வழங்குவதை மட்டும் செய்யாமல், சம்பந்தப்பட்டவர்களை கடுமையான சட்டத்தில் கீழ் தண்டிக்க வேண்டும். குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி, பிணை வழங்கிவிட்டு சிறிதுகாலத்தில் இதை அவர்கள் மறந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இதுகுறித்து அரசாங்கத்துக்கு நாங்கள் தெளிவாக எடுத்துக்கூறியுள்ளோம்.

முஸ்லிம்கள் மத்தியில் தேவையில்லாத விசமப் பிரசாரங்களை மேற்கொள்ளும் மதவாத அமைப்புகளுக்கும் குழுக்களுக்கும் உண்மையை தெளிவுபடுத்தும் பணியை அரசாங்கமே செய்யவேண்டும். இதை முஸ்லிம் சமூகம் எவ்வளவுதான் சொன்னாலும், அதைக் கேட்டு யதார்த்தத்தை புரிந்துகொள்ள முடியாத இனவாத கும்பல்களுடன்தான் நாங்கள் பல வருடங்களாக போராடிவருகிறோம்.

கொத்துரொட்டியில் கருத்தடை மாத்திரை கலந்துகொடுத்‌ததாக பரப்பப்பட்ட வதந்திக்கு அரசாங்கம் இப்போதுதான் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. 10 வருடங்களுக்கு மேலாக சொல்லப்படுவரும் இந்த குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் இப்போதுதான் பதிலளித்திருக்கிறது. இதுபோல முஸ்லிம்களுக்கு எதிராக பல விசமப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை எல்லாவற்றுக்கும் அரசாங்கமே விளக்கம் கொடுக்கவேண்டும் என்றார்.

ஏறாவூர் பைத்துல் ஸகாத் நிறுவனத்தின் தலைவர் எம்.எஸ். பஷீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலிஸாஹிர் மெளலானா, கட்டார் அறக்கட்டளை நிறுவனத்தின் இலங்கை நாட்டுக்கான முகாமையாளர் காலித் ஹவ்தான், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுபைர், இஸ்லாமிக் ரிலீப் கமிட்டி தலைவர் மிஹ்லார், ஸலாம் கலாசாலையின் தலைவர் எஸ்.ஏ. நளீம் (நளீமி) உள்ளிட்டோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்களுக்கு அரசாங்கமே விளக்கமளிக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்களுக்கு அரசாங்கமே விளக்கமளிக்க வேண்டும். Reviewed by Madawala News on March 17, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.